Published:Updated:

புதுச்சேரியில் சரணடைந்த `கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் நடராஜன்!

கந்தர் சஷ்டிக் கவசம் - கறுப்பர் கூட்டம்
கந்தர் சஷ்டிக் கவசம் - கறுப்பர் கூட்டம்

கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதற்காக கறுப்பர் கூட்டம் `யூ டியூப்’ சேனலைச் சேர்ந்த தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன் இன்று புதுச்சேரியில் சரணடைந்தார்.

கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பி.ஜே.பியினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்தச் சேனலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று தமிழக பி.ஜே.பி தலைவர் முருகன் தலைமையில் இன்று போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட அந்தச் சேனனில் தொகுப்பாளரான சுரேந்தர் நடராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இன்று புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர் சரணடைய வந்திருப்பதாக தெரிவித்தார்.

சரணடைந்த சுரேந்தர் நடராஜன் (இடது ஓரம்)
சரணடைந்த சுரேந்தர் நடராஜன் (இடது ஓரம்)

ஆனால் வழக்கு தமிழக காவல் நிலையத்தில் இருப்பதால் சுரேந்தர் நடராஜனை கைது செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர் அரியாங்குப்பம் போலீஸார். அதேசமயம் சுரேந்தர் நடராஜன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சுரேந்தருக்கு பாதுகாப்பு வழங்கியது புதுச்சேரி காவல்துறை தலைமை. அடுத்த சிலமணி நேரங்களில் காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர், சுரேந்தர் நடராஜனை கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்தர் நடராஜன், ``கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து நான் தவறாகப் பேசிவிட்டதாகக் கூறுகிறார்கள். கந்தர் சஷ்டிக் கவசத்தில் இருக்கும் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வார்த்தையைக் கூட நான் கூடுதலாகப் பேசவில்லை.

சர்ச்சை:`கூட்டுறவுப் பொருள்களை வாங்கினால்தான் ரேஷன்!’ - கட்டாயப்படுத்தும் கடை ஊழியர்கள்

இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் விமர்சிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குக் கிடையாது. நான் இந்து மதத்தில் பிறந்தவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேலை செய்தவன் நான். பெரியார் இயக்கத்தின் தாக்கத்தால், நான் இப்போது பெரியார் இயக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் இவர்கள் எண்ணம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு