Published:Updated:

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்.. மைக்கைப் பிடுங்க ஓடிய ஓவைசி.. பெங்களூரு போராட்டத்தில் நடந்தது என்ன?

மேடையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய மாணவி
மேடையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய மாணவி

பெங்களூரில் நடந்த போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பெங்களுரில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. ஹைதராபாத் எம்.பி அசாசுதீன் ஓவைசி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பெங்களூரில் சமூக செயற்பாட்டாளராக அறியப்பட்ட மாணவி அமுல்யா லியோனோ நாரகோவும் (வயது 19) போராட்டத்தில் பங்கேற்றார். போலீஸார் ஏராளமானோர் போராட்டக்களத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்ட மேடையில், மாணவி அமுல்யாவுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. தன் பேச்சின்போது திடீரென்று `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று அந்த மாணவி மூன்று முறை கோஷம் எழுப்ப மேடையில் இருந்தவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கைதான அமுல்யா
கைதான அமுல்யா

மேடையிலிருந்து வெளியே கிளம்பிய அசாதுதீன் ஓவைசியும் மாணவியின் முழக்கத்தைக் கேட்டு பதறிப் போனார். மாணவியை நோக்கி வேகமாக ஓடி வந்த ஓவைசி, அவரின் கையில் இருந்த மைக்கை கைப்பற்ற முயன்றார். மாணவியைப் பார்த்து ஏதோ சொல்லவும் செய்தார். பின்னர், ஒரு கட்டத்தில் மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அமுல்யாவிடம் இருந்து மைக்கைப் பிடுங்கினர். பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போட்ட மாணவி அமுல்யாவை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

என்.ஆர்.சி சட்டத்தால் 8 கோடி பேர் குடியுரிமையை இழப்பார்கள்
ஹைதரபாத் எம்.பி ஓவைசி

பிறகு இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, ``இந்தப் போராட்டத்தில் நடந்த விஷயங்கள் எனக்கு வருத்தமளிக்கின்றன. பாகிஸ்தானில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு முறை நான் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் ஒரு போதும் இந்தியாவை விட்டுக் கொடுத்துப் பேசவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த முன்னாள் எம்.பி கீர்த்தி ஆசாத் கூட என்னைப் பாராட்டினார்.

நாம் பாரத நாட்டில் வாழ்கிறோம். இது நமது நாடு. இந்த மண்ணிலிருந்துகொண்டு இன்னொரு நாட்டை ஆதரித்து கோஷமிடுபவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் முஸ்லிம் மக்களை நெருங்காதீர்கள்'' என்று எச்சரித்தார்

1969 முதல் 2020 வரை - இந்தியாவுக்கு வந்த 6 அமெரிக்க அதிபர்கள்! #VikatanInfographics

மேலும் அவர் பேசுகையில், ``என்.பி.ஆர். சட்டம் ஏழைகளுக்கு எதிரானது. பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக ஏழைகளிடம் இருந்து வழக்கறிஞர்கள் பணம் பறிக்கின்றனர். திப்பு சுல்தான் நாட்டுக்காக தன் பிள்ளைகளைக் கூட தியாகம் செய்தவர். திப்பு ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். என்.ஆர். சி சட்டத்தால் 8 கோடி பேர் குடியுரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு