Published:Updated:

மதுரை: தேர்தல் வேலையால் பகை; மிரட்டல்! பஞ்சாயத்துத் தலைவருக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

புகார் கொடுக்க வந்த பெண்கள்
புகார் கொடுக்க வந்த பெண்கள்

மதுரை அழகர்கோயில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தேர்தலில் தனக்கு வாக்களிக்காததால், மதுரை அருகே உள்ள கிராமம் ஒய்.புதுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், ஊராட்சிமன்றத் தலைவர் ஆட்களை வைத்து தங்கள் வீடுகளையும் சேதப்படுத்தியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`கொரோனாத் தொற்று; விரட்டிய குடும்பம்!' - மாடியிலிருந்து குதித்த மதுரை முதியவர்

ஊர் பொதுமக்கள் சார்பாக ஜெயகாந்தி அளித்துள்ள புகார் மனுவில், ``அழகர்கோயில் அருகே உள்ள செம்பியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் கிராமம், ஒய்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை மனைவி இந்திரா, முத்துக்குமார் மனைவி பாண்டீஸ்வரி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். கிராமத்தில் உள்ள சிலர், இந்திராவுக்காகவும், சிலர் பாண்டீஸ்வரிக்கும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். நாங்கள் பாண்டீஸ்வரிக்கு ஆதரவாகத் தேர்தலில் வேலை செய்தோம்.

சேதப்படுத்தப்பட்ட வீடுகள்
சேதப்படுத்தப்பட்ட வீடுகள்

தேர்தலில், இந்திரா வெற்றிபெற்று, ஒய்.புதுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவரானார். அன்று முதல் இன்று வரை, அவருக்குப் போட்டியாகத் தேர்தலில் வேலை செய்த அனைவரையும் மிரட்டி வந்தார். ஒரு கட்டத்தில், ஆட்களை வைத்து நேரடியாக எங்களைத் தாக்குகிறார். வீடுகளுக்குப் புகுந்து பொருள்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்துகின்றனர். குழந்தைகளோடு நிம்மதியாக வழ முடியாத நிலை உருவானது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒத்தக்கடை காவல்நிலையத்தில் முறையிட்டோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கி, நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா : 4,000-த்தைக் கடந்த பாதிப்பு! - அச்சத்தில் மதுரை மக்கள்

இது தொடர்பாக எதிர்தரப்பினரும், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இப்படி பொய்யான புகார் கொடுக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருதரப்பு புகார் மனு தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் பேசியபோது, ``மனு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு