முதல்முறை விமானப் பயணம் அனைவருக்கும் ஒருவித பயத்தை ஏற்படுத்தலாம். அதுவே பயணங்கள் தொடர்கையில், அந்த பயம் படிப்படியாகக் குறைந்து மறைந்து போய்விடும். ஆனால் விமானப் பயணி ஒருவர், தனக்கு ஏற்பட்ட பயத்தால் விமானத்தின் அவசர கால வெளியேறும் வழியைத் (Emergency exit) திறந்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022 டிசம்பர் 10-ம் தேதி, இண்டிகோ விமானம் 6E-7339 சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்குப் பயணித்துள்ளது. அந்தச் சமயத்தில் பயணி ஒருவர், அவசர கால வெளியேறும் கதவைத் திறந்துள்ளார்.

அவரின் இந்தச் செய்கையால், மற்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனடியாக விமானப் பணியாளர்கள் விமானத்தின் அழுத்தத்தைச் சரிபார்த்த பின்னர், விமானம் புறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 26-ம் தேதி ஒரு நபர் ஒருவர், பெண் ஒருவரின் இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விமானங்களில் நிகழும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பயணிகளிடையே தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.