Election bannerElection banner
Published:Updated:

கரூர்: நள்ளிரவில் தானாக இயங்கிய ஏ.சி., கணினிகள்?! - வாக்கு இயந்திரங்கள் அறைக்கு அருகே பரபரப்பு

ஆட்சியரிடம் முறையிடும் தி.மு.க-வினர்
ஆட்சியரிடம் முறையிடும் தி.மு.க-வினர்

கோவையிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் நவீன கன்டெய்னர் லாரிகள் சந்தேகப்படும் வகையில் நிறுத்தப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கரூரிலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அருகிலுள்ள அறையில் தானாக இயங்கிய கணினி, ஏ.சி குறித்துச் சந்தேகம் வலுத்துள்ளது.

கரூரில் நள்ளிரவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகேயுள்ள அறையில் தானாக கம்ப்யூட்டர்கள் இயங்க, தி.மு.க-வினர் அதற்கு எதிராகச் சந்தேகங்களை கிளப்புகிறார்கள். ஏற்கெனவே, கோவை மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு இரவு நேரத்தில் கன்டெய்னர் லாரிகள் வந்தது சர்ச்சையானது. அதற்குள், கரூர் மாவட்டத்தில் கம்ப்யூட்டர்கள் இரவு நேரத்தில் இயங்கியது பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஆட்சியரிடம் முறையிடும் தி.மு.க-வினர்
ஆட்சியரிடம் முறையிடும் தி.மு.க-வினர்
`ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள்; வாக்குப்பதிவிலும் முதலிடம்!' - கரூர் நிலவரம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் என நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலுள்ள கட்டட அறையில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேர சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் காலை, மாலை, இரவு என மூன்று ஷிஃப்ட்களில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், நேற்று இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகேயுள்ள கட்டடத்தில் மட்டும் கம்ப்யூட்டர்கள் ஆட்கள் யாரும் இல்லாமல் இயங்கியதாகவும், பூட்டப்பட்ட அந்த அறைக்குள் ஏ.சி மற்றும் கம்ப்யூட்டர்கள் இயங்கியது குறித்துச் சந்தேகம் எழுப்பிய தி.மு.க-வினர் வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பு குவிந்தனர்.

இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு வடநேரே மற்றும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாசாங் சாய் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து, அந்தக் குறிப்பிட்ட அறையை அதிகாரிகள் திறந்து கணினிகள் எவ்வாறு இயங்கின என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருப்தி அடையாத தி.மு.க-வினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து முறையிட்டனர். தங்களது சந்தேகங்களையும் தெரிவித்தனர். இதனால், அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

கணினிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
கணினிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் `மீண்டும் இன்று காலை விசாரணை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்ததால், தி.மு.க-வினர் கலைந்து சென்றனர். கோவையிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் நவீன கன்டெய்னர் லாரிகள் சந்தேகப்படும் வகையில் நிறுத்தப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கரூரிலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அருகிலுள்ள அறையில் தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி குறித்து பலத்த சந்தேகம் வலுத்துள்ளது. இந்தநிலையில், நம்மிடம் பேசிய சிலர், ``வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள தனியார் கல்லூரிக்கு, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி இரண்டு முறை தனி விமானத்தின் மூலம் கல்லூரி வளாகத்தில் வந்து தேர்தல் கூட்டணிக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க முக்கிய தலைவரான பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித் ஷா தனி ஹெலிகாப்டர் மூலம் வாக்கு எண்ணும் மையமான குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இறங்கி சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக இருந்தார்.

அதன் பிறகே, வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தச் சந்தேகங்கள் தீராத நிலையில், இப்படி வாக்கு எண்ணும் மையத்தின் பக்கத்து அறையில் கணினிகளும், ஏ.சி-யும் தானாக இயங்கியது பலத்த சந்தேகங்களைக் கிளப்புகின்றன. ஆட்சியர் முறையான விசாரணை நடத்தி, எங்களுக்கு உரிய பதிலைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால், தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்புவோம்" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு