Published:Updated:

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் விஜயேந்திரருக்கு அனுமதி மறுப்பு - குருக்கள் தடுத்ததால் பதற்றம்!

அம்மன் சந்நிதியில் விஜயேந்திரர்.
அம்மன் சந்நிதியில் விஜயேந்திரர்.

கருவறைக்குள் செல்ல முயன்ற விஜயேந்திரரை அங்கு பணியிலிருந்த குருக்கள் சிலர் ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளே செல்லக் கூடாது எனத் தடுத்ததால், பரபரப்பு நிலவியது.

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் செல்ல முயன்ற காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கோயில் குருக்கள் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.

கருவறை வாயிலில் விஜயேந்திரர்.
கருவறை வாயிலில் விஜயேந்திரர்.

ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோயில் கருவறையிலிருக்கும் ராமநாதசுவாமிக்கு பூஜை செய்வது உள்ளிட்ட பணிகளை சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற மகராஷ்டிரா மாநிலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட குருக்கள் மட்டுமே செய்வது கோயிலின் ஆகம விதியாக இருக்கிறது. இவர்கள் தவிர்த்து சிருங்கேரி சங்கராச்சாரியார், நேபாள மன்னர் ஆகியோர் மட்டுமே கருவறைக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்தார். அவரது வருகை குறித்து கோயில் நிர்வாகத்துக்கு முன்னதாகவே தகவல் கொடுக்கப்பட்டு, கோயில் மூலஸ்தானங்களில் பூஜை செய்வதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை கோயிலுக்கு வந்த விஜயேந்திரருக்கு நிர்வாகத்தின் சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் சென்ற விஜயேந்திரர், கருவறையிலுள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்காக பூஜைப் பொருள்கள், தங்கக் காசுமாலை, வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றுடன் கருவறைக்கு முன்பாகவுள்ள அர்த்த மண்டபத்திற்குள் சென்றார்.

விஜயேந்திரரை அனுமதிக்க கோரி வாக்குவாதம்.
விஜயேந்திரரை அனுமதிக்க கோரி வாக்குவாதம்.

தொடர்ந்து மூலவர் வீற்றிருக்கும் கருவறைக்குள் செல்ல முயன்ற விஜயேந்திரரை, அங்கு பணியில் இருந்த குருக்கள் சிலர் ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளே செல்லக் கூடாது எனக் கும்பிட்டபடி தடுத்திருக்கிறார்கள். ஆனால், கருவறைக்குள் செல்ல உரிய அனுமதி பெற்றே வந்திருப்பதாக காஞ்சி சங்கராச்சாரியார் தரப்பினர் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், அங்கு பணியில் இருந்த குருக்கள், விஜயேந்திரரை கருவறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். இதனால் அவருடன் வந்திருந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்கும்படி தடுப்பில் ஈடுபட்ட குருக்கள்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

காஞ்சி மடம் மருத்துவக்கல்லூரி இனி `கல்வித்தந்தை'க்கா... திருவனந்தபுரம் ட்விஸ்ட்! - கழுகார் அப்டேட்ஸ்

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தக்கார் குமரன் சேதுபதி மற்றும் கோயில் அதிகாரிகள் தடுப்பில் ஈடுபட்ட குருக்களைச் சமாதானம் செய்ததுடன், விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்கச் செய்தனர். அதன் பிறகு விஜயேந்திரர் கருவறைக்குள் சென்று, அபிஷேகம் செய்து, பூஜை நடத்தி வழிபட்டார். ஆனால், அவர் பூஜை செய்வதை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி சந்நிதியிலுள்ள திரைச் சீலைகளைக்கொண்டு குருக்கள் மறைத்துவிட்டனர். இதனால் விஜயேந்திரர் பூஜை செய்வதைக் காண முடியாத அவரது பக்தர்கள் சந்நிதி வாசலில் முன்பிருந்தபடி குருக்களுக்கு எதிராகக் கூச்சலிட்டனர். பிறகு, கருவறையிலிருந்து வெளியே வந்த விஜயேந்திரர் அர்த்த மண்டபத்தில் நின்று மூலவருக்கு தீபாராதனை செய்தார்.

அம்மன் சந்நிதியில் விஜயேந்திரர்.
அம்மன் சந்நிதியில் விஜயேந்திரர்.

பின்னர், அம்மன் சந்நிதிக்குச் சென்று பூஜை செய்தார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் கோயிலின் மூலஸ்தானப் பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. காஞ்சிமட மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ராமேஸ்வரம் கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் வந்திருந்தார். அப்போது அவர் கருவறைக்குள் செல்ல முயன்றார். ஆனால், அங்கு பணியில் இருந்த குருக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு