Election bannerElection banner
Published:Updated:

கரூர்: பாதியில் நிற்கும் சாலை; முழுமை பெறாத மைதானம்! - அவசரகதியில் திறக்கப்பட்ட திட்டங்கள்

அம்மா சாலையைத் திறந்த ஆட்சியர் மலர்விழி
அம்மா சாலையைத் திறந்த ஆட்சியர் மலர்விழி ( நா.ராஜமுருகன் )

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் சில மணி நேரத்துக்கு முன்பு, கரூரில் அடுத்தடுத்து அவசரகதியில் நடைபெற்ற திறப்புவிழா சம்பவங்கள், நேற்று மாலை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், கரூரில் அவசரகதியில் முழுமை பெறாத பணிகளை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்த சம்பவம், கரூர் மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. சமூக ஆர்வலர்கள் இந்தத் திறப்புவிழாக்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி
பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி
நா.ராஜமுருகன்

கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 புறவழிச் சாலை வரை, ரூ. 21.12 கோடியில் அம்மா சாலை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 19-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. இந்தப் பணியை அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த அன்பழகன் தொடங்கிவைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்தப் பணிகளில் நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைக்கும் பணி எனத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருப்பதாக, நேற்று மதியம் 12 மணியளவில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அவசரகதியில் அம்மா சாலை திறப்புவிழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அம்மா சாலையை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி திறந்துவைத்தார்.

மலர்விழி
மலர்விழி
நா.ராஜமுருகன்

அந்த நிகழ்ச்சியில் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, ``போக்குவரத்துத்துறை அமைச்சரின் கனவுத் திட்டமான அம்மா சாலைத் திட்டம் நிறைவேற, நீதிமன்றத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் என அனைத்தையும் சரிசெய்து, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அம்மா சாலை திறந்துவைக்கப்பட்டிருக்கிறது" எனப் பேசினார்.

ஆனால், இந்த அம்மா சாலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 7 முதல் பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே முறை பாலம் வரை மட்டுமே பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. முழுப் பணிகளும் முடிவடைவதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இப்படித் திறந்திருக்கிறார்கள். இந்தச் சாலை திறக்கும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புதான், அவசரகதியில் சாலையோர நடைபாதை கல் பதிப்பு மற்றும் வண்ணம் பூசும் வேலைகள் நடைபெற்றன. ஆனால், பெரிய குளத்துப்பாளையம் முதல் கரூர் ரயில்வே சந்திப்பு வரை பணிகள் முழுமை பெறாமல் மண் சாலைகளாக மட்டுமே இருக்கின்றன.

கரூர்: வேட்பாளரை அறிவிக்கவில்லை... இருந்தும் பிரசாரத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி!

கடந்த வாரம் பிப்ரவரி 12-ம் தேதி சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், அம்மா சாலைப் பணிகள் ரயில்வேதுறை நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் நடைபெறுவதாகக் கூறி, அங்கு திடீர் தடுப்புவேலிகளை அமைத்து தடுத்தனர். இதனால், அங்கு விரைந்துவந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கரூர் நகராட்சி ஆணையர் ஆகியோர், ரயில்வேதுறை அதிகாரிகளிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், `முறையான அனுமதி கிடைத்த பின்னர் பணிகள் நடைபெறும்' என உறுதி அளித்திருந்தனர். இந்தச் சம்பவம் நடைபெற்று பத்து நாள்களே ஆகியிருக்கும் நிலையில், தற்போது அம்மா சாலை திறப்புவிழா நேற்று நடைபெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடைமேடையுடன் கூடிய பூங்கா திறப்பு
நடைமேடையுடன் கூடிய பூங்கா திறப்பு
நா.ராஜமுருகன்

மேலும், கரூர் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 புறவழிச்சாலை வரை ரூ 21 கோடியில் தொடங்கப்பட்ட பணிகளில், தற்போது ரூ.18 கோடி மதிப்பிலான பணிகள் மட்டுமே முடிவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக, பெரியார் நகர் முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 இணைப்பு சாலை வரை மட்டுமே அமைக்கப்பட்ட ரூ. 18 கோடி மதிப்பிலான சாலை மட்டுமே திறந்துவைக்கப்பட்டிருப்பதாக அங்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகை தெரிவிக்கிறது.

இது இப்படியென்றால், கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் நடைமேடையுடன்கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காவை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கரூர் நகராட்சி ஆணையர் சுதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், தமிழ்நாடு காகித ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். அங்கும் பணிகள் நிறைவு பெறாமல், சுற்றுச் சுவர் மட்டுமே வண்ணம் பூசப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து, தோரணக்கல்பட்டியில் புதிதாக அமையவிருக்கும் கரூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருவதால், அந்த இடத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையைவைத்து, திடீர் சிலை திறப்புவிழாவை மேற்கொண்டனர்.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலை திறப்பு
வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலை திறப்பு
நா.ராஜமுருகன்

இப்படி, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் சில மணி நேரத்துக்கு முன்பு, கரூரில் அடுத்தடுத்து அவசரகதியில் நடைபெற்ற திறப்புவிழா சம்பவங்கள், நேற்று மாலை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 'மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக, வேலைகள் முழுமையாக முடியாத நிலையில் ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்து இவற்றைத் திறக்கவைத்திருப்பது கொடுமை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு