Published:Updated:

`இந்தத் தொகுப்பாளரைப் பார்க்க மாட்டேன்!’ - ஜொமோட்டோ விவகாரம் தொடர்பான லைவ் ஷோவில் வெடித்த சர்ச்சை

சத்யா கோபாலன்

ஜொமோட்டோ பிரச்னை தொடர்பான விவாதத்துக்கு அழைக்கப்பட்டவர், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

தொகுப்பாளரைப் பார்க்க மறுத்த அஜய்
தொகுப்பாளரைப் பார்க்க மறுத்த அஜய்

மத்தியப்பிரதேசத்தில் வசித்துவரும் அமித்சுக்லா என்பவர், ஜொமோட்டோவில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவைக் கொண்டுவரும் டெலிவரி பாய் ஒரு இஸ்லாமியர் என்பதால், அவரை மாற்ற வேண்டும் என நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார்.

அஜய் கௌதம்
அஜய் கௌதம்

‘உணவுக்கு எந்த மதமும் இல்லை’ எனத் தெரிவித்த ஜொமோட்டோ, டெலிவரி ஆளை மாற்ற முடியாது எனக் கூறி சுக்லா ஆர்டரை கேன்சல் செய்தது. இதுதொடர்பாக சுக்லா பதிவிட்ட ட்விட்டர் கருத்தும் அதற்கு ஜொமோட்டோ நிறுவனம் அளித்த பதிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து சுக்லாவுக்கு அம்மாநில காவல்துறை நோட்டீஸும் அனுப்பியது.

`உணவுக்கு எந்த மதமும் இல்லை!’ - ஆர்டர் செய்த நபரின் கோரிக்கையை நிராகரித்த ஜொமோட்டோ

இந்நிலையில், இது தொடர்பான விவாதம் நியூஸ் 24 தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது. அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 'ஹம் ஹிந்து' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதமும் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் நடுவில், 'கலித்' என்ற இஸ்லாமியத் தொகுப்பாளர் தோன்றி, குறிப்பிட்ட பகுதியைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அஜய் கௌதம், இஸ்லாமியத் தொகுப்பாளரைத் தான் பார்க்க மாட்டேன் எனக் கூறி, இரு கண்களையும் கைகளால் மூடிக்கொண்டார்.

இவரின் செயலுக்கு பதில் அளித்துள்ள நியூஸ் 24-ன் தலைமை எழுத்தாளர் அனுராதா பிரசாத், “ நியூஸ் 24 தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலுக்கு ஆதரவளித்து மேடை அளிக்க அனுமதிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அஜய் கௌதமின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.