Published:Updated:

கரூர்: `இன்று மருத்துவர்கள்; நாளை 8 கோடி தமிழர்கள்!' - மத்திய அமைச்சருக்கு ஜோதிமணி கண்டனக் கடிதம்

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

`ஆயுஷ் செயலாளரின் இந்தச் செயல் ஏமாற்றப்பளிப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் உறுதியாக உள்ள பன்முகத்தன்மையைக் காப்பதில் தோல்வியடைந்ததாகவும் இருக்கிறது. இன்று மருத்துவர்களுக்கு என்று விட்டுவிட்டால், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் ஏற்படுத்தப்படும்.'

`இந்தி தெரியவில்லையென்றால், கூட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்' என்று இயற்கை மற்றும் யோகா மருத்துவர்களுக்கான விர்ச்சுவல் பயிற்சி வகுப்பில், மருத்துவர்களை அதிகாரிகள் அவமதித்ததாகச் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இது குறித்து மத்திய `ஆயுஷ்' அமைச்சர், ஸ்ரீபட் நாயக்குக்கு கடிதம் எழுதி, தனது எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்
`இந்தி தெரியவில்லையா.. வெளியேறுங்கள்!' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன?

இது குறித்து, ஜோதிமணி மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

`மாண்புமிகு `ஆயுஷ்’ அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். தமிழக இயற்கை மருத்துவர்கள் கலந்துகொண்ட தங்கள் துறை சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில், `இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் வெளியேறுங்கள்’ என்று சொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை மிகுந்த துயரத்துடன் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அதுவும், ஆயுஷ் துறையின் செயலாளரே இவ்வாறு பேசியிருப்பது வருந்தத்தக்கது. மருத்துவத்தில் பன்முகத்தன்மையை உணர்த்தும் அடையாளமாக இருக்கக்கூடிய `ஆயுஷ்’ போன்ற துறையிலேயேகூட, எந்தவிதமான திணிப்பையும் கடுமையாக எதிர்க்கும் நீண்டகால வரலாறும், பெருமையும்கொண்ட மாநிலத்திலிருந்து கலந்துகொள்ளும்- இந்தி பேசாத மருத்துவர்களிடம் மொழித் திணிப்பைச் செய்வது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஜோதிமணி மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம்
ஜோதிமணி மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

முதலில், தமிழ்நாடு எந்த இந்திய மொழிக்கும் எதிரானது இல்லை என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆனால், எந்தவிதமான வகையிலும், எந்த மொழியையும் எங்கள்மீது திணிப்பதையும் கடுமையாக எதிர்ப்போம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும்படியான ஆயுஷ் செயலாளரின் நடவடிக்கை, எனக்கு உருவாக்கியிருக்கும் ஏமாற்றத்தையும், அதற்கு எதிரான எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன்.

தினசரி அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்றைக் கையாள்வது குறித்த நிகழ்வொன்றில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வருந்தத்தக்கது. ஆயுஷ் செயலாளர் அவர்கள், நிகழ்வின் நோக்கத்தைக்காட்டிலும், மொழியைப் பிரதானப்படுத்தியிருப்பது கொரோனாவைக் கையாள்வதிலிருக்கும் அவரின் அலட்சியமான மனநிலையைக் காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக, ஆயுஷ் துறையின் முன்னுரிமைகள் இப்படி இடம்மாறியிருப்பது பெரும்பாலான மக்களுக்கு நலம் விளைவிக்காது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியதை என்னுடைய மிக முக்கியான கடமையாகக் கருதுகிறேன்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

ஆயுஷ் துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதையொட்டி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். ஆயுஷ் செயலாளரின் இந்தச் செயல் ஏமாற்றப்பளிப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் உறுதியாக உள்ள பன்முகத்தன்மையைக் காப்பதில் தோல்வியடைந்ததாகவும் இருக்கிறது. இன்று மருத்துவர்களுக்கு என்று விட்டுவிட்டால், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் ஏற்படுத்தப்படும். அதனால், இத்தகைய சர்ச்சைகள் எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு