Published:Updated:

`நவராத்திரி வீடியோ; போதைப்பொருள் பயன்பாடு!'- கங்கனாவைச் சுற்றும் சர்ச்சை

கங்கனா ரணாவத் - நக்மா
கங்கனா ரணாவத் - நக்மா

`தான் போதைப்பொருள் உட்கொண்டதாக ஒப்புக்கொண்ட கங்கனாவுக்கு ஏன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பவில்லை?' என நடிகையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நக்மா கேள்வியெழுப்பியிருக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில், பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்தநிலையில், `கங்கனாவுக்கு ஏன் சம்மன் அனுப்பப்படவில்லை?’ என்று நடிகையும், காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான நக்மா கேள்வியெழுப்பியிருக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத், தன் ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து, புதுப்புதுச் சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், சுஷாந்துக்குத் தெரியாமல் நடிகையும், சுஷாந்தின் தோழியுமான ரியா அவ்வப்போது போதை மருந்தைத் தண்ணீரிலும் உணவிலும் கலந்துகொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விசாரணையில், நடிகை தீபிகாவுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ்அப் உரையாடல் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
sentinelassam

விசாரணையின் முடிவில் நடிகை தீபிகா படுகோன், நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். ஃபேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாலிவுட் நடிகர் ஆதித்யன் சுமன் என்பவர், நடிகை கங்கனா ரணாவத்-தான் தனக்கு போதைப்பொருளை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர் மூலமே இந்தப் பழக்கத்துக்கு அடிமையானதாகவும் கூறியிருந்தார். மேலும், கங்கனா ரணாவத்தும் போதைப்பொருள் பழக்கம் கொண்டவர்தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது, கங்கனாவுக்கு எதிராக இந்தச் சம்பவத்தை பலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ஆதித்யன் சுமன், ``2016-ம் ஆண்டே இந்தச் சம்பவம் குறித்து போதுமான அளவுக்குப் பேசிவிட்டேன். அந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இனிமேல் அது குறித்துப் பேச விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் வழக்கு: தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோருக்கு சம்மன் - பின்னணி என்ன?

இதற்கிடையே, கங்கனா கடந்த மார்ச் மாதம் நவராத்திரியின்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த வீடியோ இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், ``நான் என் வீட்டைவிட்டு ஓடிவந்தவுடன், சுமார் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் திரைப்பட நட்சத்திரமாகவும் மாறினேன். அந்தக் காலத்தில் போதைக்கு அடிமையாகியிருந்தேன். என் வாழ்க்கையில் இவ்வளவு நடக்கிறது... நான் இப்படிப்பட்டவர்களின் கைகளில் சிக்கிக்கொண்டேன். இந்த ஆபத்தான விஷயங்கள் அனைத்தும் என் வாழ்க்கையில் நிகழ்ந்தன" என்று கங்கனா கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக், ``இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கங்கனா ரணாவத்திடம் விசாரணை நடத்துவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

நக்மா
நக்மா

மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநில மாநில பா.ஜ.க தலைவருமான பிரவீன் தாரேகர் இது குறித்துப் பேசுகையில், ``கங்கனா போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறியிருந்தால், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) விசாரணை நடத்த வேண்டும். சட்டம், நம் நாட்டில் அனைவருக்கும் சமம். திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக நேரிட்டால், யாரும் அதை ஆதரிக்க மாட்டார்கள்'' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த கங்கனா, ``நான் போதை மருந்து பயன்படுத்துவோருடன் தொடர்பிலிருந்ததைக் கண்டறிந்தால், தவற்றை ஒப்புக்கொள்ளத் தயார்'' என்று தெரிவித்தார்.

பாலிவுட் நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், கங்கனாவுக்கு மட்டும் சம்மன் அனுப்பாதது ஏன் என்று நக்மா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

``தான் போதைப்பொருள் உட்கொண்டதாக ஒப்புக்கொண்ட கங்கனாவுக்கு ஏன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பவில்லை? நடிகைகளின் வாட்ஸ்அப் சாட் அடிப்படையில் மட்டும்தான் அவர்கள் சம்மன் அனுப்புவார்களா... அந்தத் தகவலை ஊடகங்களுக்குக் கொடுத்து நடிகைகளின் பெயரைக் கெடுப்பதுதான் என்.சி.பி-யின் வேலையா?” என்று நக்மா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு