Published:Updated:

`20 வருட வழக்கு; ரூ.1.40 கோடி இழப்பீடு!'-கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த அமீனா

ரயில்வே நிர்வாகம் சார்பில், விவசாயி சுப்பிரமணியத்துக்கு இழப்பீடு வழங்க இரண்டு மாதகாலம் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்களைக் கடந்தும், ரயில்வே நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.

கரூர் ரயில் நிலையம்
கரூர் ரயில் நிலையம்

ரயில்வே நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்திய வகையில் விவசாயிக்கு வழங்க வேண்டிய 1.40 கோடி ரூபாய்க்காக நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் ரயில் நிலையம்
கரூர் ரயில் நிலையம்
Vikatan

கரூர் - சேலம் இடையிலான அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக, கடந்த 1999-ம் ஆண்டு வாங்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் உள்ளிட்ட நான்கு பேர்களுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதையடுத்து, அப்போது, தற்காலிகமாக அந்த நிலத்துக்கு ஒரு லட்சத்து 67,000 ரூபாய் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு, ரயில்வே நிர்வாகம் தனது நிலத்துக்கு உரிய தொகையை வழங்கவில்லை என விவசாயி சுப்பிரமணியம் வேதனை தெரிவித்தார்.

கரூர் ரயில் நிலையம்
கரூர் ரயில் நிலையம்

அதோடு, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, கடந்த 2010-ம் ஆண்டு கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கரூர் கூடுதல் சார்பு நீதிமன்றம், 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு, ஒரு கோடியே 40 லட்சம் நிதியை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதுதொடர்பாக பலமுறை ரயில்வே நிர்வாகத்துக்குத் தகவல் அளித்தும், நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, 2018-ம் ஆண்டு விவசாயி சுப்பிரமணியம், கரூர் கூடுதல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, அந்த மனுவை ஏற்றுக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், `ரயில்வே நிர்வாகம் விவசாயி சுப்பிரமணியத்துக்கு உரிய இழப்பீட்டை வழங்காவிட்டால், கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிடுகிறேன்' என்று கூறியிருந்தார். அப்போது, ரயில்வே நிர்வாகம் சார்பில், விவசாயி சுப்பிரமணியத்துக்கு இழப்பீடு வழங்க இரண்டு மாதகாலம் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்களைக் கடந்தும், ரயில்வே நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.

ஜப்தி செய்ய வந்தபோது...
ஜப்தி செய்ய வந்தபோது...

இதனால், கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய வழக்கறிஞர் சுப்பிரமணியம் மற்றும் நீதிமன்ற அமீனா உள்ளிட்ட அலுவலர்கள், ரயில் நிலையத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை எதிர்பார்க்காத கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், சேலம் கோட்ட உயரதிகாரிகளிடம் பேசியபிறகு, `உயரதிகாரிகள் இன்னும் ஒருமாத காலம் அவகாசம் கேட்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

இதையடுத்து, டிசம்பர் மாத இறுதிக்குள் நீதிமன்ற உத்தரவுபடி, இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக ரயில்வே உயரதிகாரிகள் ஒப்புக் கொண்டதன் பேரில், ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.