Published:Updated:

தகவல் ஆணையர் முன்பே நடந்த தில்லுமுல்லு... ஆர்.டி.ஐ அம்பலம்! #EndCorruption #VikatanExclusive

லட்சுமணன்.ஜி

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' தகவல் ஆணையத்தின் பரிதாப நிலை!

தகவல் ஆணையம்
தகவல் ஆணையம்

அரசுத் துறைகளில் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டுமென்ற காரணத்துக்காகவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபின், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் நடந்த ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன; பல பிரச்னைகளுக்குத் தீர்வும் கிடைத்துள்ளன. ஆனால், 'காலப்போக்கில் கழுதைத் தேய்ந்து கட்டெறும்பான கதை'யாக பிற துறைகளைப்போல, தகவல் ஆணையத்தின் பணியிலும் சுணக்கம் ஏற்பட்டது. ஊழலால் வயிறு வளர்த்த அரசு, ஆர்.டி.ஐ மூலம் அதற்குப் பங்கம் வருவதை உணர்ந்ததும், தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வந்த அந்த ஆணையத்தையே தன் வசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தங்களுக்கும் தங்களின் ஊழலுக்கும் ஆதரவாகச் செயல்படுபவர்களையே தலைமைப் பொறுப்பில் அமர்த்தினர்.

தகவல் ஆணையம்
தகவல் ஆணையம்

அதிலும் உச்சக்கட்டமாக, 'மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி?' என்று லஞ்சம் வாங்குபவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதுபோல, மாட்டிக்கொள்ளாமல் எப்படித் தகவல்களைக் கொடுப்பது , எப்படியெல்லாம் தகவல்களைத் தராமல் தவிர்க்கலாம் என்பது போன்ற வகுப்புகள் எடுக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்தன. ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு வந்த பதிலும் இதை உறுதிப்படுத்தின. உதாரணத்துக்கு, "கையெழுத்து இல்லை. ஸ்டாம்ப் ஒட்டவில்லை... என்பன போன்ற பதில்களையே வாரிவழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆர்.டி.ஐ தகவல் ஆணையத்தின் செயல்பாட்டின் லட்சணத்தைத் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆர்.டி.ஐ ஆர்வலர் ஒருவர், தகவல் ஆணையர் முன்பே நடந்த தில்லுமுல்லு பற்றிய புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

புகார்
புகார்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பொது அதிகாரி ஒருவர் விசாரணைக்கு ஆஜராகாமலேயே, தான் ஆஜரானதாக விசாரணை ஆணையரிடம் ஆள் மாறாட்டம் செய்திருக்கிறார். அவர்மீது துறைரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அந்தப் புகார். அதாவது, ஒரு ஆர்.டி.ஐ புகார்மீது மேல்முறையீடு விசாரணை நடக்கிறது. அதில் ஆஜராக வேண்டிய பொது தகவல் அலுவலர் மணவாளன் என்பவர், ஆஜராகாமல் வேறு ஓர் அதிகாரியை அவருடைய பெயரிலேயே ஆஜராக வைத்துள்ளார்.

'முள்ளை முள்ளால் எடுப்பதுபோல' அதற்கான ஆதாரங்களை ஆர்.டி.ஐ மூலமே திரட்டி, அந்த ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார், அந்தப் புகார் அளித்த ஆர்.டி.ஐ ஆர்வலர்.

சென்னை தகவல் ஆணையத்தில் பொது அதிகார அமைப்பின் சார்பாகப் பொதுத் தகவல் அலுவலர் ஜே.மணவாளன் ஆஜரானதாகத் தகவல் ஆணையர் குறிப்பிட்டுள்ள ஆணை இணைக்கப்பட்டுள்ளது.

download

இந்த முறைகேட்டை வெளிக்கொண்டுவந்துள்ள ஆர்.டி.ஐ ஆர்வலரும், இந்தியன் குரல் என்ற அமைப்பின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான அ.ராமகிருஷ்ணனிடம் விரிவாகப் பேசினோம்.

"கடந்த 17.10.2017-ம் அன்று ஜெ.அய்யப்ப கணேஷ் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்திலுள்ள பட்டா தொடர்பான தகவலுக்காக ஆர்.டி.ஐ மூலம் அந்தத் தாலுகாவிற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அதுகுறித்த முழுமையான பதில் கிடைக்கப்பெறாத காரணத்தால் கடந்த 30.12.2017 அன்று  மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணைக்காக 08.03.2018 அன்று  சென்னையிலுள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகத் தேனி துணை வட்டாட்சியர் ஜே.மணவாளனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், ஜே.மணவாளன் என்பவர் ஆஜராகாமல், வேறு ஒருவரை அவருடைய பெயரில் ஆஜராக வைத்துள்ளார். இதை அறியாத தகவல் ஆணையரும் அவர் ஆஜரானதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றித் தகவல் தெரிந்ததும் அதற்கான ஆதாரங்களைப் பெற பல்வேறு வகையில் முயற்சி செய்தேன். சுமார் ஓராண்டுக் காலம் போராடி, ஆர்.டி.ஐ மூலமே அந்த ஆவணங்களைத் திரட்டினேன்.

சென்னையிலுள்ள தகவல் ஆணையத்தில் ஆஜரானதாகச் சொன்ன 08.03.2018-ம் தேதியன்று, தேனி வட்டாட்சியர் தம் அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார் என்பதற்கான வருகைப், பதிவேடு உள்ளிட்ட ஆதாரங்களைப் பெற்றேன்.

வருகைப் பதிவேடு
வருகைப் பதிவேடு

ஒருவேளை, அவர் அங்கு கையெழுத்திட்ட பிறகு, சென்னை வந்திருந்தாலும் அதற்கான பயணப்படியைப் பெற்றிருப்பார். அன்றைய தேதிக்குப் பயணப்படியைப் பெற்றவர்களின் பெயர் பட்டியலிலும் அவர் பெயரில்லை. அதோடு, அவர் அந்தத் தேதியில் ஆஜராக இயலவில்லை என்றாலும் அதற்கான கடிதத்துடன் மாற்று அலுவலரை விசாரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இந்த ஆள்மாறாட்ட மோசடி மூலம் விசாரணை தகவல் ஆணையரும், ஆஜரானவரின் பெயரையும் பதவியையும் உறுதி செய்யவில்லை என்பதும், ஒப்புக்கென வழக்குக்குத் தொடர்பில்லாத அலுவலர்கள் ஆஜராகிறார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இதே நிலைதான் தகவல் ஆணையத்தில் பெரும்பாலும் நடக்கிறது. தகவல் ஆணையத்தின் விசாரணையின்போது, உண்மையான பொது அதிகாரிதான் ஆஜராகியிருக்கிறார் என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் விசாரணை தகவல் ஆணையர்கள் வழங்கும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சந்தேகமும் எழுகிறது. இந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்யும் ஆவணங்களைக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்த அலுவலர்கள் மீது மிகவும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 24-ம் தேதியன்று சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன்.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

பெரும்பாலும் முறைகேடுகளில் பொதுத் தகவல் அதிகாரிகளிடம் தகவல் பெற முடியாமல் போகும்போது, மேல்முறையீடு செய்து தகவல் ஆணையரிடம் போய்த்தான் வாங்க முடிகிறது. அந்தளவுக்குத் தகவல் கொடுக்க வேண்டிய பொதுத் தகவல் அலுவலரே, அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டு வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, நீதி வழங்க வேண்டிய தகவல் ஆணையரும் இப்படி அலட்சியமாகவும் அதிகாரிகளுக்குச் சாதகமாகவும் நடந்துகொள்வது தொடர்ந்தால் ஆர்.டி.ஐ சட்டமே பயனில்லாமல் போய்விடும்" என்றார் வேதனையுடன்.

'அபராதம் விதிக்கும் ஆணையம் அதைச் செய்யாமல் அதிகாரிகளைக் காப்பாற்றி வருகிறது' என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இப்படி ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை எடுத்து, தன் கடமையைச் செய்யப்போகிறதா, ஆணையரே இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்காக நடவடிக்கையை எடுக்காமல் தப்பிக்கப்போகிறதா' என்பதைப் பார்ப்போம்...