Election bannerElection banner
Published:Updated:

மாலத்தீவு துணை அதிபர் தூத்துக்குடிக்கு தப்பிவந்தது ஏன்? - அதிர்ச்சிப் பின்னணி!

அகமது ஆதீப்
அகமது ஆதீப்

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் கள்ளத்தனமாகத் தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்றபோது பிடிபட்டுள்ளார். அவருக்குத் தமிழகத்தில் அடைக்கலம் கொடுக்க முடிவு செய்திருந்தவர்கள் யார் என்பது குறித்து மத்திய உளவுப்பிரிவினர் விசாரித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கட்டுமானப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாலத்தீவுக்குக் கொண்டுசெல்லப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 11-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மணல், கல், ஜல்லி போன்றவை விர்கோ 9 என்ற இழுவைக் கப்பல் மூலம் மாலத்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 கப்பல் ஊழியர்களும் ஒரு தமிழரும் இருந்துள்ளனர்.

விர்கோ 9 இழுவைக் கப்பல்
விர்கோ 9 இழுவைக் கப்பல்
ப.கதிரவன்

மாலத்தீவில் பொருள்களை இறக்கிய பின்னர் திரும்பி வந்த அந்தக் கப்பலில் கூடுதலாக ஒரு நபர் இருந்தார். அதனால் தூத்துக்குடி துறைமுகத்துக்குள் நுழைவதற்கு முன்பாக அந்தக் கப்பலைக் கடலோரக் காவல்படையினர் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது கூடுதலாகக் கப்பலுக்குள் இருந்தவர், மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரியவந்தது.

யார் இந்த அகமது அதீப்?

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபரான அகமது அதீப் 37 வயது நிரம்பிய இளைஞர். இளம் வயதிலேயே அந்நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாகத் தேர்வான அவர் அமைச்சராக இருந்தார். தனது திறமையால் விரைவிலேயே துணை அதிபராக உயர்வு பெற்றார். அதிபராக வேண்டும் என்கிற ஆசையில் மாலத்தீவு அதிபரைக் கொல்ல முயன்றதாக 2015-ம் ஆண்டு அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், மேல் முறையீட்டில் அந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டது.

அகமது ஆதீப்
அகமது ஆதீப்

அதன் பின்னர் மாலத்தீவில் நடந்த மே தின விழாவின்போது சர்ச்சைக்குரிய விதத்தில் துப்பாக்கியுடன் வந்ததாகக் கைது செய்யப்பட்ட அகமது ஆதிப், அந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அதனால் மாலி அருகே உள்ள டொனிடோ தீவில் உள்ள நவீன வசதிகள் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது மேலும் சில வழக்குகளும் விசாரணையில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

சிறையிலிருந்து தப்பி கப்பலில் ஏறியது எப்படி?

டொனிடொ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகமது ஆதீப் கண் சிகிச்சைக்காகக் கடந்த ஜூன் 14-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். மாலத்தீவு அரசின் அனுமதியுடன் 10 நாள் பயணமாக வந்த அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். 10 நாள்கள் அனுமதி பெற்றிருந்தபோதிலும் ஜூலை 7-ம் தேதி வரை அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

தூத்துக்குடி துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்
ப.கதிரவன்

பின்னர் மாலத்தீவு சென்ற அவர், ஏற்கெனவே தங்கியிருந்தபோது அறிமுகமான நபர்களின் துணையுடன் மீண்டும் தமிழகத்துக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளார். அதனால் சிறையில் உள்ள பலத்த கண்காணிப்பையும் மீறித் தப்பிய அவர் நடுக்கடல் வரையிலும் படகில் வந்து அதன்பின்னர் கப்பலில் ஏறியிருக்கிறார்.

இலங்கை தப்பிச் செல்லத் திட்டம்?

தூத்துக்குடி வந்து சில தினங்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் இலங்கைக்குத் தப்பிச் செல்ல வேண்டும் என்பது அகமது ஆதீப் திட்டமாக இருந்திருக்கிறது. முதல்கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. இதற்குத் தூத்துக்குடியில் உள்ள சிலர் உதவ சம்மதித்திருக்கிறார்கள். இங்கிருந்து ராமேஸ்வரம் சென்று அந்த வழியாக இலங்கைக்குள் ஊடுவும் திட்டத்தைத் தமிழக கடலோரக் காவல்படையினர் முறியடித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி துறைமுகத்தில் விர்கோ 9 கப்பல்
தூத்துக்குடி துறைமுகத்தில் விர்கோ 9 கப்பல்
ப.கதிரவன்

இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்ற நிலையில், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அங்கு செல்லத் திட்டமிட்டிருந்தது தற்செயலானதா அல்லது அவருக்குத் தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மத்திய உளவுப்படையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பில் என்.ஐ.ஏ!

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தையடுத்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் கொச்சி நகரில் சில மாதங்களுக்கு முன்பு 6 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயில்
தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயில்
ப.கதிரவன்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக ஆகஸ்ட் 2-ம் தேதி அபு பஷிர் என்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ஷாலி முகமது என்பவரையும் நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபான் அப்துல்லா என்பவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப், இலங்கை செல்லத் திட்டமிட்டிருந்தது தற்செயலானதா அல்லது அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது.

தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நிலையில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபரான அகமது ஆதீப் தூத்துக்குடி வழியாகத் தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் மத்திய உளவுத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதனால், தூத்துக்குடியில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்த நபர்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிலர் சிக்கக்கூடும் என்பதால் தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு