முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை, தி.மு.க பிரமுகர் இடித்துவிட்டதாகக் கூறி, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் செய்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கரூர் மாவட்டம், வடக்கு பாளையம் பகுதியில் பேருந்து நிழற்குடை ஒன்று தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும், இந்த நிழற்குடையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்குச் செல்பவர்கள், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் கர்ப்பிணிகள், நோயாளிகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நகரப் பேருந்துக்கு ஏறிச் செல்லும் வகையில் இந்தப் பேருந்து நிழற்குடை, கடந்த 1996 - 2001-ம் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. பேருந்து நிழற்குடை தொடர்ந்து பயன்பட்டுவந்த நிலையில் இந்தப் பேருந்து நிழற்குடை அமைந்திருக்கும் பகுதிக்குப் பின்புறம் தி.மு.க தான்தோன்றிமலை இளைஞர் அணி அமைப்பாளர் திருமூர்த்தி என்பவர் இல்லம் அமைந்திருக்கிறது.

மேலும், இந்தப் பேருந்து நிறுத்தத்துக்குப் பின்னாலிருக்கும் காலி இடத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பேருந்து நிழற்குடை அமைந்திருக்கும் இடம் தனக்குச் சொந்தமானது என்று கூறி, கடந்த மாதம் 21-ம் தேதி இரவோடு இரவாக ஜே.சி.பி இயந்திரத்தைக்கொண்டு திருமூர்த்தி தரைமட்டமாக இடித்து அகற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த நிழற்குடையை பயன்படுத்திவந்த மக்கள், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்தக் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் திருமூர்த்தி, அந்தப் பேருந்து நிறுத்தத்தை மறுபடியும் கட்டித்தருவதாகக் கூறியதால், அந்தப் பிரச்னை அப்போதைக்கு ஓய்ந்திருக்கிறது. ஆனால், திருமூர்த்தி சொன்னபடி அந்தப் பேருந்து நிழற்குடையை இதுவரை கட்டித் தராததால், வெகுண்டெழுந்த பொதுமக்கள், 200-க்கும் மேற்பட்டோர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தமிழக அரசே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை சட்ட விரோதமாக இடித்து அகற்றிய தி.மு.க நிர்வாகிமீது நடவடிக்கை எடு' என்று பதாகையில் எழுதிவைத்தனர். இதனால், சுமார் இரண்டு மணி நேரமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, சர்வேயர் துறையைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகி இடத்தை அளந்தனர். தொடர்ந்து, 'பேருந்து நிழற்குடை ஏற்கெனவே இருந்த அதே இடத்தில் கட்டித் தரப்படும்' என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதோடு, ஜே.சி.பி இயந்திரத்தைக்கொண்டு பேருந்து நிழற்கூடை கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மக்கள் பயன்படுத்திவந்த பேருந்து நிறுத்தத்தை, தி.மு.க பிரமுகர் ஒருவர் இடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விரோதமாக இடித்த கட்சி பிரமுகர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்த அரசு எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.