Published:Updated:

கரூர் அரசுப்பள்ளியைக் கண்டித்த ஆட்சியர்; `கடும் சொற்கள் தவிர்க்கப்படும்’ - விடுமுறை விவகாரப் பின்னணி

மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், `வரும் காலங்களில் கடும் சொற்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும்' என்று தனது செயலுக்கு மன்னிப்பு கோரும்விதமாகப் பதிவிட, அதன் பிறகே விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்தப் பள்ளிக்கு கல்வித்துறை உயரதிகாரியின் அனுமதியோடு விடுப்பு விடப்பட்டது. ஆனால், இந்த விஷயம் தெரியாத, கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், அந்தப் பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்று, `இது என்ன உங்க அப்பன் வீட்டு பள்ளியா?' என்று பேசியதோடு, 'இந்தப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க' என்று கல்வித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியர் ஆய்வுசெய்தபோது...
ஆட்சியர் ஆய்வுசெய்தபோது...

இந்த விவகாரம் ஒருபக்கம் வைரலாக, மற்றொருபுறம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, ஆட்சியருக்கு இந்த விஷயத்தை தெரிவிக்காததே இத்தனைக்கும் காரணம் எனத் தெரியவந்தது. அதன் பிறகே, விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.

நாமக்கல்: குடும்பத் தகராறு; கொதிக்கும் எண்ணெயைக் கணவன் தலையில் ஊற்றிய மனைவி!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகேயுள்ள பொரணியில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில், இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில், சுகாதாரத்துறையினர் அந்தப் பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், பொரணி அரசு மேல்நிலை பள்ளிக்குக் கடந்த செவ்வாய் அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை. இது குறித்து, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கலெக்டர் கேட்டபோது, அவர் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதனால், கோபமான ஆட்சியர், 'இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா... ஒன்றரை வருடமா வீட்டில் இருந்தீங்க. இப்போது பள்ளிக்கு வருவதற்கு என்ன?' என்கிறரீதியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

ஆட்சியர் ஆய்வுசெய்தபோது...
ஆட்சியர் ஆய்வுசெய்தபோது...

அதோடு, ஆசிரியர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்த நிலையில், பிற ஆசிரியர்கள் எங்கே என கலெக்டர் கேட்டபோது, 'அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால் பள்ளிக்கு வரவில்லை' என்று தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தியிடம், 'பள்ளிக்கு விடுமுறை விட அனுமதி அளித்து உத்தரவு ஏதும் வழங்கப்பட்டதா?' எனக் கேட்டார். அப்போது அவர், 'இல்லை' என்று கூறினார். இதனால் கோபமடைந்த ஆட்சியர், தனது கவனத்துக்குக் கொண்டுவராமலும், கல்வித்துறையின் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து பள்ளிக்கு விடுமுறை விட்டது ஏன் என்பது குறித்தும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது ஏன் என்பது குறித்தும், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் மறுநாள் மீடியாவில் செய்தியாக, விவகாரம் பெரிதானது. இந்தநிலையில், ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்த, `பள்ளியில் நடந்தது இதுதான்’ என்று ஒரு விளக்கத்தை சமூக வலைதளங்களில் பரப்பினர். அதில், `அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் ஆசிரியர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் கொடுப்பதாக இருக்கின்றன. கரூர் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரானா தொற்று சனிக்கிழமை (செப்டம்பர் 4-ம் தேதி) உறுதிசெய்யப்பட்டவுடன், உடனடியாக விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அன்று அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்கின்றனர். பள்ளி ஆசிரியைக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது, சனிக்கிழமையே கரூர் மாவட்ட கல்வித்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி
பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி

இந்தத் தகவல் தெரிந்தும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்தத் தகவலை தெரியாமல் மறைத்தது யார்... கோவிட் பாதித்த செய்தி மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி சனிக்கிழமையே தெரிவிக்கப்பட்டிருந்தால், அவர் முடிவு செய்திருப்பாரே... திங்கள்கிழமை (செப். 6) காலைகூட மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டக் கல்வி அலுவலரும் ஒன்றாக இருந்திருக்கிறார்களே... ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில்கூட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு டி.இ.ஓ., சி.இ.ஓ என யாராவது ஒருவர் இந்தத் தகவலைச் சொல்லி ஆலோசனை கேட்டிருக்கலாமே...

மெத்தனமாகச் செயல்பட்டது சி.இ.ஓ., டி.இ.ஓ உட்பட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்தானே... அதோடு, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் அவர்களின் அறிவுறுத்தல்படிதான் செவ்வாய்கிழமை (செப். 7) பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத் தெரிவிக்காமல், ஆட்சியரின் அருகில் நின்ற கரூர் மாவட்ட கல்வி அலுவலர் வாய்மூடி மௌனமாக இருந்தது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. கரூர் மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரியாமல்தான், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொரணி பள்ளிக்கு விடுமுறைவிட்டாரா... உண்மைச் செய்தி இப்படி இருக்க, ஏதோ ஆசிரியர்கள் தவறு செய்ததுபோல மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

ஆட்சியர் பிரபுசங்கரின் ட்வீட்
ஆட்சியர் பிரபுசங்கரின் ட்வீட்

`இரண்டு அதிகார மோதல்களுக்கு இடையே அப்பாவி ஆசிரியர்களை பலிகடா ஆக்கிவிட வேண்டாம்' என்று பதிவிட, விவகாரம் விறுவிறுப்பானது. இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த ஆய்வின்போது கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் விடுமுறை அளித்தது குறித்து மட்டுமே எச்சரிக்கை செய்யப்பட்டது. வரும் காலங்களில் கடும் சொற்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். கரூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றிவருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துவோம்' என்று தனது செயலுக்கு மன்னிப்பு கோரும்விதமாக பதிவிட, அதன் பிறகே விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்தநிலையில், இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய நேரடி நியமன முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கரூர் மாவட்ட இணைச் செயலாளர் கோ.இளங்கோ,

``அந்தப் பள்ளியில் முறைப்படி உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில்தான், அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், அது தெரியாமல் ஆட்சியர், பள்ளி ஆசிரியர்களைக் கடுமையான வார்த்தைகளால் பேசினார். கம்யயூனிகேஷன் பிரச்னையால் நடந்த தவறு இது. ஆனால், 'இது உங்க அப்பன் வீட்டு சொத்தா, ஒன்றரை வருஷமா ஆசிரியர்கள் வீட்டில் இருந்தீங்க' என்று ஆட்சியர் வீசிய சூடான வார்த்தைகள், ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் புண்படுத்திவிட்டன. உண்மையில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நாங்க, அவ்வளவு அர்ப்பணிப்போடு பணிபுரிந்துவருகிறோம். அந்தப் பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, கிருமிநாசினி தெளிக்க வந்திருக்காங்க. ஆனா, ஆட்சியர் அப்படிப் பேசியது, அவர்கள் மனதை எவ்வளவு புண்படுத்தியிருக்கும்.... பள்ளி என்பது யார் வீட்டு சொத்தும் இல்லை.

கோ.இளங்கோ
கோ.இளங்கோ

அது, நம் அனைவரின் சொத்து. கல்வியை வளர்ப்பதில் ஆசிரியர்கள், ஆட்சியர் என எல்லோரும் சேர்ந்துதான் பங்கெடுத்துக்கணும். ஆனால், இதுபோல் பேசுவது எங்கள் உற்சாகத்தைக் குறைக்கவே செய்யும். ஏற்கெனவே, பல அரசுப் பள்ளிகளில் பியூன், தூய்மைப் பணியாளர்கள், தோட்டக்காரர்கள். இரவு வாட்ச்மேன் எனப் பல வேலையாட்கள் இல்லாமல், அந்த காலியிடங்களில் புது நபர்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அந்த விஷயங்களையும், நாங்க சொந்த முயற்சியில் மாற்று ஏற்பாடு செய்து, பள்ளிகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துவருகிறோம். இது போன்ற சூழலில், எங்களைத் தட்டிக்கொடுக்கக்கூட வேண்டாம்... எங்க உற்சாகத்தைக் குறைக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரிடம் பேசினோம்.

``அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. அதை விடுங்கள். வேறு விஷயங்கள் குறித்துப் பேசலாமே..." என்றதோடு, முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு