Published:Updated:

`தடுப்புச்சுவர்’... சென்னை ஐ.ஐ.டியில் புது சர்ச்சை!

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

தொடர் சர்ச்சைகளில் சிக்கிவரும் சென்னை ஐ.ஐ.டி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடங்கி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வரை சென்னை ஐ.ஐ.டி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பதற்காக ஜேக்கப் என்கிற ஜெர்மனி மாணவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இந்த வரிசையில் தற்போது மாணவர்கள் வந்து செல்கின்ற ஒரு வழியை ஐ.ஐ.டி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி அடைக்க முற்பட்டது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஐ.ஐ.டி நிர்வாகத்தினர் கிருஷ்ணா கேட்டை அடைக்க முற்பட்டனர். இந்தச் செய்தியறிந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக கிருஷ்ணா கேட் அடைக்கப்படுவதாக மாணவர்களுக்கு ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்க ஐ.ஐ.டி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாணவர்கள் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ``கிருஷ்ணா கேட், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. மாணவர்களுக்குத் தேவையான பல வசதிகளும் இங்குதான் கிடைக்கின்றன. தவிரவும் அதற்கு வெளியே பல மாணவர்கள் தங்கியுள்ளனர். மேலும், ஐ.ஐ.டி-க்குள் உள்ள வன வாணி, கே.வி பள்ளிகளுக்குச் சென்று வருகிற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுமே இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனர். இது அனைவருக்குமே பாதகமான முடிவு. இதனால் வெகுநேரம் வரை வேலை செய்துவிட்டு செல்கிற மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

சம்பந்தப்பட்ட யாரையுமே கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் இவர்கள் இதைச் செய்வது சந்தேகத்தையே கிளப்புகிறது.

ஐ.ஐ.டி நிர்வாகம் சமீப காலங்களாக மாணவர்களின் சுதந்திரத்தை, அவர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை அதன் தொடர்ச்சியாகவே பார்க்கிறோம். இந்த முடிவில் இருந்து ஐ.ஐ.டி நிர்வாகம் பின்வாங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

அறிக்கை
அறிக்கை

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஐஐடி மாணவர்கள், ``பாதுகாப்பு காரணங்களுக்காக இதைச் செய்கிறோம் என நிர்வாகம் சொல்கிறது. அங்கு என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்ததென்று தெரியவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்திச் செல்கிற வழி அது. இதற்காக மாணவர்களுடனோ, அவர்களுடைய பிரதிநிதிகளுடனோ கலந்தாலோசிக்கப்படவில்லை. மாணவர்கள் விடுமுறையில் உள்ள சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று அதுவும் அதிகாலையில் ரகசியமாக இதைச் செய்ய என்ன அவசரம்? இவையெல்லாம் சந்தேகங்களை வலுவாக்கவே செய்கின்றன.

கிருஷ்ணா கேட்டை விட்டால் ஒரு கி.மீ தாண்டிதான் அடுத்த கேட் உள்ளது. இது பலருக்கும் பாதகமாக முடியும். எதிர்ப்புகள் வந்தபிறகே நிர்வாகம் தற்காலிகமாக அந்தப் பணிகளை நிறுத்திவைத்துள்ளது. அவர்கள் சமீபத்திய நடவடிக்கைகளைப் பார்க்கையில் இந்த முடிவை கைவிடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகிறது. கேட்டை மூட வேண்டும் என அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது" என்றார்.

`ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் யார்?!' - சசிகலா விளக்கத்தால் கொந்தளித்த ஜெ.தீபா
தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

இதற்கிடையே, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று, ஐ.ஐ.டிக்கு சென்று மாணவர்களைச் சந்தித்து, நிலவரத்தைக் கேட்டறிந்தார். இதுபோன்ற பிரச்னைகளை நாங்கள் ஆதரிப்பதில்லையென்றும் நிச்சயம் இதற்காக குரல் கொடுப்போம் என்றும் அவர் உறுதியளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியைத் தொடர்புகொண்டபோது, அவர் பேச மறுத்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு