Published:Updated:

`குப்பைத் தொட்டியா நெல்லை?' - இறைச்சிக் கழிவுகளுடன் கேரள லாரியைப் பிடித்த மக்கள்

கேரளாவிலிருந்து எல்லைப் பகுதிகள் வழியாகக் கொண்டு வரப்படும் கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுப் பொருள்கள் தமிழகத்தில் கொட்டப்படுகின்றன.

கோழிக் கழிவுகளுடன் லாரி
கோழிக் கழிவுகளுடன் லாரி

கேரளாவிலிருந்து கோழிக் கழிவுகள், எலெக்ட்ரிக்கல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஆகியவை தமிழகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு ஆட்கள் இல்லாத சாலையோரங்களிலும் நீர்நிலைகளிலும் கொட்டப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. சோதனைச் சாவடிகளைக் கடந்து கழிவுப் பொருள்களை ஏற்றிவரும் லாரிகள் தமிழகத்துக்குள் வந்து சேருவது தொடர்கதையாக நடக்கிறது. 

கேரளாவிலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரி
கேரளாவிலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரி

இந்த நிலையில், கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஓடைகளில் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததால் அப்பகுதியில் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் தீவிரமாகக் கண்காணித்து வந்தார்கள்.

இந்தச் சூழலில், கேரளாவிலிருந்து இரு கன்டெய்னர் லாரிகள் அந்தப் பகுதிக்கு வந்து மர்மமான முறையில் நின்றுகொண்டிருந்தன. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அதில் என்ன இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முயன்றனர். அதன் அருகில் சென்றபோது துர்நாற்றம் அடித்ததுடன், கோழிக் கழிவிலிருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது.

RTI அம்பலம்: கேரளத்தின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

லாரியில் கோழிக்கழிவு இருப்பதை உறுதிப்படுத்திய பொதுமக்கள், இரு லாரிகளையும் சிறைப்பிடித்ததுடன், கூடங்குளம் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தார்கள். வண்டியில் இருந்த ஒருவர் பிடிபட்ட நிலையில், டிரைவர் தப்பியோடி விட்டார்.

கூடங்குளம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கேரளாவிலிருந்து கோழி இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவரப்பட்டது தெரிய வந்தது. லாரியை கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்ததுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த மூர்த்தி கிளீனராக உடன் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் திடீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவிலிருந்து கழிவுடன் வந்த லாரி
கேரளாவிலிருந்து கழிவுடன் வந்த லாரி

`கேரளாவிலிருந்து கழிவுப் பொருள்கள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸார் உறுதியளித்தனர். அத்துடன், அந்தக் கழிவுப் பொருள்களைத் திருப்பியனுப்ப சுகாதார அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.