Election bannerElection banner
Published:Updated:

`தமிழகத்துக்கான ஆக்ஸிஜனை யாரைக் கேட்டு பிற மாநிலங்களுக்குக் கொடுத்தீர்கள்?'-மோடிக்கு ஜோதிமணி கேள்வி

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளைப் பிற நாடுகளுக்குப் பொறுப்பில்லாமல் ஏற்றுமதி செய்ததால்தான், இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம். இன்று ஆயிரக்கணக்கானோர் தேவையான மருந்துகள் இல்லாமல் உயிருக்குப் போராடிவருகிறார்கள்.

`தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது ஏன்?' என்று பிரதமர் மோடிக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியிருக்கிறார்.

ஜோதிமணி பிரதமருக்கு எழுதிய கடிதம்
ஜோதிமணி பிரதமருக்கு எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

இது குறித்து, அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,

`தமிழகத்துக்கு வர வேண்டிய 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன், தமிழக அரசின் ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆக்ஸிஜன் அனுப்பப்பட்ட பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் நோய்த் தொற்று அதிகம் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், தமிழகத்தின் நிலையைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல், இவ்வாறு மத்திய அரசு நடந்திருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி.

கரூர்: `தானாக கணினி இயங்கியதாகப் புரளி... திமுக-வுக்கு தோல்வி பயம்!’ - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை மத்திய அரசு நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி நீட், எட்டுவழிச் சாலை, எரிவாயுக் குழாய்கள் ஆகிய பிரச்னைகளில் மத்திய அரசு தனது முடிவுகளை தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில்கூட, மத்திய அரசு இப்படி நடந்துகொள்ளும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ஜோதிமணி பிரதமருக்கு எழுதிய கடிதம்
ஜோதிமணி பிரதமருக்கு எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

தமிழ்நாட்டில் உள்ள எட்டுக் கோடி மக்களின் உயிரும் முக்கியமே. மத்திய அரசின் அக்கறையின்மைக்கும், மெத்தனப்போக்குக்கும் நாங்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளைப் பிற நாடுகளுக்கு பொறுப்பில்லாமல் ஏற்றுமதி செய்ததால்தான், இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம். இன்று ஆயிரக்கணக்கானோர் தேவையான மருந்துகள் இல்லாமல் உயிருக்குப் போராடிவருகிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் மத்திய அரசு இவ்வாறு நடந்துகொள்வது, அதன் பொறுப்பின்மையையே காண்பிக்கிறது. எனவே, தமிழகத்துக்கு வர வேண்டிய ஆக்ஸிஜனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகளைத் தேவையான அளவு உடனடியாகக் கொள்முதல் செய்து, இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கடிதத்தில் தனது கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு