Election bannerElection banner
Published:Updated:

`இந்தியாவின் ஆண்டு இறப்பு விகிதம்; கொரோனா உயிரிழப்புகள் குறைவுதான்!' - மார்க்கண்டேய கட்ஜு

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக ஒரு கோடிப் பேர் பல்வேறு நோய்களால் உயிரிழக்கும்போது, (மார்ச் 20 - ஏப்ரல் 21) வரையிலும் மொத்தமாகவே 1,80,000 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் - மார்க்கண்டேய கட்ஜு

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நோய்ப் பரவலின் தீவிரத்தைத் தணிக்க மத்திய, மாநில அரசுகள் போராடிவரும்போதிலும், நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து அதிக கொரோனா உயிர்ப் பலிகள் பதிவாகி இருப்பது இந்தியாவில்தான். இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,80,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

ஒட்டுமொத்த தேசமும் அசாதாரண சூழலை எதிர்கொண்டு வரும் வேளையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இந்தியாவில் மற்ற நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கொரோனா உயிரிழப்புகள் மிகவும் குறைவான அளவில்தான் பதிவாகியிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். நீதிபதி கட்ஜுவின் கருத்து இணையத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. பலர் அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பதில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

முன்னதாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேட்டி அளித்திருந்தார். அதில் கட்ஜு, ``கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், கொரோனாவைத் தவிர்த்து கவனிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் சமூகத்தில் இருக்கின்றன. நாம் அவற்றிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். கொரோனா நோய்த் தொற்றைவிடவும் இந்தியாவை அச்சுறுத்திவரும் பல கொடிய நோய்கள் இருக்கின்றன.

மக்கள்தொகை மிகுதியாகக் காணப்படும் இந்தியாவில் தோராயமாக ஓராண்டுக்கு மலேரியா, வைரஸ் காய்ச்சல், காலரா, டைபாய்டு, டெங்கு, சர்க்கரைநோய் எனப் பல்வேறு நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவின் தற்போதைய கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், நாம் அனைவரும் கொரோனா...கொரோனா என்று அழுது புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. உலகளாவிய தரவுகளின்படி பார்க்கையில், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, சுகாதாரச் சீர்கேடு என நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன.

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் இத்தனை பிரச்னைகளையும் தாண்டி பலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், நாட்டின் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இந்த நேரத்தில் தங்களில் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மற்ற கொடிய நோய்களால் ஏழை எளிய மக்கள் இறந்தால் கவலையில்லை. வறுமையால் குழந்தைகள் இறந்தாலும் கவலையில்லை. இவர்கள் அனைவரின் கவனமும் கொரோனா என்ற ஒற்றை வைரஸை நோக்கித்தான் இருக்கிறது.

கொரோனா
கொரோனா

நான், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கிறது என்று கூறவில்லை. அதன் தாக்கமும் தீவிரமும் எனக்கு நன்றாகவே புரிகிறது. இருந்தாலும், அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் நாட்டில் கவனிக்கத்தக்க மற்ற பிரச்னைகளை மறைப்பதற்கு கொரோனா என்ற கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்திவருகிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக ஒரு கோடிப் பேர் மேற்கூறிய நோய்களால் உயிரிழக்கும்போது, (மார்ச் 20 - ஏப்ரல் 21) வரையிலும் மொத்தமாகவே 1,80,000 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மற்ற நோய்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா உயிரிழப்புகள் மிகவும் குறைவே. ஆனால், இந்தியப் பத்திரிகையாளர்கள் `கொரோனா...கொரோனா...’ என்கிறார்கள்" என்று கட்ஜு தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத இந்த 5 நாடுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

அதைத் தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதே கருத்தைப் பதிவிட்டுள்ளார். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து இணையவெளியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு