Published:Updated:

`மனிதர்களுக்கு விரைவில் கொம்பு முளைக்கப்போகிறது!’ ஏன் தெரியுமா? - மர்மங்களின் கதை | பகுதி-11

மர்மங்களின் கதை

ஆஸ்திரேலியாவில் Sunshine Coast பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை நடத்தியது. 18 வயதிலிருந்து 86 வயது வரையிலான மக்கள் பலரின் மண்டை ஓடுகளின் மருத்துவப் படங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு முக்கியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது.

`மனிதர்களுக்கு விரைவில் கொம்பு முளைக்கப்போகிறது!’ ஏன் தெரியுமா? - மர்மங்களின் கதை | பகுதி-11

ஆஸ்திரேலியாவில் Sunshine Coast பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை நடத்தியது. 18 வயதிலிருந்து 86 வயது வரையிலான மக்கள் பலரின் மண்டை ஓடுகளின் மருத்துவப் படங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு முக்கியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது.

Published:Updated:
மர்மங்களின் கதை

- ஆர்.எஸ்.ஜெ

நம் மண்டை ஓடுகளின் பிற்பகுதியில் சிறியதாக ஒரு முனை உருவாகி வளரத் தொடங்கியிருக்கிறது. 20 வருடங்களாக மருத்துவத்துறையில் இருக்கும் ஆய்வின் தலைமை மருத்துவர் David Shahar கடந்த பத்து வருடங்களில்தான் இது போன்றதொரு வளர்ச்சியை நோயாளிகளிடம் அதிகம் காண்பதாகச் சொல்கிறார். மண்டை ஓட்டு எலும்பு வளர்வதற்கு அடிப்படை காரணமாக அவர் சொல்வது என்ன தெரியுமா?

மண்டை ஓடு
மண்டை ஓடு

கொம்பு மனிதர்கள்!

மிக அதிக நேரத்துக்கு இன்றைய இளைஞர்கள் தலையை கவிழ்த்தபடியே அமர்ந்திருப்பதுதான் காரணம்!

உடலில் குறைவாகப் பயன்படுத்தப்படும் பகுதிகள் திடீரென அதிகமாகப் பயன்படுத்தப்படுகையில் மாற்றங்களைப் பெறுவது இயற்கை. பல மணி நேரமாகத் தலையைக் குனிந்துகொண்டு ஸ்மார்ட்போன்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, அது தொடர்பான உடல்பகுதியில் மாற்றத்தைக் கொண்டு வரும் நிலையை உருவாக்கும். குறிப்பாக, மண்டை ஓட்டுக்குப் பின்புறத்துடன் கழுத்தை இணைக்கும் தசைப்பகுதி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அங்கு மாற்றம் நேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. விளைவாக, அங்கிருக்கும் தசைப்பகுதி வளர்கிறது. வலுவடைகிறது. அந்த வளர்ச்சியையும் வலுவையும் தாங்கும் வகையில் புதிதாக எலும்பு முளைவிடத் தொடங்கியிருக்கிறது.

அதாவது மனிதன் உருவான இத்தனை லட்சம் ஆண்டுகளில் முக்கியமான உருமாற்றத்தை அவன் அடைகிறான்! இது சாதாரணமான விஷயமே அல்ல!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலை கவிழ்ந்திருக்கும் சமூகம்

2017-ம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு நபரும் ஒரு வாரத்தில் சராசரியாக 24 மணி நேரங்களை ஸ்மார்ட்போன் பார்ப்பதில் செலவழிப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். சராசரியாக ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு முறை நாம் செல்போன்களைப் பார்க்கிறோம். தொடர்ச்சியாகக் கொடுக்கப்படும் வேலைகளின் அழுத்தம் திசுக்களை புதுச்சூழலுக்கு தகவமையச் செய்கின்றன என்கிறார் ஷாஹர். காலையில் கண்விழித்ததும், நாம் செய்யும் முதல் விஷயம் மொபைல்போனைப் பார்ப்பது. இரவு படுக்கைக்குச் சென்றதும் நாம் செய்யும் முதல் வேலை மொபைல் பார்ப்பது. இரவு நேரத்தில் நாம் பார்க்கும் மொபைல்போனுக்கு முடிவே இல்லை. அருகேயே ஓரு பிளக் பாயின்ட்டைவைத்து போனை இணைத்துக்கொள்கிறோம். பிறகு, மொபைல்போனுக்குள் இறங்கி தொலையத் தொடங்குகிறோம்.

செல்போன் பயன்பாடு
செல்போன் பயன்பாடு
Twitter

இரவு நேரத்தில் வெளிச்சமெல்லாம் அணைக்கப்பட்ட பிறகு பயன்படுத்தப்படும் செல்போன் நேரடியாக நம் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஒரு மணி நேரம் நெருக்கத்தில் நாம் பார்க்கும் வெளிச்சம், நம் உடலில் சுரக்கும் மெலட்டனின் என்ற ஹார்மோனை 22% அளவுக்குக் குறைத்துவிடுகிறது. இந்த மெலட்டனின் என்கிற ஹார்மோன் இரவு நேரத்தில் மட்டுமே சுரக்கக்கூடியது. 9 ம்ணி அளவுக்கு சுரப்பு தொடங்கும். உடலின் விழிப்பு குறையும். தூக்கத்துக்கான அழைப்பு வரும். இரவை கணித்து, சுரந்து உறக்கத்தை வரவைக்கும் சுரப்பியின் இயக்கம், இரவு நேரத்தில் நாம் செல்போனில் பார்க்கும் வெளிச்சத்தால் கணிசமான அளவுக்குக் குறைக்கப்படுகிறது. விளைவு? தூங்க நேரமாகும். விடியற்காலையில் தூங்கத் தொடங்குவோம். முற்பகல் வரை தூங்கி வழிவோம். நாளின் அலுவலால் அவசர அவசரமாகத் தூக்கத்தைக் கலைந்து எழுவோம். சரியான தூக்கம் கிடைக்காமலேயே தொடர்வோம். தூக்கமின்மை தலைவலியைக் கொடுக்கும். அதிலிருந்தும் வெளியேற வழியின்றி, தூக்கமும் கண்களைப் பிசைய, நடைப்பிணங்களாக வாழ்ந்துகொண்டிருப்போம்.

1926-ம் ஆண்டு. உலகின் முக்கியமான அறிவியலாளர் நிக்கோலா டெஸ்லா ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். `Wireless எனப்படும் கம்பியில்லா தொழில்நுட்பம் சரியாகப் பயன்படுத்தப்படும்போது இந்த மொத்த உலகமும் ஒரு மிகப்பெரிய மூளையா மாறிடும். ஒருத்தரோட ஒருத்தர் தொடர்புகொள்ள தூரம் தடையா இருக்காது!’ டெஸ்லா சொன்னதிலிருந்து 68 வருடங்கள் கழிந்தன. 1994-ம் ஆண்டு. உலகம் முதன்முறையாக அப்படியொரு சாதனத்தைக் கண்டது. சாதனத்துக்கு `Simon Personal Communicator' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதை அறிமுகப்படுத்திய நிறுவனம் IBM. இன்றிலிருந்து பார்க்கையில் தொழில்நுட்ப உலகம் Simon Personal Communicator-ஐத்தான் முதல் ஸ்மார்ட்போன் என அடையாளப்படுத்துகிறது.

நிக்கோலா டெஸ்லா
நிக்கோலா டெஸ்லா

ஸ்மார்ட்போன் என்பதற்கு அர்த்தம் என்ன?

ஸ்மார்ட் என்ற வார்த்தையை சாமர்த்தியம், சமயோசிதம் போன்ற அர்த்தங்களைக்கொண்டு மொழிபெயர்க்கலாம். உங்கள் கையிலிருக்கும் போன் சாமர்த்தியமாக, சமயோசிதமாக இருந்தால் அதுவே ஸ்மார்ட்போன். அது என்ன சாமர்த்தியம், சமயோசிதம்? எந்தவொரு நேரத்திலும் உங்களின் விருப்பத்துக்குரிய விஷயங்களைச் செய்யும் எல்லா வாய்ப்புகளையும் உள்ளடக்கியிருப்பதைத்தான் சாமர்த்தியம் என்கிறார்கள். ஸ்மார்ட் என்கிறார்கள்.

ஓரிடத்திலிருந்து மட்டுமே பயன்படுத்தும் போன்களுடன் புழங்கியிருந்த மக்களுக்கு எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பைக் கொடுத்த ஸ்மார்ட்போன் பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஆச்சர்யத்தின் அளவுக்கு ஸ்மார்ட்போனின் விலையும் இருந்தது. கிட்டத்தட்ட 77,000 ரூபாய்க்கும் மேல். மேலும் ஒரு செங்கல் அளவுக்கு அளவும் எடையும் கொண்டிருந்தது. தொடுதிரை, முகவரிகள் சேமிப்பு மற்றும் நாளேடு போன்ற செயலிகளைக் கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் ஆகியும் வெறும் 50,000 ஃபோன்களே விற்றிருந்தன. அந்த அளவுக்கான விலையை தொலைத் தொடர்புக்கு மட்டுமென செலவழிக்கும் அளவுக்கு செல்வம் படைத்திருந்தவர்கள் அவ்வளவு குறைவாகவே அக்காலத்தில் இருந்தார்கள்.

ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தைப் பார்த்துவிட்ட பிறகு நிறுவனங்கள் விட்டுவிடுவதில்லை. முதல் ஸ்மார்ட்போன் வெறும் ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் விற்று முடிந்த பிறகு, 2001-ம் ஆண்டு அடுத்த ஸ்மார்ட்போன் வந்தது. பெயர் Blackberry! முதன்முறையாக இணையத்தை செல்போனுக்குக் கொண்டு வந்திருந்தது. விலையும் சாமானியனின் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. அவனால் கொடுக்க முடிகிற அளவுக்கு அது மலிவாக இல்லையெனினும், கடன்பட்டு சில நாள்களில் அடைத்துக்கொள்ளும் அளவுக்குக் குறைவாக இருந்தது. பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்திக்குள் வரத் தொடங்கின. வெவ்வேறு விலைகளில் ஸ்மார்ட்போன்கள் ஆயிரமாயிரம் அறிமுகப்படுத்தப்பட்டன. விலைக்கு ஏற்ற வசதிகளை ஸ்மார்ட்போன்கள் கொண்டிருந்தன. ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக இணைய வசதியற்ற சாதாரண போன்களும் அறிமுகமாகின. இணையம் இருந்தால் ஒரு விலை. இணையம் இல்லையென்றால் ஒரு விலை. கேமரா இருந்தால் ஒரு விலை. கேமரா இல்லையென்றால் ஒரு விலை. தொடுதிரை அளவுகளைவைத்து விலை. ஸ்மார்ட்போன்களின் பேட்டரி மின்சாரம் தாங்கும் அளவுகள்கொண்டு விலை. பிராண்டைவைத்து ஒரு விலை. புது பிராண்ட் என்றால் ஒரு விலை.

ஃபேஸ்புக் | Facebook
ஃபேஸ்புக் | Facebook

சமூக ஊடகக் காலம்

2005-ம் ஆண்டிலிருந்து முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் சமூக தளம் உலகமெங்கும் பரவியது. அறிமுகமில்லா நண்பர்கள் பலரை சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பும், புகைப்படங்களைப் பதிவேற்றும் வழியும், கருத்துகளைப் பதிவிடும் தளமும் மக்களுக்குப் பல திறப்புகளைத் திறந்துவிட்டன. எல்லா சாத்தியங்களையும் மக்கள் ஃபேஸ்புக்கில் முயன்றனர். ஆரோக்கியமான அரசியல் மாற்றங்கள் தொடங்கி, குரூரமான தகவல் திருட்டுகள் வரை எல்லா நிலைகளையும்கொண்ட ஒரு பெருங்கடலாக ஃபேஸ்புக் உலகம் முழுவதையும் பீடித்தது. கணினிகளில் செயல்பட்டுக்கொண்டிருந்த முகநூல் App எனப்படும் செயலியாக மாற்றப்பட்டு, ஸ்மார்ட்போன்களுக்குள்ளும் இடம்பெறத் தொடங்கியது.

2007-ம் ஆண்டு. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஏனென்றே தெரியாமல் இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மேடையில் நின்று உலகை நோக்கிப் பேசினார். அவரின் கையில் மனிதப் பரிணாமத்தின் எதிர்கால வடிவம் இருந்தது. ஐபோன் ஸ்மார்ட்போன்களால் முதலில் தொலைத் தொடர்பு மாற்றப்பட்டது. பின் நம் வாழ்க்கைகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருபது வருடங்கள்தான் ஆகின்றன. ஆனால், அவை நமக்குள் கொடுத்திருக்கும் மாற்றங்கள் நம் பரிணாமத்தையே புரட்டிப்போடும் கட்டத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்மார்ட்போன் தட்டையான ஒரு சாதனம். அதன் தொடுதிரை எதுவும் பேசுவதில்லை. நீங்களாக விருப்பப்பட்டு ஒரு காணொலியை ஓடவிட்டால் மட்டுமே பேசும். அதன் இயக்கம் முழுக்க உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் விரும்பினால் படிப்பீர்கள். இல்லையெனில், வேறு செயலிக்கு மாறுவீர்கள். ஒரு காணொலி பார்ப்பீர்கள். ஒரு குறுந்தகவல் பார்த்தால் உடனே அதற்குத் தாவுவீர்கள். எந்த ஒரு நடவடிக்கையிலும் உங்களுடைய முழு கவனமும் இருக்காது. உங்களின் சிந்தனைமுறையே மிக மேலோட்டமாக மாறும். இந்த எல்லா தன்மைகளையும் உங்களின் வாழ்க்கைக்குப் பொருத்திப் பாருங்கள். எந்த மனிதர் பேசுவதும் முழுமையாக உங்களின் மனதுக்குள் இறங்காது. அது அந்த நேரத்தில் வேறு விஷயங்களையும் செய்தபடி இருக்கும். உடனடியாக வேறு ஒரு செயலிக்கு மாறுவதுபோல் உங்களால் மனிதரை மாற்ற முடியாது. ஆகையால், அவரைப் பேசவிட்டுவிட்டு, உங்கள் மனதில் நீங்கள் வேறு விஷயங்களை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். அந்த மனிதர் பேசும் விஷயம் ஏதேனும் உங்களின் உள்ளே போகுமா எனப் பார்த்தால் எதுவும் போயிருக்காது. ஸ்மார்ட்போனின் தொடுதிரை எத்தனை தட்டையாக இருக்கிறதோ அதே அளவுக்கான தட்டையோடுதான் சமூகம் உங்களுக்கு இருக்கும்.

மனிதர்கள் ஸ்மார்ட்போன் செயலிகள் அல்ல, நாம் விரும்பும்போது கேட்பதற்கும் மாற்றிவிட்டுச் செல்வதற்கும். சமூகம் ஸ்மார்ட்போனின் தட்டையான திரையும் அல்ல; நம் இயக்கத்துக்கு மட்டுமே இயங்கிட!

கவனம்… கவனம்… கவனம்!

கனடா நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் கவனம் மனிதனுக்குக் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2000-மாவது வருடத்தில் ஒரு மனிதனின் தொடர் கவனம் சராசரியாக 12 நொடிகளுக்கு இருந்தன. அதாவது நீங்கள் எந்த ஒரு விஷயத்தை கவனித்தாலும் அதை உள்வாங்க 12 நொடிகளை எடுத்துக்கொள்கிறீர்கள். அந்தக் கால அளவே குறைவு என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அளவும் குறைந்திருக்கிறது. எந்தவொரு விஷயத்தை கவனிக்கவும் நாம் வெறும் எட்டு நொடிகளை மட்டுமே செலவிடுகிறோம். நாம் வீடுகளில் வளர்க்கிறோமே தங்க மீன், அதுகூட ஒரு விஷயத்தை கவனிக்கவென ஒன்பது நொடிகளைச் செலவழிக்கிறது. பரிணாமத்தின் உச்சியில் இருப்பதாக அறிவித்துக்கொள்ளும் மனிதர்களாகிய நாம் வெறும் எட்டு நொடிகளைத்தான் செலவழிக்கிறோம்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

அந்த எட்டு நொடிகள் மட்டும்தான் நம் காதலருக்கு, பெற்றோருக்கு, உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, நாட்டுக்கு, வீட்டுக்கு என எல்லாவற்றுக்கும். அந்த எட்டு நொடிகள் கவனமே நம் மனதை, உறவை, வாழ்க்கையை, அரசியலை, உலகத்தை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது என்பதே கசப்பாக இருந்தாலும் உண்மையாகவும் இருக்கிறது. இருபது வருட ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப வளர்ச்சி இரண்டு வகை மனிதர்களை ஒரே காலகட்டத்தில் நிறுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்போனை உடலின் அங்கமென நினைப்பவர்கள், ஸ்மார்ட்போன்களின் மீது பெரிய விருப்பம் இல்லாதவர்கள். இந்த இரண்டு வகைக்கும் இடையில்தாம் உறவு, வாழ்க்கை, புரிதல், உலகம் எல்லாமும் இருப்பதைடச் சற்றே கற்பனை செய்துபாருங்கள்.

பெரும் துயர நாடகம் ஒன்று அரங்கேறுவது தெரியும்!

(தொடரும்)