Published:Updated:

“நான்தான் அந்த கைதி” - கதைத் திருட்டுச் சர்ச்சையைக் கிளப்பும் ‘கைதி’ ராஜீவ்

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

புழல் சிறையிலிருந்த சமயத்தில், என்னை கோர்ட்டுக்கு பஸ்ஸில் அழைத்துப்போவார்கள். அப்போது ஒரு கைவிலங்கை இரண்டு கைதிகளுக்குச் சேர்த்துப் பூட்டுவார்கள்

“நான்தான் அந்த கைதி” - கதைத் திருட்டுச் சர்ச்சையைக் கிளப்பும் ‘கைதி’ ராஜீவ்

புழல் சிறையிலிருந்த சமயத்தில், என்னை கோர்ட்டுக்கு பஸ்ஸில் அழைத்துப்போவார்கள். அப்போது ஒரு கைவிலங்கை இரண்டு கைதிகளுக்குச் சேர்த்துப் பூட்டுவார்கள்

Published:Updated:
கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

திரைப்படத் துறையிலிருந்து பிரிக்க முடியாத விஷயமாகிவிட்டது ‘கதைத் திருட்டு’ சர்ச்சை. ‘கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளியின்போது வெளியான ‘கைதி’ திரைப்படக் கதை என்னுடையது’ என்று சொல்லி, 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றப் படியேறியிருக்கிறார் முன்னாள் கைதி ஒருவர்.

கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். எதிர்பாராதவிதமாகக் கொலை வழக்கொன்றில் சிக்கி, சென்னை புழல் மத்தியச் சிறையில் இருந்திருக்கிறார். அப்போது நடந்த சம்பவம்தான் ‘கைதி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார். அவரிடம் பேசினோம்... அவர் தரப்பு விளக்கத்தை முன்வைத்தார்... “நான் கொல்லத்தில் பிசினஸ் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு வர்க்கலா பீச்சில் ரிசார்ட் இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு, என் நண்பரை காரில் சென்னைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே அவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்துவிட்டது. அந்த வழக்கில் 2005-ம் ஆண்டு என்னைக் கைதுசெய்து 45 நாள்கள் புழல் சிறையில் அடைத்தார்கள். அதன் பிறகு என்மீது குற்றமில்லை என்று தெரிந்து கோர்ட் விடுவித்தது.

கொல்லம் ராஜீவ், எஸ்.ஆர்.பிரபு
கொல்லம் ராஜீவ், எஸ்.ஆர்.பிரபு

புழல் சிறையிலிருந்த சமயத்தில், என்னை கோர்ட்டுக்கு பஸ்ஸில் அழைத்துப்போவார்கள். அப்போது ஒரு கைவிலங்கை இரண்டு கைதிகளுக்குச் சேர்த்துப் பூட்டுவார்கள். ஒருமுறை அப்படி அழைத்துச் செல்லும்போது, சில தடா கைதிகளையும் சேர்த்து அழைத்துச் சென்றார்கள். ஒரு தடா கைதியுடன் சேர்த்து எனக்கு விலங்கு பூட்டினார்கள். அன்று அந்த தடா கைதிகள் தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். நாங்கள் சென்ற போலீஸ் வாகனத்தைச் சிலர் ஃபாலோ செய்துவந்தார்கள். கோர்ட் வளாகத்தில் அந்த தடா கைதி, ‘நாங்க தப்பிக்க பிளான் பண்ணியிருக்கோம். எங்க ஆட்கள் வந்திருக்காங்க’ என்று என்னிடம் சொன்னார். என்னோடு விலங்கு போடப்பட்டிருப்பதால், முன்கூட்டியே எனக்குச் சொல்லியிருக்கிறார்.

சிறிது நேரத்தில் நான் போலீஸிடம், ‘யூரின் போக வேண்டும்’ என்றேன். எனது கைவிலங்கை அவிழ்த்து என்னை டாய்லெட்டுக்கு அழைத்துப்போனார். அப்போது, போலீஸிடம், தடா கைதி சொன்ன தகவலைச் சொன்னேன். அவர் தன் உயரதிகாரிக்குத் தகவல் சொன்னார். கோர்ட்டிலிருந்து சிறைக்குக் கொண்டுசெல்லும்போது கூடுதல் போலீஸ் ஃபோர்ஸ் வந்தது. நான் தகவல் சொன்னதால்தான், போலீஸை அட்டாக் செய்துவிட்டு தப்பிக்க இருந்த தடா கைதிகளின் திட்டம் அன்று தடுக்கப்பட்டது; போலீஸார் காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தை டெவலப் செய்து, போலீஸை அட்டாக் செய்ய ஒரு கும்பல் வருவதாகவும், கைதி அட்டாக் செய்து போலீஸின் உயிரைக் காப்பாற்றுவதாகவும் ‘ஜீவ கந்தி’ என்ற கதையை எழுதினேன். என் கதையில் க்ளைமாக்ஸில் போலீஸ்காரரை ஹீரோ காப்பாற்றி, போலீஸ் பஸ்ஸில் ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டுபோய் அவரின் உயிரைக் காப்பாற்றுவார். ‘கைதி’ படத்தில், ஒரு கைதி லாரியில் போலீஸாரை அழைத்துச் செல்வதாகக் காட்டியிருப்பார்கள். என்னுடைய கதையில் இடம்பெற்ற ‘போலீஸைக் கைதி காப்பாற்றும் க்ளைமாக்ஸ் காட்சியை’ சினிமாவில் முதல் பார்ட்டாக எடுத்திருக்கிறார்கள். இனி அவர் எப்படி ஜெயிலுக்குப் போனார் என்ற கதையின் முதல் பகுதியை, இரண்டாவது பார்ட்டாக எடுக்கப்போகிறார்கள்.

நான் இதுவரை ஐந்து கதைகள் எழுதியிருக்கிறேன். ‘ஜீவ கந்தி’ என்ற பெயரில் ‘கைதி’ திரைக்கதையை எழுதினேன். என் நண்பர் ஏ.ஆர்.ராஜன் என்பவர் சினிமா தயாரிப்பாளர். அவரிடம் ஜீவ கந்தி ஸ்டோரியை 2007-ம் ஆண்டு கொடுத்தேன். கதையில் வரும் சம்பவங்களெல்லாம் சென்னையில் நடப்பதால், இது தமிழுக்கு ஏற்ற சப்ஜெக்ட் என்று சொன்னார். அத்துடன், சென்னையில் ஏவி.எம் ஸ்டூடியோவுக்கு உள்ளே ‘பரணி ஸ்டூடியோ’ வைத்திருந்த ராமகிருஷ்ணன் என்ற தயாரிப்பாளரை போன் மூலம் அறிமுகம் செய்துவைத்தார்.

ராமகிருஷ்ணன் வரச் சொன்னதால், நான் அந்த ஸ்டூடியோவுக்குச் சென்று கதை சொன்னேன். அப்போது ராமகிருஷ்ணனுடன் எஸ்.ஆர்.பிரபு இருந்தார். நான் சொன்ன ஸ்டோரி அவர்களுக்குப் பிடித்திருந்தது. ‘இந்தக் கதையை சினிமாவாகப் பண்ணலாம்’ எனச் சொன்னவர்கள், டோக்கன் அட்வான்ஸாகப் 10,000 ரூபாய் தந்தார்கள். அந்தப் பணத்தை எஸ்.ஆர்.பிரபுவிடம் வாங்கி ராமகிருஷ்ணன் என்னிடம் தந்தார். எனது ஸ்டோரியின் ஒரு காப்பியையும் அவர்கள் வாங்கினார்கள். ‘சினிமா பண்ணலாம்’ என்று பல தடவை என்னை சென்னைக்கு வரவைத்தார்கள். நான் கேட்கும்போதெல்லாம், ‘கொஞ்சம் டிலே ஆகுது. அப்புறமா பண்ணலாம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இரண்டு வருடங்கள் அவர்கள் பின்னால் நான் அலைந்த நான், ஒரு கட்டத்தில் ‘இது நடக்காது’ எனத் தோன்றியதால், விட்டுவிட்டேன். அதன் பிறகு 2010-ம் வருடம் கொல்லம் லைப்ரரி கவுன்சிலில் என் ‘ஜீவ கந்தி’ கதையைப் பதிவுசெய்தேன்.

 “நான்தான் அந்த கைதி” - கதைத் திருட்டுச் சர்ச்சையைக் கிளப்பும் ‘கைதி’ ராஜீவ்

நான் அதிகமாகத் தமிழ் சினிமா பார்ப்பதில்லை. சமீபத்தில் டி.வி-யில் `கைதி’ படம் ஒளிபரப்பானது. அதைப் பார்த்தபோது, படமாக்கப்பட்டிருப்பது எனது ‘ஜீவ கந்தி’ கதை எனத் தெரிந்தது. ‘கைதி சினிமாவின் கதை என்னுடையது’ என எஸ்.ஆர்.பிரபுவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அவர்கள் பதில் அளித்திருந்தார்கள். அதனால்தான் போன மாதம் கொல்லம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். என் கதைக்கான உரிமையைப் பெறாமல் ஓய மாட்டேன்’’ என்றார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம், ஜூலை 1-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘கைதி சினிமாவின் இரண்டாம் பாகத்தை வெளியிடக் கூடாது. கைதி முதல் பாகத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறது.

எஸ்.ஆர்.பிரபுவிடம் இது குறித்துக் கேட்டோம், “நீங்கள் குறிப்பிடும் நபர், அவர் கதை சொன்னதாகக் குறிப்பிடும் தயாரிப்பாளர் இருவரையும் எனக்கு யாரென்றே தெரியவில்லை. இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு குறித்து முழுமையாக எனக்குத் தெரியாது. அதிகாரபூர்வமாக நீதிமன்றத்திடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘கைதி’ கதை உருவான முழுப் பரிமாணமும் எனக்குத் தெரியும். லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டு மிகக் குறுகிய காலத்தில் ‘கைதி’ படம் எடுக்கப்பட்டது” என்றார்.

கதைகளைவிட சுவாரஸ்யமாகவும், மர்மமாகவும், குழப்பமாகவும் இருக்கின்றன உண்மைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism