Published:Updated:

220 மில்லியன்`ட்ரீம் புராஜெக்ட்'; திட்ட இயக்குநர் புகார்! -கேரள தொழிலதிபர் தற்கொலையில் புதிய சர்ச்சை

தொழிலதிபர் ஜாய் அரக்கல்
தொழிலதிபர் ஜாய் அரக்கல்

நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக துபாய் போலீஸ் தெரிவிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறின.

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாய் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார். வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்தவர் ஜாய் அரக்கல். துபாயில் அக்கவுன்டன்ட்டாகப் பணிபுரிந்த இவர், இன்னோவா குரூப் நிறுவனங்களைத் தொடங்கினார். இந்தக் குழுமம் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம் போன்ற துறைகளில் தொழில் செய்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் துபாயில் தன் நிறுவனத்தில் ஜாய் அரக்கல் வேலைவாய்ப்பு வழங்கி வந்தவர், ஏப்ரல் 23-ம் தேதி இவர் துபாயில், பே ஏரியா பகுதியில் உள்ள கட்டடத்தின் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக துபாய் போலீஸ் தெரிவிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறின.

ஜாய் அரக்கல்
ஜாய் அரக்கல்

ஜாய் அரக்கல் கேரளாவில் பிரபலமாவதற்கு காரணம் அவர் தொழிலதிபர் என்பதையும் தாண்டி சமூகப்பணிகளுக்குப் பெயர் பெற்றவர். உதவி என்று தேடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறமாட்டாராம். கேரள வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்குத் தனது சொந்த நிலத்தில் 40 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ள அவர் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் செய்துள்ளார். இவரின் தற்கொலை பல்வேறு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் உடலை தனிவிமானத்தில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு, சொந்த ஊரான மானந்தவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. ஜாய் அரக்கல் உடலை இந்தியா கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேக அனுமதி அளித்தது.

இப்படி பிரபலமாக இருந்த ஜாய் அரக்கல் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. முதலில் இவரது தற்கொலைக்கு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கப்பல் வர்த்தகத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஹம்ரியா மண்டலத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை கட்டிவந்தார் ஜாய்.

220 மில்லியன்`ட்ரீம் புராஜெக்ட்'; திட்ட இயக்குநர் புகார்! -கேரள தொழிலதிபர் தற்கொலையில் புதிய சர்ச்சை

ஜாய் அரக்கலின் `கனவு திட்டம்' இது என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூறிவருகின்றனர். அதிநவீன தொழில்நுட்பத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதுபோன்ற மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் அமைவது இதுவே முதல்முறை. நீலப் புரட்சி முறை என அழைக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு பெட்ரோலியம் சுத்திகரிப்படுவதன் மூலம் இறுதி விளைபொருளாக தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தைதான் தனது நிலையத்தில் நிறுவ முயற்சி செய்தார். இதற்காக 220 மில்லியன் திர்ஹாம் செலவில் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. திட்டத்தின் இயக்குநரை அவரே தேர்ந்தெடுத்துள்ளார்.

அந்த அளவுக்கு இந்தத் திட்டம் ஜாயின் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்தது என்கின்றனர். வேறு பல பெரிய நிறுவனங்களும் இதேபோன்ற திட்டங்களில் ஈடுபட்டுள்ளன என்றாலும், ஜாயின் இன்னோவா குழுமம் சுத்திகரிப்பு நிலையத்தை மூன்றில் ஒரு பங்கு இடத்திலும், குறைந்த செலவிலும் உருவாக்குகிறது. இதனால் அரபு நாட்டில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், சமீபகாலமாக திட்டம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மார்ச் மாதம் திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழா வைத்திருந்த நிலையில், இதற்காக சீனா மற்றும் இத்தாலியிலிருந்து இயந்திரங்கள் கொண்டு வந்திருந்தாலும், விழாவை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனால் சில நாள்களாகவே ஜாய் கலக்கமடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.

ஜாய் அரக்கல்
ஜாய் அரக்கல்

இந்த நிலையில், ஜாயின் மகன் இப்போது தன் தந்தையின் மரணத்தின் உண்மையான காரணங்களை அறிய துபாய் போலீஸை அணுகியுள்ளார். அவர் கூறியுள்ள புகாரில் தந்தையின் மரணத்தில் திட்ட இயக்குநரின் பங்கை விசாரிக்க வேண்டும். திட்ட இயக்குநரால் தனக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தந்தை ஜாய் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறியுள்ளார். ஜாய் தேர்வு செய்த திட்ட இயக்குநர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் வரும் நாள்களில் உண்மை நிலவரம் தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு