Published:Updated:

``நான் என்ன ஹோட்டல் சர்வரா?"- கரூர் கலெக்டரின் சர்ச்சை ஆடியோ

'சரவணபவன் சர்வர்னு நினைச்சீங்களா கலெக்டரை எல்லாம்?. வை மேன் போனை, ராஸ்கல்!"

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

தங்கள் பகுதியில் ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருப்பதை பற்றிச் சமூக ஆர்வலர் ஒருவர் வைத்த கோரிக்கைக்குக் கோபமாக பதிலளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், `சரவணபவன் சர்வர்னு நினைச்சீங்களா கலெக்டரை எல்லாம்?. வை மேன் போனை, ராஸ்கல்!" என்று பேசிய ஆடியோவை, அந்தச் சமூக ஆர்வலர் சமூகவலைதளங்களில் வெளியிட, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 சுஜித்
சுஜித்

கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுஜித் என்ற இரண்டரை வயதுச் சிறுவன், அவன் வீட்டருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும், சமூக ஆர்வலர்களும் தமிழகம் முழுக்க இப்படி பயன்பாட்டில் இல்லாத, மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அக்கறை காட்டி வருகிறார்கள். சில தன்னார்வ அமைப்புகள், `இதுபோல் மூடப்படாமல், பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானமும் விருதும் வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்கள்.

Vikatan

இந்நிலையில்தான், கரூர் மாவட்டம், குளித்தலை பக்கமுள்ள செம்பிநத்தத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கும்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு போன் மூலம் தகவல் சொல்கிறார். ஆனால், அவருக்கு முறையாக பதில் சொல்லாத ஆட்சியர், `சரவணபவன் சர்வர்னு நினைச்சீங்களா, கலெக்டரை எல்லாம்' என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆடியோவை அந்தச் சமூக ஆர்வலர் சமூகவலைதளங்களில் வெளியிட, ஆட்சியருக்கு பலத்த எதிர்ப்பலை கிளம்பியிருக்கிறது.

அன்பழகன் (மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (மாவட்ட ஆட்சியர்)

நமக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் பேசியதாகச் சொல்லப்படும் அந்த ஆடியோ கிடைத்தது. அந்தச் சமூக ஆர்வலர், ஆட்சியர் தன்னிடம் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோவை மட்டும் வெளியிட்டுள்ளார். தன்னை இன்னும் யார் என்று வெளியில் அவர் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில், சமூகவலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும் அந்த ஆடியோவில், "செம்பிநத்தத்திலிருந்து பேசுகிறேன் சார்" என்று அந்த சமூக ஆர்வலர் ஆரம்பிக்கிறார். "எங்கே இருந்து பேசுறீங்க?" என்று ஆட்சியர் கேட்கிறார். "செம்பிநத்தம்" என்கிறார் சமூக ஆர்வலர். "எங்க ஊர்ல போர்வெல் குழி மூடப்படாமல் இருக்கு சார்" என்று சமூக ஆர்வலர் சொல்ல, "செம்பிநத்தம் எந்த தாலுகாவில் இருக்கு" என்று ஆட்சியர் கேட்கிறார்.

"தரகம்பட்டி பக்கத்துல, குளித்தலை தாலுகாவில் இருக்கு" என்று சமூக ஆர்வலர் சொல்ல, "பி.டி.ஓனு ஒருத்தர் இருக்கிறாரே, அவர்கிட்ட பேசுறதை தரக்குறைவா நினைக்கிறீங்களா?" என்று கேட்கிறார், ஆட்சியர். அதற்கு அந்தச் சமூக ஆர்வலர், "பி.டி.ஓகிட்ட சொன்னோம் சார். ஆனா, நடவடிக்கை எடுக்கலை" என்று சொல்கிறார். ஆனால், நடுவில் குறுக்கிடும் ஆட்சியர், "அடுத்து நான் சொல்றேன். பி.டி.ஓகிட்ட சொல்லிட்டோம், நடவடிக்கை எடுக்கலை, அதானே?. நேர்ல போய் சொன்னீங்களா?" என்று கேட்கிறார்.

சுஜித் தாய்
சுஜித் தாய்

``அவர் ஆபீஸே வரலை சார்" என்கிறார் சமூக ஆர்வலர். அதைக் கேட்ட ஆட்சியர், "என்னைக்கு போய் பார்த்தீங்க?" என்று கேட்கிறார். அதற்கு சமூக ஆர்வலர், "மணப்பாறை விவகாரம் நடந்தப்பவே இன்ஃபார்ம் பண்ணினோம்" என்கிறார். அதைக் கேட்டு கோபப்படும் ஆட்சியர் அன்பழகன், "எல்லாம் சரி. அவ்வளவு அக்கறை இருந்தா, பி.டி.ஓகிட்ட சொல்லுங்க முதல்ல. அப்புறம் அவர்கிட்ட கூப்புட்டு நான் சொல்றேன், ரைட்டா?" என்கிறார். அந்த சமூக ஆர்வலர், "அக்கறை இருந்துச்சுன்னாவா சார்.." என்று கேட்க, இன்னும் கோபப்படும் ஆட்சியர், "ஆமாம், உண்மையிலே, உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்துச்சுன்னா, நேர்ல போய் சொல்லுங்க. உங்களுக்கு என்ன, சரவணபவன் சர்வர்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா, கலெக்டரை எல்லாம். போனை வை மேன், ராஸ்கல்" என்று சர்ச்சைக்குரிய வகையில் உரையாடல்கள் உள்ளன.

இந்தச் சம்பவத்தை மீடியாவும் போட்டி போட்டுக்கொண்டு செய்தியாக்க, அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன். நாமும் ஆட்சியர் அன்பழகனிடம் நேரிலும், போனிலும் பேச பலமுறை முயன்றோம். நம்மிடமும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, ``அந்தக் குரல் கலெக்டர் குரலே இல்லை'' என்று மறுத்தனர். ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், "தேர்தலை நிறுத்திப்புடுவேன்" என்று ஆட்சியர் அன்பழகன் பேசியதாக, ஜோதிமணியால் சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட ஆடியோ சர்ச்சையைக் கிளப்பியது.

நடுக்காட்டுப்பட்டி விவகாரம்
நடுக்காட்டுப்பட்டி விவகாரம்

இப்போது, ஒரு உயிரையே பலிவாங்கிய ஆழ்துளைக் கிணறு விவகாரத்தில் சமூக ஆர்வலருக்குத் தகுந்த பதில் அளிக்காமல், பொறுப்பில்லாமல் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ மூலம், மறுபடியும் சர்ச்சை வளையத்தில் சிக்கியிருக்கிறார், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.