Published:Updated:

``சீமானின் தாயாரைப் பற்றிப் பேசியதால்தான், நான் விஜயலட்சுமியை மிரட்டினேன்!''- ஹரி நாடார் பேட்டி

ஹரி நாடார் - சீமான்
ஹரி நாடார் - சீமான்

நடிகை விஜயலட்சுமி - சீமான் இடையிலான பிரச்னையில், தற்போது ஹரி நாடாரும் சேர்ந்திருக்கிறார். இதுகுறித்துப் பேசுகிற ஹரி நாடார், ''கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சீமான், என் சமூகத்தைச் சேர்ந்தவர்; என் ரத்தம்'' என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

வீடியோ வழியே, ஒருவரையொருவர் அவமரியாதையாகத் திட்டி அடித்துக்கொள்வதுதான் 'கொரோனா கால டிரெண்ட்!' இந்த வரிசையில், அண்மையில் பிரபலமாகியிருப்பது நடிகை விஜயலட்சுமி - ஹரி நாடார் இடையிலான வார்த்தை மோதல்களும் அதைத்தொடர்ந்த விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சியும்!

'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்' என நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். இந்நிலையில், அண்மையில் சீமான் குறித்து விஜயலட்சுமி வெளியிட்ட ஒரு வீடியோவுக்கு எதிர்ப்பாக 'பனங்காட்டுப் படை கட்சி'யின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் 'மிரட்டல் வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹரி நாடார் - விஜயலட்சுமி - சீமான்
ஹரி நாடார் - விஜயலட்சுமி - சீமான்

இதையடுத்து, நேற்று திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயலட்சுமி, 'என் தற்கொலை முடிவுக்கு சீமானும் ஹரி நாடாரும்தான் காரணம்' எனக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையிலான மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயலட்சுமி, மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஹரி நாடாரிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்...

''நடிகை விஜயலட்சுமி - சீமான் இடையிலான தனிப்பட்ட பிரச்னையில், ஹரி நாடாருக்கு ஏன் இந்த ஆவேசம்?''

''சீமான் அண்ணனைப் பற்றி நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து பல அவதூறு வீடியோக்களை வெளியிட்டுத்தான் வருகிறார். நாமும் அதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு சீமானின் தாயாரைப் பற்றி அவதூறாகப் பேசி அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த பிறகுதான், இந்தப் பிரச்னை குறித்து நானும் பேச வேண்டியதாகிவிட்டது. என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி அவதூறாகப் பேச விஜயலட்சுமி யார்?

ஹரி நாடார்
ஹரி நாடார்

முதலில் இதுவிஷயமாகப் பேசுவதற்கு, விஜயலட்சுமியின் செல்பேசியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன்... ஆனால், என் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே வேறு வழியின்றி என் கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக நானும் ஆவேசமாகப் பேசி வீடியோ வெளியிட்டேன்.''

''சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழராய் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சீமானை, குறிப்பிட்ட சாதியாளராக நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்களே..?''

''சீமான் அண்ணனின் கொள்கை - லட்சியங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், கட்சிக்கு அப்பாற்பட்டு அவர் என் சமுதாயம்... என் ரத்தம்!

சீமான்
சீமான்

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னையை ஏன் விஜயலட்சுமி பொதுவெளியில் வீடியோவாகப் பதிவிட்டு அவதூறு கிளப்பிவருகிறார்? அதுவும் சீமானின் தாயாரைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசியிருக்கிறார். சாதி - மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என சீமான் அண்ணன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், சீமானின் தாயாரை விஜயலட்சுமி அவமானகரமாகப் பேசியதை, எங்கள் சமூகப் பெண்மணியை அவமதித்ததாகவே கருதுகிறோம். அதனாலேயே நானும் விஜயலட்சுமியை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்புகிறேன். இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?''

''நடிகை விஜயலட்சுமி அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டும் நீங்களே, 'விஜயலட்சுமி நாக்கை அறுப்பேன்' என்று பேசியிருப்பது வன்முறை இல்லையா?''

''நீங்கள் கேட்பது நியாயமான கேள்வி. அதனால்தான் அந்த வீடியோவிலேயே நான் என்ன சொல்கிறேன்... 'இப்படித் தரக்குறைவாகப் பேசுவதை நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால்...' என்று சொல்லித்தான் 'நாக்கை அறுப்பேன்' என எச்சரிக்கை செய்கிறேன். நடிகை விஜயலட்சுமி, சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு மனிதர். அப்படிப்பட்ட ஒருவர் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணியை - தாயாரைப் பற்றி பொதுவெளியில் அவதூறாகப் பேசலாமா?

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

நான் வீடியோ வெளியிட்ட பிறகு, என் பெயரைக் குறிப்பிட்டே விஜயலட்சுமி பல வீடியோக்களை வெளியிட்டுவிட்டார். உச்சக்கட்டமாகத் தற்கொலை முயற்சிக்கும் போய்விட்டார். எங்கள் சமூகப் பெண்மணியை அவர் அவதூறாகப் பேசினால், பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று எச்சரிக்கத்தான் 'நாக்கை அறுப்பேன்' என்றேன். இனிமேல், அவர் அப்படிப் பேசவில்லையெனில், நான் ஏன் நாக்கை அறுக்கப்போகிறேன்?''

''ஒரு பெண்ணுக்கு எதிராக இவ்வளவு ஆவேசம் காட்டுகிற நீங்கள், உங்கள் சமூகத்துக்கு எதிராகப் செயல்பட்டவர்கள் மீது இத்தனை ஆவேசம் காட்டியிருக்கிறீர்களா?''

''நிச்சயமாக... விஜயலட்சுமி தன்னுடைய பிரச்னைக்குத் தீர்வு தேடி முறையாக சட்ட ரீதியிலான முயற்சிகளை எடுத்திருந்தால், நாங்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவித்திருக்க மாட்டோம். மாறாக, சீமான் தாயாரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதால்தான் நானும் கண்டித்து வீடியோ வெளியிட்டேன்.

ஹரி நாடார்
ஹரி நாடார்

ஏற்கெனவே பெருந்தலைவர் காமராஜரின் தாயாரைப் பற்றி அவமரியாதையாகப் பேசிய சமூக விரோதிகளைக் கண்டித்தும் என் கண்டனப் பதிவுகளை வீடியோவாக வெளியிட்டிருக்கிறேன். எனவே, எங்கள் சமுதாயம் என்பதையும்தாண்டி, பொதுவாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களின்போது எங்கள் அமைப்பின் சார்பில் மிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறோம். அதுவும் பாதிக்கப்பட்டது எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், கேட்கவா வேண்டும்... நிச்சயமாக களத்தில் இறங்கிப் போராடுவோம்!''

சென்னை: தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி! - மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்

''நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களைப் பாராட்டினார்களாமே... என்ன சொல்லிப் பாராட்டினார்கள்?''

''நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிறைய பேர் என்னைப் பாராட்டினார்கள். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியைச் நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள்.

ஹரி நாடார்
ஹரி நாடார்

'விஜயலட்சுமி விவகாரத்தைப் பெரிதுபடுத்தாதீர்கள்... விட்டுவிடுங்கள் என்று கூறி, எங்கள் கைகளையும் வாயையும் சீமான் அண்ணன் கட்டிப்போட்டுவிட்டார். ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் அண்ணனுக்காகப் பேசியது, ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே...' என்று உணர்ச்சிவசப்பட்டார்கள்'' என்றார்.

``இனி சினிமாவில் நடிப்பேனா எனத் தெரியாது!" -  `அண்ணாத்த' சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா ரஜினி?!
அடுத்த கட்டுரைக்கு