Published:Updated:

அத்துமீறிய மழைமலை மாதா நிர்வாகம்… சிதைக்கப்பட்ட மலைக்குன்று! உயர்நீதிமன்ற கெடுபிடி

மழைமலை மாதாக்கோயில் அச்சிறுப்பாக்கம்
மழைமலை மாதாக்கோயில் அச்சிறுப்பாக்கம்

பாக்கிய ரெஜிஸ் என்பவர் மலைக்குன்றில் உள்ள அந்தச் சிலையைச் சுற்றிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். மலைக்குன்றின் பகுதிகள், வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் உருவாகின. மலைக்குன்று புறம்போக்கு பகுதியில் பல அடுக்குமாடி கட்டடங்கள் உருவாகின.

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (25.2.2020) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்னும் சில தினங்களில் அதிகாரிகள் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

மழைமலை  மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகள்
மழைமலை மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகள்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள வஜ்ஜிரகிரி வடிவேலன் மலை என்றழைக்கப்படும் குன்றில் சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதே மலைக்குன்றில் இருக்கும் மழைமலை மாதாக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பௌர்ணமி வழிபாடு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிக அளவிலான பக்தர்கள் மழைமலை மாதாக்கோயிலுக்கு வரத்தொடங்கினர். மலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் சிதைக்கப்பட்டு அங்கு கட்டடங்கள் உருவாகத் தொடங்கின. சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் மாதாக்கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகச் சர்ச்சைகள் கிளம்பின. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அந்த கோயில் சிக்கிவந்தது.

மழைமலை மாதா வந்தது எப்படி?

தொல்லியல் துறை அறிவிப்பு
தொல்லியல் துறை அறிவிப்பு

1965-ம் ஆண்டு `புஷ்பம் அடிகளார்’ என்ற கத்தோலிக்க பாதிரியார், அச்சிறுப்பாக்கம் ரோமன் கத்தோலிக் புனித சூசையப்பர் ஆலயத்துக்குப் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி, மழலைப் பள்ளி ஆகியவை தொடங்கப்பட்டன. அப்போது அருகில் உள்ள மலைக்குன்றில் ஒரு மாதா சிலையை நிறுவினார் புஷ்பம் அடிகளார். 2004 வரை அந்த இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் செய்யப்படாமல் இருந்துவந்தது.

சிதைக்கப்பட்ட மலைக்குன்று!

ஆக்கிரமிப்பு கட்டடங்கள்
ஆக்கிரமிப்பு கட்டடங்கள்

2004-ல் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்ற பாக்கிய ரெஜிஸ், மலைக்குன்றில் உள்ள அந்தச் சிலையைச் சுற்றிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். மலைக்குன்றின் பகுதிகள், வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் உருவாகின. பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குச் சொந்தமான மலைக்குன்று புறம்போக்கு பகுதியில் பல அடுக்குமாடி கட்டடங்கள் உருவாகின. ஆடுமாடுகளை மேய்க்கச் செல்பவர்களுக்குப் பாதைகள் அடைக்கப்பட்டன. 2005-லிருந்து மழைமலை மாதாக்கோயிலிலும் பௌர்ணமி வழிபாடு தொடங்கப்பட்டு வேகமாகப் பிரபலமடையத் தொடங்கியது. அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பும் அதிகரிக்கத் தொடங்கின. புகார் எழும்போதெல்லாம் சம்பிரதாயத்துக்காக வருவாய்த்துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்புவார்கள். கோயில் நிர்வாகத்தினரின் அதிகாரிகளுடனான `பேச்சுவார்த்தை’யில் சர்ச்சைகள் அமுக்கப்பட்டுவிடும்.

வெளிச்சத்துக்கு வந்த ஆக்கிரமிப்புகள்!

மழைமலை மாதாக்கோயில் நிர்வாகத்தினர் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் விவரங்களைக் கேட்டிருந்தார். வருவாய்த்துறையினர் சரியான விவரங்களை அளிக்காததைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராஜா.

ராஜா
ராஜா

ஆக்கிரமிப்புகளும்… பொதுநலவழக்கும்!

இதுகுறித்து ராஜாவிடம் பேசினோம். ``ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்டபோது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 4 ஏக்கரில் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் பதில் அளித்தனர். ஆனால், அந்த இடத்துக்குச் சென்று பார்க்கும்போது 60 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. வனத்துறைக்குச் சொந்தமான மலைப்பகுதி, பாதை மற்றும் மேய்க்கால் புறம்போக்கு, தொல்லியல்துறைக்குச் சொந்தமான இடங்கள் என ஆக்கிரமிப்புகள் பெரிய அளவிலிருந்தன.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்டவர்களுக்கு பதிவுத்தபாலில் புகார் அனுப்பினேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் மழைமலை மாதாக்கோயில் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்கள். இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்” என்கிறார்.

நீதிபதிகள் அதிரடி!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு உள்ளதற்கான சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். இதைப் பார்த்து அதிர்ந்த நீதிபதிகள், கோயில் கட்டுகிறோம் என்ற பெயரில் இயற்கையை அழிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இயற்கையை அழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்றனர். மேலும், அந்த இடங்களை சர்வே செய்ய வருவாய்த்துறை, வனத்துறை, கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை, தொல்லியல் துறை ஆகியவற்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்வே செய்யப்பட்ட அறிக்கையை மார்ச் 27-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

மழைமலை மாதாக்கோயிலுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதால் இதற்கென தனி அதிகாரிகளை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என அச்சிறுப்பாக்கம் பௌர்ணமி கிரிவலக் குழு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு