Published:Updated:

`பாம்பு தீண்டியதை மறைத்த சிறுவன்; ஒரு மாதத்தில் 2வது சம்பவம்'- கேரளப் பள்ளிகளில் நடப்பது என்ன?

7 வயதான சிறுவன் முகமது ரேகான் சுல்தான் பத்தேரி அருகிலுள்ள பீனாச்சி அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவருகிறான்.

Snake bite incidents
Snake bite incidents

பாம்பு தீண்டியதை ஆணி குத்தியதாகக் கூறி சிகிச்சை அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி, பள்ளி வளாகத்தில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்ற ஜெரால்டை தொடர்ந்து, முகமது ரேகான் என்ற 2-ம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்தில் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கேரள மாநிலம் பத்தேரி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவி ஷஹலா ஷெரினை கடந்த மாதம் வகுப்பறையிலேயே பாம்பு கடித்தது. உரிய நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் இருந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்பு தீண்டியதில் இறந்த பள்ளி மாணவி
பாம்பு தீண்டியதில் இறந்த பள்ளி மாணவி

இதேபோல் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெரால்ட் என்ற மாணவனை பள்ளி வளாகத்துக்குள் பாம்பு கடித்தது. உடனே அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்து முடிந்து ஒரு மாதத்துக்குள்ளாகவே அடுத்து ஒரு சம்பவம் இதேபோல நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி ஒட்டுப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முகமது ரேகான். 7 வயதான இந்தச் சிறுவன் சுல்தான் பத்தேரி அருகிலுள்ள பீனாச்சி அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவருகிறான்.

Snake bite incidents
Snake bite incidents

வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் சிறிது நேரத்தில் உடலில் அரிப்பு ஏற்படுவதாக பெற்றோரிடம் கூறினான். சிறிது நேரத்திலேயே மயக்கம் ஏற்பட உடனடியாக பத்தேரி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். பாம்பு அல்லது ஏதேனும் விஷப் பூச்சி கடித்திருக்கக் கூடும் என பெற்றோர் மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆனால், அது போன்று எந்த அடையாளமும் இல்லை என தெரிவித்து சிறுவனை திருப்பி அனுப்பினர்.

சிறிது நேரத்தில் சிறுவனின் உடலில் மாற்றம் ஏற்பட்டு துவண்டுபோனான். பதறிய பெற்றோர் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடலில் பாம்பு தீண்டியிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக சிகிச்சையைத் துவக்கினர். தற்போது அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Snake bite incidents
Snake bite incidents

இந்தச் சம்பவம் குறித்து ஒட்டப்பன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ``ரேகானை பள்ளி வளாகத்திலேயே பாம்பு கடித்துள்ளது. இதை ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளான். நேரம் ஆக ஆக பாம்பின் விஷம் உடலில் ஏறி துவண்டுபோய் மயக்கமடைந்தான். தற்போது அவனுக்கு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது" என தெரிவிக்கின்றனர்.