Published:Updated:

`ரேஷன் கடைல அரிசி போடல; புகார் சொல்ல போன் பண்ணேன்!’ - கரூர் பெண் அதிகாரி பேச்சால் கலங்கிய மனிதர்

ரேஷன் கடை முன்பு சந்திரசேகர்
ரேஷன் கடை முன்பு சந்திரசேகர்

கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை எண் - 2 ல் இன்று ரேஷன் பொருள்கள் வாங்கச் சென்ற, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`ரேஷன் கடையில் அரிசி போடலை' என்று புகார் கூறியவரை, கரூர் மாவட்ட வழங்கல் பெண் அதிகாரி ஒருவர், தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராயனூர் ரேஷன் கடை
ராயனூர் ரேஷன் கடை

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் பிரச்னையால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி, மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

`கொரோனா சிறப்பு அதிகாரிகள்!' - பார் உரிமையாளரிடம் ரூ.20,000, 247 மதுப்பாட்டில்களைப் பறித்த நபர்கள்

ரேஷன் கடைகளில் மக்கள் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டப் பொருள்களை வாங்க கூட்டமாகக் குவிந்துவிடக்கூடாது என்பதற்காக, வெவ்வேறு கலர்களில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு, ஒரு நாளைக்கு ஒரு கலர் டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டும், இடைவெளிவிட்டு ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராயனூர் ரேஷன் கடை
ராயனூர் ரேஷன் கடை

இந்தச் சூழலில், கொரோனா பாதிப்பால் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கு காலத்திலும், சில ரேஷன் கடை ஊழியர்கள் பொருள்களைக் கடத்தி வெளியில் விற்றுவிட்டு, மக்களிடம் கைவிரிப்பது தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை எண் - 2 ல் இன்று ரேஷன் பொருள்கள் வாங்கச் சென்ற, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்கு அந்த ஆடியோ கிடைத்தது. அதில், சந்திசேகரை பெண் அதிகாரி தகாத வார்த்தைகள் திட்டுவது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து, சந்திரசேகரிடம் பேசினோம். ``நான் கொரோனா ஊரடங்கு உத்தரவைக் குடும்பத்தோடு சரியாகக் கடைப்பிடித்து வருகிறேன். இந்நிலையில், எங்களுக்கு வெள்ளை கலர் டோக்கனை வழங்கி, '2 ஆம் நம்பர் ரேஷன் கடையில் இன்று காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை ரேஷன் பொருள்களை வாங்கிக்கலாம்'னு சொன்னாங்க. அதை நம்பி, வெள்ளை டோக்கன் வச்சுருந்த நான் பொருள்களை வாங்கப் போனேன். இடைவெளிவிட்டு நின்னு ரேஷன் பொருள்களை வாங்கப் போனேன். ஆனால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், மக்களிடம், 'அரிசி இல்லை'ன்னே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதனால், மக்கள் எல்லோரும் புலம்பிக்கிட்டே போனாங்க. எனக்கும் அதையே சொன்னாங்க. விசாரிச்சப்ப, ஊழியர்கள் ரேஷன் அரிசியைப் பதுக்கியது தெரியவந்துச்சு. உடனே, அங்கிருந்து வட்ட வழங்கல் அலுவலர் சுமதிக்கு போன் செய்து புகார் செய்தேன்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

அவர் உடனே, 'என்னன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்'னு போனை வச்சுட்டார். விடாத நான், மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகாவிடம் போன் மூலம் புகார் தெரிவித்தேன். 'இந்த இக்கட்டான நேரத்தில் மக்களை இப்படி இம்சிக்கலாமா?'னு நான் நாகரிகமாகத்தான் கேட்டேன். எனக்கு 50 வயது ஆவுது, நில புரோக்கராக இருக்கிறேன். ஆனா அந்தம்மா எடுத்த எடுப்பிலேயே, கோபமா பேசினாங்க. நான், 'ஏன் இப்படி பேசுறீங்க?'னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'பொறுக்கி, போனை வையடா'னு தகாத வார்த்தைகளால் பேசிட்டு, போனை வச்சுட்டார். அதுக்குள்ள விசயம் தெரிஞ்சு, மாவட்ட நிர்வாகம் தேவையான அரிசியைக் கொண்டு வந்து இறக்கிட்டாங்க. ஆனா, என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டிய அந்தம்மாவையும், இங்கே அரிசியைப் பதுக்கிய ஊழியர்களையும் நான் சும்மா விடப்போவதில்லை" என்றார், ஆக்ரோஷமாக!.

குற்றச்சாட்டுகள் குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகாவிடம் பேச முயன்றோம். போனை எடுத்த அவரது உதவியாளர், ``மேடம் மீட்டிங்கில் இருக்காங்க. அந்த நபர்தான் மேடத்தை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆனால், மேடம் மோசமா திட்டலை. ஷெட்டியூல்படி ராயனூர் ரேஷன் கடை எண் - 2 ல் இன்று ரேஷன் பொருள்களை வெள்ளை டோக்கன்காரங்களுக்கு வழங்கணும்ங்கிறது உண்மைதான்.

ராயனூர் ரேஷன் கடை
ராயனூர் ரேஷன் கடை

அரிசி லோடு வருவதில் கொஞ்சம் தாமதமாயிட்டு. அதுக்குள்ள சந்திரசேகர், மேடத்திடம் வம்பிழுத்து, இதை இஷ்ஷூவாக்கிட்டார். மத்தபடி, அங்கே எதுவும் முறைகேடா நடக்கவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு