Published:Updated:

``சுங்கச்சாவடியை ரத்துசெய்யப் பரிந்துரைக்க நேரிடும்!” - எச்சரிக்கும் கரூர் ஆட்சியர்

மணவாசி சுங்கச்சாவடி
News
மணவாசி சுங்கச்சாவடி ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாதது குறித்து உரிய விளக்கம் கேட்டு, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர், தேசிய நெடுஞ்சாலைகள்துறை திட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி
நா.ராஜமுருகன்

ஆனால், அப்பகுதியிலுள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அனுப்பிவந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சுங்கச்சாவடிகளில் சரியான பராமரிப்பு இல்லை என்று திட்ட மேலாளருக்குக் கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ``சுங்கசாவடிகள் இருக்கும் பகுதிகளிலுள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அந்தப் பகுதிகளில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இது குறித்து மாவட்ட அளவில் நடைபெறும் சாலை பாதுகாப்புக்குழுவின் பல கூட்டங்களில் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் சாலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கைப் பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தினேன்.

பிரபுசங்கர்
பிரபுசங்கர்
நா.ராஜமுருகன்

ஆனால், இதுவரை சாலைகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இது குறித்த விளக்கத்தை 10 நாள்களுக்குள் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாள்களுக்குள் பதிலளிக்கத் தவறினால், சட்ட விதிகளுக்குட்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச்சாவடியை ரத்து செய்யவும் ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.