Published:Updated:

``இந்த எல்லா கேள்விகளையும் விஜய் சேதுபதியும் கேட்டார்!’’ மண்டி நிறுவனத்தின் விளக்கம்!

மண்டி
மண்டி

``மண்டி ஒன்றும் வெளிநாட்டு நிறுவனம் அல்ல. சேலத்தில், ஒரு கிராமத்தில் 40 வருடங்களாக இந்தத் தொழிலில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்த, பல அனுபவங்களைக் கொண்ட ஒருவருடையதுதான்." - மண்டி

இணைய வர்த்தக நிறுவனமான மண்டி, நடிகர் விஜய் சேதுபதி விளம்பரத்தோடு கடந்த சில வாரங்களாகத் தொலைக்காட்சிகளை அலங்கறித்து வருகிறது. அதே நேரத்தில் புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. சில்லறை வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என வணிகர் சங்கங்களிடமிருந்து இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பிவருகிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

மேலும், நடுத்தர மக்களுக்குத் தீங்கான ஒரு விளம்பம் எனச் சொல்லி அதில் நடித்ததுக்காக விஜய் சேதுபதி மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நடிகர் விஜய் சேதுபதியைக் கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் அவரது ஆழ்வார் திருநகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினார்கள். அப்போது விஜய் சேதுபதி தரப்பில் நம்மிடம் ``தொழில் செய்யும் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இல்லை. மக்கள் விரோதத் திட்டங்களுக்கு விஜய் சேதுபதி துணைபோக மாட்டார்" என்று கூறியிருந்தனர். அதன் பிறகும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பாக மற்றொரு போராட்டம் பூந்தமல்லி திருவள்ளுவர் சாலையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கார்த்திகேயன் நம்மிடம் பேசுகையில், ``இது பன்னாட்டு நிறுவனங்கள் எப்போதும் கையாள்கிற உத்திதான். அவர்களின் முதல் நோக்கம் சந்தையைப் பிடிக்கவேண்டும். அதனால்தான் கொள்முதல் விலையைவிடவும் குறைவாகத் தருவதாக விளம்பரம் செய்கின்றனர். தற்போது உற்பத்தியாளர், மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி, நுகர்வோர் என ஒரு சுழற்சி முறை இயங்கிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பும் பெறுகின்றனர். மண்டி போன்ற இணைய வர்த்தகம் வந்தால் இந்தச் சுழற்சி அடிபட்டு வேலை இழப்பு ஏற்படும். இவர்கள் தற்போது வழங்குகிற சலுகைகளை எவ்வளவு காலத்துக்கு வழங்குவார்கள் என்பது தெரியாது.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

இதில் மற்றுமொரு சிக்கல் என்னவென்றால் சந்தையைப் பிடித்த பிறகு, இவர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாக இருக்கும். மண்டி நிறுவனத்தின் கையில் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் கட்டுப்பாடும் சென்றுவிடும். இது ஆபத்தானது. தற்போது விலையேற்றம், விலைக் குறைவு என சாதக, பாதகங்கள் எது வந்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். இதற்குப் பிறகு லாபம் என்றால் அது நிறுவனத்துக்கும் விலையேற்றம் போன்ற பாதகங்கள் மக்களின் மீதுமே விழும். இவை தவிரவும் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. 10 நாள்கள் வரை பொருள்களைத் தேக்கி வைக்க வேண்டிய சூழல்கள் எழுந்தாலும் உணவுப் பொருள்களில் ரசாயனப் பயன்பாட்டை தவிர்க்கவே முடியாது, இது சுகாதாரத்துக்கும் தீங்காக முடியும். இது வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் பிரச்னை இல்லை. விஜய் சேதுபதிக்கு நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் நிலவுகிறது. இதனால் அதிகம் பாதிப்படைவதும் நடுத்தர வர்க்க மக்களே. அவர் இதன் பாதிப்புகள் தெரியாமல்தான் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறோம். அதனால் அவரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்கிறோம். அரசிடமும் முறையிட்டுவிட்டோம்" என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து மண்டி நிறுவனத்திடம் சார்பில் ``இது அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். பலசரக்கு துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களால்தான் இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பல்வேறு தரப்பினர்கள் காலங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்னைகளை உணர்ந்து அதற்குத் தீர்வளிக்கும் நோக்கத்திலேயே மண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக விவசாயிகள், உற்பத்தியாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், டீலர்கள் மற்றும் ரீடெய்லர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இத்துறையின் பலனுக்காக இந்தத் தளம் மற்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டி
மண்டி
கடன், டெலிவரி முதல் எக்ஸ்சேஞ்ச் வரை... `மண்டி' App-ல் என்னதான் இருக்கிறது? #Walkthrough

மண்டி மற்றும் விஜய் சேதுபதியின் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதையும் விஜய் சேதுபதியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது நியாயமற்றது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

நாம் மேலும் இதுகுறித்து கேட்க, மண்டி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லிசா அவர்களிடம் பேசினோம்.

லிசா
லிசா

``விஜய் சேதுபதி ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளுமுன் பலநூறு முறை யோசிக்கிறவர். அவருக்கே இதுகுறித்து 1,000 கேள்விகள் இருந்தன. இப்போ அவங்க கேக்குற எல்லா கேள்வியையும் அவரும் கேட்டார். `மக்கள் செல்வன்’ பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டதற்கு ஏற்ப மக்கள் சார்பில்தான் அவர் பல சந்தேகங்களைக் கேட்டார். தவிரவும் மண்டி ஒன்றும் வெளிநாட்டு நிறுவனம் அல்ல. சேலத்தில், ஒரு கிராமத்தில் 40 வருடங்களாக இந்தத் தொழிலில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்த, பல அனுபவங்களைக் கொண்ட ஒருவருடையதுதான். இது நேரடியாக விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பலனளிக்கும் திட்டம்தான். மேலும், இதுகுறித்து விஜய் சேதுபதியுடன் எங்கள் நிறுவனம் சார்பில் பேசி முறையான விளக்கம் அளிப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு