Published:Updated:

``கிலோ கணக்கில் தங்கம்... மண்ணுக்கடியில் பல கோடி!” - பிடதி ஆசிரமத்துக்கு ஸ்கெட்ச்

பிடதி ஆசிரமம்

பிடதியில் வெளியாட்கள் உள்ளே நுழையமுடியாமல் இருப்பதற்குக் காரணம் பிடதி ஆசிரமத்திற்குள் உள்ள ரகசியங்கள்தான் என்று அதிர்ச்சி தகவல்களைச் சொல்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

``கிலோ கணக்கில் தங்கம்... மண்ணுக்கடியில் பல கோடி!” - பிடதி ஆசிரமத்துக்கு ஸ்கெட்ச்

பிடதியில் வெளியாட்கள் உள்ளே நுழையமுடியாமல் இருப்பதற்குக் காரணம் பிடதி ஆசிரமத்திற்குள் உள்ள ரகசியங்கள்தான் என்று அதிர்ச்சி தகவல்களைச் சொல்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

Published:Updated:
பிடதி ஆசிரமம்

``நிம்மதியைத் தேடி நித்தியானந்தா பின்னால் சென்றவர்கள் எல்லாம் இப்போது நிம்மதியைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்” என்கிறார் ஜனாரத்தன ஷர்மா. நித்தியானந்தாவினைச் சுற்றி நடக்கும் சரச்சைகள் வேகமெடுத்துவரும் நிலையில் அவர் குறித்த புதிய தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டே இருக்கிறது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்தியாவில் கார்ப்பரேட் சாமியார்கள் என்ற வரிசையில் நித்தியானந்தாவின் ஆசிரமும் ஒன்று. அதாவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலிருந்தும் இந்த ஆசிரமங்களுக்குப் பணவரவு உண்டு. நித்தியானந்தா தற்போது வெளிநாட்டில் இருப்பதற்கு இதுபோன்ற வெளிநாட்டு தொடர்புகளே அடிப்படை காரணம். அதே நேரம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா கடந்த ஆண்டு இறுதியில் வெளியேறிவிட்டார். இதற்குப் பிறகு ஆசிரம பெண் நிர்வாகிகள் கட்டுபாட்டில் இந்த ஆசிரமம் இயங்கிவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆசிரமத்தில் இருந்த பல பெண்கள் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டார்கள். அப்படிதான் ஜனார்த்தன ஷர்மாவின் பிள்ளைகளும் அகமதாபாத் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால் பிடதி ஆசிரமம்தான் நித்தியானந்தாவின் தலைமை பீடம் என்பதால் அங்கு இப்போதும் கெடுபிடிகள் இருந்துகொண்டே இருக்கின்றன. பிடதியில் வெளியாட்கள் உள்ளே நுழையமுடியாமல் இருப்பதற்குக் காரணம் பிடதி ஆசிரமத்திற்குள் உள்ள ரகசியங்கள்தான் என்று அதிர்ச்சி தகவல்களைச் சொல்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா!
ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா!

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவக்குமாருக்கும் பிடதி ஆசிரமத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று தகவல்களை இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி புரிந்த காலத்தில் சிவக்குமாரின் நம்பிக்கைக்குரிய இடமாக இந்தப் பிடதி ஆசிரமம் இருந்துள்ளது. கர்நாடக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராகவும் பணவசதி படைத்தவராகவும் அறியப்படுவர் சிவக்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிடதி ஆசிரமத்திற்கு பல கோடி ரூபாய் பணத்தை அளித்துள்ளார். அந்தப் பணம் எதற்காக அளிக்கப்பட்டது, என்ன கணக்கில் வைக்கப்பட்டது என்கிற விவரங்கள் அப்போது யாருக்கும் தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்குப் பிறகு சில மாதங்களில் மீண்டும் இதுபோன்று தொடர்ந்து பணம் ஆசிரமத்திற்கு வந்துகொண்டே இருந்துள்ளது. அந்தத் தொகை பிடதி ஆசிரம அறக்கட்டளை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரமத்திற்கு அளிக்கப்படும் நிதிக்கு வருமானவரி கிடையாது என்பதால் பல தொழில் அதிபர்கள் கறுப்புப் பணத்தை மாற்ற இந்த யுக்தியைக் கையாளுவது வழக்கம். சிவக்குமாரின் பணமும் இந்த முறையில் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவக்குமார் அளித்த பல நூறு கோடி ரூபாய் பணம் இப்போது பிடதியில் உள்ள ஆசிரமத்தில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தப் பண பரிவர்த்தனை முழுவதையும் கண்காணித்து அந்த விவரங்களை நித்தியானந்தாவிற்கு அளித்துவருபவர் மா அச்சலா என்கிற ஆசிரம நிர்வாகி.

சிவக்குமார்
சிவக்குமார்

அதேபோல் ஆண்டிற்கு மூன்று முறை பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிற்கு `துலா பாரம்' வைபவம் நடைபெறும். இந்தத் துலாபாரம் நிகழ்வில் நித்தியானந்தாவின் எடைக்குச் சமமான பொருள்களை பக்தர்கள் அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். இந்த வகையில் பல சமயங்களில் நித்தியானந்தாவின் எடைக்கு ஈடாக தங்கக் கட்டிகளை துலாபாரம் மூலம் பெற்றுள்ளார்கள். பல வெளிநாட்டு பக்தர்களும், பல தொழிலதிபர்களும் நித்தியானந்தாவின் பேச்சில் மயங்கி தங்கக் கட்டிகளையும், ஆபரணங்களையும் அவர் எடைக்கு நிகராகக் கொடுத்துள்ளார்கள். சமீபத்தில் அவர் வெளிநாட்டில் இருந்த போதும் துலாபாரம் நிகழ்ச்சி நடந்துள்ளது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

“சுவாமிஜி இல்லாத போது அவருக்கு துலாபாரம் நிகழ்ச்சியை நடத்த மூன்று முக்கிய பெண்நிர்வாகிகள் முடிவு செய்தார்கள். வழக்கம் போல அனைத்து ஏற்பாடுகளும் நடந்து, இறுதியில் நித்தியானந்தா அமரும் இடத்தில் அவருடைய ஆளுயர புகைப்படத்தை வைத்தார்கள். அதற்கு பின்னால் நித்தியானந்தாவின் எடைக்கு ஈடாக எண்பது கிலோ கல்லையும் வைத்து இந்த துலாபாரம் நிகழ்ச்சி நடந்தேறியது. கல்லுக்கு ஈடாகவும் தங்கத்தை வழங்கும் அளவுக்கு நித்தியானந்தா தனது பக்தர்களை வசியப்படுத்தியுள்ளார். அதுதான் கொடுமை” என்று வேதனைப்படுகிறார்கள் மடத்துக்கு நெருக்கமானவர்கள்.

பிடதியில் பெண் குழந்தைகளுக்குப் பயிற்சி
பிடதியில் பெண் குழந்தைகளுக்குப் பயிற்சி

ஆசிரமத்திற்கு வந்த பணம், கிலோ கணக்கிலான தங்கம் உள்ளிட்டவை அனைத்தும் முழுமையாக இன்னும் பிடதி ஆசிரமத்திலிருந்து அகற்றப்படவில்லை. இப்போது பாலியல் பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால், அடுத்த விவகாரமாக இதுவும் கிளம்பிவிடும் என்று அச்சப்படுகிறார்கள் நித்தியானந்தாவிற்கு நெருக்கமானவர்கள். இதனால், அவற்றை அங்கிருந்து அகற்றிவிட முடிவு செய்துள்ளார் நித்தியானந்தா. இந்தப் பதுக்கல் குறித்த விவரமும் இப்போது மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டதால் பிடதி உள்ளிட்ட அனைத்து ஆசிரமங்களிலும் வருமானவரித்துறையை வைத்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

இந்து மதம் என்கிற போர்வையில் மோசடியில் ஈடுபட்டுவந்த நித்தியானந்தாவை இனியும் விட்டுவைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது மத்திய அரசு. இதனால் குஜராத்தில் கைது செய்யபட்ட நித்தியானந்தா மடத்து பெண் நிர்வாகிகள் இருவரிடமும் இதுகுறித்த தீவிர விசாரணையை முடக்கிவிட்டுள்ளது அம்மாநில காவல்துறை. அவர்கள் கொடுத்த சில தகவல்களை வருமானவரித்துறைக்கும் அனுப்பியுள்ளார்கள் குஜராத் போலீஸார். வருமானத்துறை ரெடியாகிவிட்டது பிடதிக்குள் செல்ல...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism