Published:Updated:

`படையெடுக்கும் கேரள கெமிக்கல் கழிவுகள்; செத்து மடிந்த ஆடுகள்'- ராதாபுரம் அதிர்ச்சி!

தொடர்ந்து நடக்கும் இந்த அத்துமீறல் விவசாயிகளைக் கவலையடைய வைத்துள்ளது.

செத்து மடியும் ஆடுகள்
செத்து மடியும் ஆடுகள்

கேரளாவில் இருந்து எல்லைப் பகுதியில் இருக்கும் சோதனைச் சாவடிகளைக் கடந்து மருத்துவ கழிவு பொருள்கள், இறைச்சி மற்றும் மீன் கழிவுகள். கெமிக்கல் கழிவுகள் ஆகியவை கடத்தி வரப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்தக் கழிவுப் பொருள்களைத் தமிழகத்தின் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகின்றன. 

கொட்டப்பட்டுக் கிடக்கும் கெமிக்கல் கழிவுகள்
கொட்டப்பட்டுக் கிடக்கும் கெமிக்கல் கழிவுகள்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதிக்கு கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கோழிக் கழிவுகள் கொண்ட இரு கண்டெய்னர் லாரிகளை இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சிறைபிடித்தார்கள். பின்னர், அந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவற்றில் இருந்த கழிவுகள் அதே பகுதியில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ராதாபுரம் பகுதியில் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்ட அவலம் நடந்திருக்கிறது. ராதாபுரம் அருகே உள்ள வள்ளார்குளம் காட்டுப்பகுதியில், கேரளாவிலிருந்து மினி லாரிகளில் கொண்டுவரப்பட்ட கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன.

உயிரிழந்த ஆடு
உயிரிழந்த ஆடு

அந்தப் பகுதி மேய்ச்சல் நிலம் என்பதால் விவசாயிகள் தங்களுடைய ஆடு, மாடுகளை அங்கு மேய்சலுக்காக விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அங்கு கொட்டப்பட்டுக் கிடந்த கெமிக்கல் கழிவுகளைச் சாப்பிட்ட பண்ணையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மேய்ச்சல் நிலத்தில் கொட்டப்பட்ட கெமிக்கலைச் சாப்பிட்ட மேலும் 10 ஆடுகள் நடக்க முடியாமலும் உணவு உண்ண முடியாமலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் தொடர்ந்து கேரளாவின் கழிவுப் பொருள்கள் கொட்டப்படும் சம்பவத்தால் விவசாயிகள் கவலையும் வேதனையும் அடைந்திருக்கிறார்கள்.

மேய்க்கப்படும் ஆடுகள்
மேய்க்கப்படும் ஆடுகள்

இது பற்றிப் பேசிய அப்பகுதி விவசாயிகள், ``இந்த ஆண்டு பருவமழை பெய்திருப்பதால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் வளர்ந்து கிடக்கின்றன. அதனால் ஆடு, மாடுகளுக்குத் தட்டுப்பாடில்லாமல் உணவு கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால், கேரளாவின் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி வைப்பதால் அவற்றைச் சாப்பிட்டு எங்களின் கால்நடைகள் உயிரிழப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளின் டிரைவர்கள், அங்கு கொடுக்கப்படும் சில ஆயிரம் ரூபாய்க்காக கழிவுப் பொருள்களை ஏற்றி வருகிறார்கள். எல்லையில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் சில நூறு ரூபாய்களைக் கொடுத்துவிட்டு தாராளமாகத் தமிழக எல்லைக்குள் கோண்டுவந்துவிடுகிறார்கள்.  

கேரளாவிலிருந்து கழிவுப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகளை பறிமுதல் செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள்

இத்தகைய கழிவுப் பொருள்களைக் கொண்டு வந்த பின்னர் பிடிபட்டாலும் அவற்றைத் திருப்பி அனுப்புவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. அதனால் கழிவுகளை இங்கேயே புதைக்க வேண்டியிருக்கிறது. கேரளாவில் இருந்து கழிவுப் பொருள்களைக் கொண்டு வந்தால் அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அத்தகைய செயலைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்கிறார்கள் கவலையுடன்.