Published:Updated:

`சாலையை மறித்துக் கூட்டம்; செந்தில் பாலாஜி மீது அவதூறு' - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு

கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசும் திண்டுக்கல் சீனிவாசன்

கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக-வினர் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதாக, அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது கரூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

`சாலையை மறித்துக் கூட்டம்; செந்தில் பாலாஜி மீது அவதூறு' - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு

கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக-வினர் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதாக, அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது கரூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Published:Updated:
கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசும் திண்டுக்கல் சீனிவாசன்

கரூரில் சமீபத்தில் நடைபெற்ற கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருக்கான தேர்தலில், தி.மு.க-வைச் சேர்ந்தவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில், அ.தி.மு.க., தி.மு.க தலா ஆறு உறுப்பினர்களைக்கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மாவட்ட தி.மு.க-வினரால் கடத்தப்பட்டதாக, அ.தி.மு.க சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேநேரம், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் தி.மு.க-வுக்கு வாக்களிக்க 7-க்கு 4 என்ற விகிதத்தில் தி.மு.க., மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றியது. ஆனால், 'தி.மு.க-வினர் அடாவடியாகச் செயல்பட்டு, துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட்டனர்.

கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசும் கே.பி.முனுசாமி
கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசும் கே.பி.முனுசாமி

அவர்களின் அராஜகப் போக்கைக் கண்டித்து, கடந்த மாதம் 29 -ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்' என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதற்கு கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி மறுக்க, அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியது. கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த கோர்ட் அனுமதி வழங்க, அதன்படி கரூரில் கடந்த 2 -ம் தேதி தி.மு.க-வுக்கு எதிராக, அ.தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் ஈரோடு சாலையில் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கரூர் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினர்.

கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசும் நத்தம் விசுவநாதன்
கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசும் நத்தம் விசுவநாதன்

இந்தப் பொதுக்கூட்டம் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்தியது, தடைசெய்யப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்களைப் பயன்படுத்தியது மற்றும் பொது இடத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த வீடியோக்களை வெளியிட்டு, இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தும்விதமாகச் செயல்பட்டது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனால், இந்தக் காரணங்களை முன்வைத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் சின்னசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மீது கரூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.