Published:Updated:

ஆட்டோவை அனுமதிக்க மறுத்த போலீஸ்! - வயதான தந்தையை தோளில் சுமந்த மகன்

தந்தையை தோளில் தூக்கிச் செல்லும் மகன்
தந்தையை தோளில் தூக்கிச் செல்லும் மகன்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் குணம் அடைந்தார். அதனால் அவரை அழைத்துச் செல்ல ஆட்டோவில் வந்த மகனை போலீஸ் அனுமதிக்கவில்லை. அதனால் தந்தையை தோளில் தூக்கிச் சுமந்து சென்றார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்களும் காவல்துறையினரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றி வருகிறார்கள். அதற்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில், ஓரிரு இடங்களில் காவல்துறையினர் செய்யும் சிறிய தவறுகளால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகிறது. அத்தகைய சம்பவம் இன்று கேரளாவின் கொல்லம் மாவட்டம் புனலூரில் நடந்திருக்கிறது.

கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். அதனால் அவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு புனலூர் தாலுக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக காய்ச்சலில் இருந்து குணமடைந்துவிட்டார். அதனால் அவரை அழைத்துச் செல்ல அவரின் மகன் ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்திருக்கிறார். அப்போது சாலையில் இருந்த காவலர் அவரது வாகனத்தை நிறுத்தி அனுமதிக்க மறுத்துவிட்டார்.

தன் தந்தை மருத்துவமனையில் இருப்பதையும் அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பதையும் எடுத்துச் சொன்னபோதிலும், அவரது வாகனத்தை அனுமதிக்கவில்லை. அதனால் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று தந்தையைத் தோளில் தூக்கியபடி வந்திருக்கிறார்.

தந்தையை தோளில் சுமக்கும் மகன்
தந்தையை தோளில் சுமக்கும் மகன்

இந்தக் காட்சிகள் கேரளாவில் உள்ள செய்திச் சேனலில் ஒளிபரப்பானது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், காவலரின் செயலைக் கண்டித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கேரள காவல்துறைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ``ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்காமல் பலரும் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். அதனால் சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது. ஆட்டோவை நிறுத்திய காவலர், அதில் இருந்தவரிடம் `எதற்காகச் சாலையில் சுற்றுகிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார்.   

representational image
representational image

அப்போது தன் தந்தையை அழைத்துச் செல்வதற்கு வந்ததற்கான எந்தச் சான்றையும் அவர் காட்டவில்லை. அப்படி அவர் ஆவணங்களைக் கொடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இருப்பினும் இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு