Published:Updated:

விமானக் கடத்தல்: அமெரிக்க அரசைத் தோற்கடித்த மாயாவி - மர்மங்களின் கதை | பகுதி-7

மர்மங்களின் கதை

கூப்பரை பற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லாத நிலையில், பல வகை யூகங்கள் உருவாகின. இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவருடன் இணைந்துகொண்டு, விமான நிறுவனத்துக்கு எதிராகவே கூப்பர் விமானத்தைக் கடத்தியதாக ஒரு யூகம்.

விமானக் கடத்தல்: அமெரிக்க அரசைத் தோற்கடித்த மாயாவி - மர்மங்களின் கதை | பகுதி-7

கூப்பரை பற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லாத நிலையில், பல வகை யூகங்கள் உருவாகின. இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவருடன் இணைந்துகொண்டு, விமான நிறுவனத்துக்கு எதிராகவே கூப்பர் விமானத்தைக் கடத்தியதாக ஒரு யூகம்.

Published:Updated:
மர்மங்களின் கதை

- ஆர்.எஸ்.ஜெ

நவம்பர் 24, 1971.

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் விமான நிலையம், வழக்கமான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. நிகழப்போகும் சம்பவம் தெரியாமல் விமானங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. நார்த்வெஸ்ட் விமான நிறுவனத்தின் கவுன்ட்டரில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். தனக்கான நேரம் வந்ததும், கவுன்ட்டரில் இருந்த நபரிடம் தன்னை `டேன் கூப்பர்’ என அறிமுகப்படுத்திக்கொண்டான். சியாட்டில் செல்வதற்கு டிக்கெட் கேட்டான். நிரம்பிய சீட்டுகளைப் பரிசோதித்துவிட்டு, கவுன்ட்டரில் இருந்த நபரும் அவனுக்கு ஒரு டிக்கெட்டைக் கொடுத்தார். டிக்கெட்டுக்கான தொகையை ரொக்கமாகக் கொடுத்துப் பெற்றுக்கொண்டான். பயணிகள் அமர்ந்ததும், விமானம் வானேற நகர்ந்தது. கூட்டம் இல்லை. பல இருக்கைகள் காலியாக இருந்தன. ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகன்போல டிப் டாப்பாக அமர்ந்திருந்தான் டேன் கூப்பர். பணிப்பெண்ணை அழைத்து கொஞ்சம் மதுவும் சோடாவும் ஆர்டர் செய்தான். வயது நாற்பதுகளில் இருக்கலாம். கோட் சூட்டுக்கு மேலே மெல்லிய மழை கோட் போட்டிருந்தான்.

விமானம்
விமானம்
Representational Image

விமானம் வானேறியது...

டேன் கூப்பர் மீண்டும் பணிப்பெண்ணை அழைத்தான். இந்த முறை அவன் மது கேட்க அழைக்கவில்லை. ஃப்ளாரன்ஸ் ஷேஃப்னர் என்ற பணிப்பெண் அவனருகே வந்தாள். அவள் கையில் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுத்தான் டேன் கூப்பர். யாரோ ஒரு நண்பருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்கிறார் போலும் என்றே நினைத்திருக்கிறாள். துண்டுச்சீட்டை வாங்கி தன் கைப்பைக்குள் போட்டிருக்கிறாள்.

ரகசியம் சொல்வதைப்போல ஷேஃப்னர் அருகே மெல்லச் சாய்ந்து, கிசுகிசுத்தான். ``நான் வெடிகுண்டுவெச்சிருக்கேன். அந்த துண்டுச்சீட்டைப் பிரிச்சுப் படிங்க.’’

`நான் வெடிகுண்டுவெச்சிருக்கேன்.’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஷேஃப்னர் வெலவெலத்துப்போனாள். சீட்டைப் பிரித்துப் படித்தாள். அவன் சொன்ன விஷயத்தைத்தான் துண்டுச்சீட்டும் சொன்னது. நம்புவதா, வேண்டாமா என்று தெரியவில்லை. அவளின் குழப்பத்தைக் கண்டுகொண்ட கூப்பர், அவளைத் தன்னருகே அமரச் சொன்னான். அவளும் எதுவும் பேசாமல் அருகே அமர்ந்தாள். கூப்பர் தன் கையில்வைத்திருந்த சூட்கேஸை வெடிகுண்டு தெரியும் அளவுக்குத் திறந்தான். உள்ளே, எட்டுச் சிறு உருளைகள் சிவப்பு நிறத்தில் இருந்தன. அவற்றுடன் வொயர்கள் இணைக்கப்பட்டிருந்தன. வொயர்களுக்கு ஒரு பேட்டரி உயிர் கொடுத்துக்கொண்டிருந்தது.

``2 லட்சம் டாலர் ரொக்கமா, சில்லறை நோட்டுகளா வேணும். கூடவே நாலு பாராசூட் கொடுக்கணும். விமானம் தொடர்ந்து பறப்பதற்கான எரிபொருள் சியாட்டில் விமான நிலையத்துல இருக்கணும்.”

கூப்பர் முன்வைத்த நிபந்தனைகளைக்கொண்டு என்ன நடக்கலாம் என யூகிக்க முனைந்தாள் ஷேஃப்னர்.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

புன்னகை மறைந்து பரபரப்பு தொற்றிய முகத்துடன் சென்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் விமான ஓட்டிகளிடம் விவரித்தாள் ஷேஃப்னர். சூழலைத் தெரிந்துகொள்ள அறையைவிட்டு வெளியே வந்தாள். கூப்பர் எதுவுமே நடக்காததுபோல், ஒய்யாரமாக கூலிங் கிளாஸ் அணிந்து அமர்ந்திருந்தான்.

கீழே விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பரபரப்பாக விவாதித்துக்கொண்டிருந்தனர். முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது. பணயத் தொகைக்கு நார்த் வெஸ்ட் விமான நிறுவனம் தொடர்புகொள்ளப்பட்டது.

நிறுவனத்தின் இயக்குநர் டொனால்ட் நைரொப்புக்கும் தயக்கம் எதுவும் இருக்கவில்லை. பயணிகள் காப்பாற்றப்பட வேண்டுமென்பதும், முக்கியமாக விமான நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக் கூடாதென்பதுமே அவருக்கு முக்கியக் கவலையாக இருந்தது. பணம் ஒரு பொருட்டாகவே இல்லை. டேன் கூப்பர் விரும்பியபடி 2 லட்சம் டாலர் பணம் சில்லறை நோட்டுகளில் தயாரானது.

எல்லாம் தயார்… அடுத்து?

டேன் கூப்பர் கேட்ட எரிபொருள் தயாராகி ஓடுதளத்துக்கு வந்து நிறுத்தப்பட்டது. பணமும் தயார். அடுத்து என்ன? அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. தெரிந்தவன், விமானத்தில் பெரும் நிதானத்துடன் அமர்ந்திருந்தான்.

விமான ஓட்டிகளுக்கு நிபந்தனைகள் தயாராகிவிட்ட தகவல் சொல்லப்பட்டது. ஷேஃப்னர் டேன், கூப்பரின் அருகே வந்து காதில் கிசுகிசுத்தாள். இயந்திரக் கோளாறு சரியாகி சியாட்டிலை நோக்கி விமானம் செல்வதாக விமானத்துக்குள் அறிவிக்கப்பட்டது. மக்கள் பெருமூச்சுவிட்டார்கள். கூப்பர் புன்னகைத்தான். குழப்பங்களைத் தாங்கியபடி விமானம் சியாட்டிலை நோக்கி திசை திரும்பியது.

நிபந்தனைகளில் ஒரு சிறு குளறுபடி ஏற்பட்டது. தெரிந்தே செய்யப்பட்ட குளறுபடிதான். கூப்பர் கேட்டிருந்த பாராசூட்களுக்கு மிலிட்டரி பாராசூட்களைத் தயார் செய்திருந்தனர் அதிகாரிகள். கூப்பர் அவற்றை வேண்டாம் என்றான். சிறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சாதாரணர்கள் பயன்படுத்தும் பாராசூட்கள் கொண்டுவரப்பட்டன.

மாலை 5:39 மணி. விமானம் சியாட்டிலில் தரையிறங்கியது. வழக்கமான இடத்தில் விமானம் நிற்கவில்லை. பயணிகளுக்கு மெல்ல நிலவரம் புரியத் தொடங்கியது. பணிப்பெண்கள் கூப்பரிடம் வந்து பேசுவதும் செல்வதுமாக இருப்பதை கவனித்தனர். தனியான இடத்தில் விமானம் நிறுத்தப்பட வேண்டும் என்றான் கூப்பர். துப்பாக்கியில் சுடும் திட்டங்கள் இருக்கலாம் என்பதால், ஜன்னல்கள் அடைக்கப்பட வேண்டுமெனச் சொன்னான். அடைக்கப்பட்டன. பணிப்பெண்கள் பயணிகள் ஒவ்வொருவரிடமும் சூழலை விளக்கிக் கூறினர்.

நார்த்வெஸ்ட் விமான நிறுவனத்தின் மேலாளர் சாதாரண உடையில் விமானத்தை நோக்கி வந்தார். அவர் கையில் பணமும் பாராசூட்டுகளும் இருந்தன. விமானத்தின் சரக்குப் பகுதி கதவு வழியாக உள்ளே கொடுக்கப்பட்டது. அடுத்து ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தான் கூப்பர். `எல்லாப் பயணிகளும் பணிப்பெண்களும் வெளியேறலாம்’ என்றான்.

விமானத்தை நிம்மதி நிறைத்தது. உயிர் தப்பியது என எல்லாரும் இறங்கினார்கள். விமானம் காலி ஆன பின் கதவு மூடப்பட்டது. விமான ஓட்டிகள் மற்றும் குழுவினரை அழைத்து அடுத்து பறக்கப்போகும் வழி மற்றும் செல்லப்போகும் இடம் குறித்து ஆலோசித்தான். விமானத்துக்கான எரிபொருள் நிரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. வெளியே இருந்த புலனாய்வு அதிகாரிகள் உள்ளே என்ன நடக்கிறது எனத் தெரியாமல் காத்திருந்தனர்.

மெக்ஸிகோ பயணம்

`மெக்ஸிகோவை நோக்கி விமானம் செல்ல வேண்டும்’ என்றான் கூப்பர். மிகக் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும். பத்தாயிரம் அடி உயரத்தில் விமானம் இருக்க வேண்டும். விமான ஓட்டிகள் முரண்பட்டனர். அத்தனை உயரத்தில் குறைவான வேகத்தில் செல்வதென்றால் எரிபொருள் தீர்ந்துவிடும் என்றார்கள். மெக்ஸிகோவுக்குள் நுழையும் முன் எப்படியும் மீண்டும் எரிபொருள் நிரப்ப வேண்டியதிருக்கும் என்றார்கள். தீவிர ஆலோசனைக்குப் பிறகு நெவேடா நகரத்தில் மீண்டும் நின்று எரிபொருள் நிரப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டது. எல்லா விவரங்களும் விமான நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டன. ஒரு விஷயத்துக்கு மட்டும் நிறுவனம் மறுத்தது.

விமானத்துக்குச் சரக்கு ஏற்றப்படும் வழி, விமானம் புறப்பட்டு வானேறிய பிறகும் திறந்திருக்க வேண்டுமென கூப்பர் சொன்னான். அவனுடைய திட்டம் ஓரளவுக்குப் புரியத் தொடங்கியது. சரக்குப் பகுதியின் படிகள் இறக்கிவிட்டபடி வானேறுவது விமானத்தின் பாதுகாப்புக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்றது நிறுவனம். கூப்பர் எதுவும் வாதாடவில்லை. சரக்குப் பகுதியின் கதவு திறந்திருக்கும் வரை போதும் என நினைத்துக்கொண்டான்.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ

இரவு 7:40 மணிக்கு விமானம் மீண்டும் வானேறியது. மொத்தமாக விமானத்தில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். கூப்பர், இரண்டு விமான ஓட்டிகள், ஒரு விமானப் பொறியாளர், ஓர் உதவியாளர்.

சரக்குப்பகுதியின் கதவு திறந்திருக்கிறது. கூப்பரிடம் பாராசூட்கள் இருக்கின்றன. ஆகவே, பணத்துடன் விமானத்திலிருந்து பாராசூட்டின் உதவியோடு கூப்பர் குதிக்கப் போகிறான். திட்டம் தெளிவாக இருந்தது. அந்தத் திட்டத்தை எப்படி எதிர்கொள்வதென அதிகாரிகள் ஒரு திட்டம் வகுத்தனர். உடனடியாக திட்டம் செயல்படுத்தப்பட்டது. சியாட்டில் விமான நிலையத்துக்கு அருகே இருந்த ராணுவ தளத்திலிருந்து இரண்டு போர் விமானங்கள் பறந்து வானடைந்தன.

கூப்பர் செல்லும் போயிங் விமானத்துக்கு மேலாக ஒரு போர் விமானம், கீழாக ஒரு போர் விமானம். கூப்பர் எப்பப்டி பார்த்தாலும் தெரியாத வகையில் போயிங் விமானத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன போர் விமானங்கள். அவையல்லாமல் மேலும் மூன்று விமானங்கள் சற்று இடைவெளிவிட்டு முன்னும் பக்கவாட்டிலும் பறந்து கொண்டுமிருந்தனர். மொத்தமாக ஐந்து விமானங்கள். கூப்பர் எப்படியும் வலைக்குள் விழுந்துவிடுவான் என நினைத்துக் காத்திருந்தனர் அதிகாரிகள்.

விமானம் வானேறியதும், விமானப் பணிக்கு இருந்த உதவியாளரை விமானிகளின் அறைக்குள் இருக்கும் குழுவுடன் சென்றிருக்கச் சொன்னான். குழுவைச் சேர்ந்ததும், விமானிகளின் அறைக் கதவை மூடவும் சொன்னான். உதவியாளர் பெண்ணுக்கும் வேறு வழி இருக்கவில்லை. அவளும் சம்மதித்து விமானிகள் அறைக்குச் சென்றாள்.

இரவு 8 மணி ஆனபோது, விமானிகளின் அறைக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. சரக்குப் பகுதியின் படிகள் இறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை மணி அது. என்ன நடக்கிறது என்பதைக் குழுவினரால் புரிந்துகொள்ள முடிந்தது.

இரவு 10:15 மணி. விமானம் இறங்கியதும் பரபரப்பாக புலனாய்வு அதிகாரிகளும், காவல்துறையினரும் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்து தேடுதல் வேட்டை நடத்தினர். கூப்பர் இல்லை.

விமானம்
விமானம்

கூப்பர் குதித்துவிட்டான் என்பதையே விமான தளத்துக்கு வந்த பிறகுதான் பிற விமானிகள் தெரிந்துகொண்டனர். கூப்பர் குதித்ததை எவருமே பார்க்கவில்லை என்றார்கள். அதிகாரிகள் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருந்தனர். அந்தச் சம்பவத்தை என்னவாகப் புரிந்துகொள்வதெனவும் எவருக்கும் தெரியவில்லை. ஐந்து விமானங்களின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, டேன் கூப்பர் மாயமாகியிருந்தான்.

கூப்பரைப் பற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லாத நிலையில், பல வகை யூகங்கள் உருவாகின. இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவருடன் இணைந்துகொண்டு, விமான நிறுவனத்துக்கு எதிராகவே கூப்பர் விமானத்தைக் கடத்தியதாக ஒரு யூகம். கூப்பரின் தோற்றத்தைக்கொண்ட பல பேரைப் பார்த்து உருவாக்கப்பட்ட யூகங்கள். போயிங் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஓர் ஊழியரே கூப்பர் என்றுமொரு யூகம். ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

10,000 அடி உயரத்திலிருந்து கடும் மழையில், இருட்டுக்குள் குதித்த ஒருவன் காட்டில் விழுந்து இறந்திருப்பதற்கே சாத்தியங்கள் அதிகமென வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் மாயாவி

2011-ம் ஆண்டில் ஒரு முக்கியமான தகவல் வெளியானது. புலனாய்வுத்துறையின் அதிகாரியான ஃப்ரெட் கட் என்பவர், பத்து வருடங்களுக்கு முன்பே கூப்பர் இறந்துவிட்டான் என ஓர் ஊடகப் பேட்டியில் கூறினார். அவருக்குத் தெரிந்த ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை மார்லா கூப்பர் என்ற ஒரு பெண் தொடர்புகொண்டு, அந்த்த் தகவலை சொன்னதாகவும் குறிப்பிட்டார். அதை தொடர்ந்து மார்லா தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தார். அவருடைய உறவினரான லின் டாயல் கூப்பர்தான் டேன் கூப்பர் என்றார். ஊடகங்கள் பரபரப்படைந்தன.

விமானம்
விமானம்

1971-ம் ஆண்டில் சம்பவம் நடந்தபோது மார்லாவுக்கு எட்டு வயது. ஒரு விடுமுறைகாலத்தில் கூப்பரின் வீட்டுக்கு சென்றிருக்கையில் அங்கு அவன் இன்ணோஓற் உறவினருடன் அமர்ந்து எதையோ தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்ததாக நினைவுகூர்கிறார் மார்லா. பறவை வேட்டைக்காகச் சில நாள்கள் கூப்பரும் உறவினரும் சென்றதாகச் சொல்லும் மார்லா, இருவரும் திரும்ப வருகையில் கூப்பர் காயம்பட்டிருந்தான் எனவும் கூறுகிறார். அன்று அவன் வெள்ளை டி ஷர்ட் அணிந்திருந்ததாகவும், அதில் காயம் கொடுத்த ரத்தம் இருந்ததாகவும் கூறுகிறார். 1995-ம் ஆண்டு மார்லாவின் தந்தை இறப்பதற்கு முன்னால், கூப்பர்தான் விமானத்தைக் கடத்தியதாகச் சொன்னார் என்றும் சொல்கிறார் மார்லா.

இன்றுவரை டேன் கூப்பர் அமெரிக்க மக்களுக்கு ஒரு மாயாவி. அமெரிக்க அரசைத் தோற்கடித்த குற்றவாளி. ஓர் அரசையே ஏய்த்து தப்பியது மட்டுமல்லாமல், முழுமையாக வாழ்வை வாழ்ந்து முடித்து நிம்மதியாக இறந்திருக்கிறான் என்றால், கூப்பரின் அசகாயம் அசாத்தியமானதே!

(தொடரும்)