Published:Updated:

`சொத்துகள் குறித்து நித்யானந்தா எழுதிய `உயில்' '!- காஞ்சிபுரம் மடாதிபதி சொல்வது என்ன?

நித்யானந்தா
நித்யானந்தா

``எங்கிட்டேயும் சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடத்தான் போகிறேன். வேண்டாமென்று சொல்லவா போகிறேன்"

நித்யானந்தாவை பெங்களூரு மற்றும் குஜராத் காவல்துறையினர் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈக்வடார் நாடு அருகே உள்ள தனித் தீவை வாங்கி அங்கே நித்யானந்தா குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் வலைதளங்களில் லைவ் வீடியோ மூலம் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்கங்களை போதிக்கிறார் நித்தி.

இந்த நிலையில் நித்யானந்தா பற்றி அவரின் முன்னாள் சீடர்களும், அவரால் பாதிக்கப்பட்டவர்களும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு ஒருபடி மேலே போய் நித்யானந்தாவே அவரைப்பற்றி குதர்க்கமாக எதையாவது பேசி வீடியோவை வைரலாக்கி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் `தான் இறந்தால் எந்த முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்? என்னுடைய சொத்துகள் யாருக்குச் செல்ல வேண்டும்?’ என்பது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார் நித்யானந்தா.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல மடம்
காஞ்சிபுரம் தொண்டை மண்டல மடம்

நித்யானந்தா பேசிய வீடியோவில், ``நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்கப் போகிறேன். என் மறைவுக்குப்பிறகு என்ன செய்ய வேண்டும் என உயிலில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறேன். நான் எப்போது உடம்பை விடுகிறேனோ, அப்போது உடல் பெங்களூரில் உள்ள ஆதீனத்தில், மதுரை ஆதீனத்தின் சன்னிதானங்கள் எந்த முறைப்படி சமாதி செய்யப்படுவார்களோ அந்த முறைப்படி எனக்கும் செய்யப்பட வேண்டும்.

மதுரை ஆதீனத்துக்கு நான் வருவேனோ, வரமாட்டேனோ… போவேனோ, போகமாட்டேனோ… என எனக்குத் தெரியாது. அது பரமசிவனுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் என்னுடைய உடல் இந்த முறைப்படிதான் ஜீவசமாதி செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளேன். மக்கள் கொடுத்த, கொடுக்கப் போகின்ற எல்லாவிதமான நன்கொடை மற்றும் காணிக்கைகள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மூன்று குருபரம்பரைகளுக்கு மட்டுமே சொந்தம் என உயில் எழுதிவைத்துள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

காஞ்சிபுரம் ஞானப்பிரகாச சுவாமிகள்
காஞ்சிபுரம் ஞானப்பிரகாச சுவாமிகள்

`காஞ்சிபுரம் அருகே உள்ள காரைப்பகுதியில் நித்யானந்தாவுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அவர் அழைத்தால் கைலாசா சென்று வருவேன்’ என காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நித்யானந்தாவின் உயில் பற்றி அவரிடம் கேட்டபோது, ``நித்யானந்தா எதையாவது பேசிட்டுப் போறார். அது அவர் இஷ்டம். உங்களுக்குக் காபி கொடுத்தால் வேணாம்னு கீழே கொட்டிவிடுவீர்களா? எங்கிட்டேயும் சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடத்தான் போகிறேன். வேண்டாமென்று சொல்லவா போகிறேன். நித்யானந்தா சொத்துகள் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. நித்யானந்தா இறந்ததுக்கப்புறம்தான் அவர் என்ன உயில் எழுதி வச்சிருக்காருன்னு தெரியும்” என்கிறார்.

நித்யானந்தாவின் உயில் பற்றி திருவண்ணாமலை ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் ஆகியோர் எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், காஞ்சிபுரம் ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகள் தன் கருத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு