Published:Updated:

`கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!' டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பிய ஜோதிமணி

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

``தமிழகத்தில் இந்த அவலம் நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. கே.டி.ராகவன் உள்ளிட்ட பாஜக, அதிமுக-வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைதுசெய்ய வேண்டும். நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்" - ஜோதிமணி

பா.ஜ.க மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், தான் வகித்துவந்த பதவியை ராஜினாமா செய்ததோடு, 'என்னைப் பற்றிக் கட்சிக்கும் மக்களுக்கும் தெரியும். இதைச் சட்டப்படி சந்திப்பேன்' என்று சொல்லியிருக்கிறார். அதேநேரத்தில், கே.டி.ராகவன் மீதும் பா.ஜ.க கட்சிக்கு எதிராகவும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், கரூர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, 'கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு புகார்க் கடிதம் அனுப்பியுள்ளார்.

புகார்க் கடிதம்
புகார்க் கடிதம்
நா.ராஜமுருகன்

அந்தப் புகார்க் கடிதத்தில், ``பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் என்பவரின் பாலியல் அத்துமீறல் தொடர்பான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர், தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச்செயலாளர் ஒருவர், கலிவரதன் தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாகவும், ஏமாற்றிப் பணம் பறித்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, அவர்கள் இருவரும் பேசும் ஆடியோவும் வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் துயரை, கண்ணீரை தமிழகமே கேட்டது. அதேபோல, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா, அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்துவந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்துடனும் நடந்துகொண்ட வீடியோ தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

இப்போது தன்னை கடவுள், பக்தர், தனது கட்சியே கடவுளைக் காப்பாற்ற வந்த கட்சி என்று பொய் பேசி, ஊரை ஏமாற்றிவந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், பூசை அறை அருகில் நின்றுகொண்டு, ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டிருக்கிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களைத் தொடர்ந்து காப்பாற்றிவருவது மட்டுமல்லாமல், பாலியல் குற்றவாளிகளை ஊக்குவித்தும்வருகிறது. கலிவரதன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் வேட்பாளரானார். சண்முகம் சுப்பையா, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மதுரையில் இன்னும் தொடங்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினராக மாண்புமிகு நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரூர்:முதல் இறுதிப் பயணம்;   மயானப் பாதைக்கான போராட்டத்தில் உயிரிழந்த பட்டியலினத்தவர்!-நடந்தது என்ன?

அன்று ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., பா.ஜ.க-வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகப் பெண்களின் பாதுகாப்புக்கும், கண்ணியத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்தக் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அ.தி.மு.க அரசு மூடி மறைத்துவிட்டது. பா.ஜ.க தலைவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் எடப்பாடி பழனிசாமி அரசால் மிரட்டப்பட்டார்கள். பாலியல் புகார்களை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தரப்பட்டது. அதனால், பாதிக்கப்பட்ட பெண்கள், அ.தி.மு.க., பா.ஜ.க அரசுகளின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அராஜகத்துக்கும், மிரட்டலுக்கும் பயந்து, புகார்களைத் திரும்பப் பெற்ற அவலமும் நடந்தேறியது. பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அ.தி.மு.க தலைவர்களால் கொடுமையான பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாகச் சீரழிக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒன்றிய பா.ஜ.க அரசின் கீழ் இயங்கும் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் இன்றுவரை எவ்வித தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 புகார் கடிதம்
புகார் கடிதம்
நா.ராஜமுருகன்

பெயரளவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு இந்தக் கொடுமையான பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் அதிகார பலத்தோடு இன்னும் வெளியில்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் பாலியல் குற்றங்களை பா.ஜ.க-வும், பா.ஜ.க-வின் பாலியல் குற்றங்களை அ.தி.மு.க-வும் தொடர்ந்து மூடி மறைத்துவருகின்றன.

தொடர்ந்து, தமிழ்நாட்டு சகோதரிகள் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த கொடும் பாலியல் குற்றவாளிகளால் பாலியல்ரீதியாகத் துன்புறத்தப்பட்டுவருகின்றனர். தங்களது மானத்துக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் பயந்து பல சகோதரிகள் உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கி, வேதனைப்பட்டுவருகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறையின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மீறி பாதிக்கப்பட்டு, புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியே சொன்ன அவலமும் நிகழ்ந்தது. இது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையில்லாமல் வேறென்ன?.

 புகார் கடிதம்
புகார் கடிதம்
நா.ராஜமுருகன்

காஷ்மீரில் 8 வயது சிறுமியைக் கோயில் கருவறைக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க-வின் அமைச்சர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்போன அவலத்தையும் இந்த நாடு பார்த்தது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் ஒரு சிறு பெண்ணை பல ஆண்டுகளாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, பாதிக்கப்பட்ட குடும்பம் புகார் அளித்ததும் ,அந்தப் பெண்ணின் முதுகெலும்பை முறித்து, அந்தக் குடும்பத்தையே கொலை செய்ததை மத்திய, மாநில பா.ஜ.க அரசுகள் வேடிக்கை பார்த்ததைப் பார்த்து, இந்த தேசமே அதிர்ச்சியில் உறைந்தது.

கே.டி ராகவன் வீடியோ விவகாரம்: `யூ-டியூபர் என்னை சந்தித்து பேசியது உண்மைதான்!’ - அண்ணாமலை சொல்வதென்ன?

இதுபோல, பல பா.ஜ.க-வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சமூகத்துக்கும் பெண்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக வெளியில் உலவிக்கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இந்த அவலம் நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க-, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைதுசெய்ய வேண்டும். நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான், தமிழ்நாட்டில் பெண்களாகிய நாங்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

 புகார்க் கடிதம்
புகார்க் கடிதம்
நா.ராஜமுருகன்

கடந்த ஆட்சியில் மூடிமறைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றங்கள் உள்ளிட்ட கொடுமையான பாலியல் வண்புணர்வு குற்றங்களையும், அ.தி.மு.க., பா.ஜ.க அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகளையும், உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்கிற உத்தரவாதத்தை, நம்பிக்கையை இந்த அரசு தமிழக மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு