கோவை: கமல் சொன்னதையும் மீறி, விமான நிலையத்தை குப்பையாக்கிய மக்கள் நீதி மய்யத்தினர்!

கமல்ஹாசன் சொன்னதையும் மீறி, கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் குப்பைகளை நிரப்பிச் சென்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதை முன்னிட்டு இன்று அவர் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர், ``மக்கள் நீதி மய்யத்தின் 5-வது கட்ட பிரசாரம் கோவையில் தொடங்கியுள்ளது. செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. கோவையில், எங்கள் கட்சியின் விளம்பரப் பதாகைகளை அகற்றி எங்களுக்குக் கூடுதல் விளம்பரம் அளித்துள்ளனர்.
பதாகைகளை அகற்றிய அமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி. விளம்பரப் பதாகைகளை அகற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, அப்படியே மக்கள் பணியில் காட்டியிருந்தால், நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டோம்” என்றார்.
இந்நிலையில், கமல்ஹாசனை வரவேற்க, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோவை விமான நிலையம் வந்திருந்தனர்.

அப்போது, சில தொண்டர்கள் கமலை, வரவேற்க பூவை எடுத்து அவர் மீது வீசினர். அவர்களைப் பார்த்து, `பூவை வீச வேண்டாம்’ என அவர் சைகை காண்பித்தார். அதைக் கண்டு கொள்ளாத மக்கள் நீதி மய்யத்தினர், தொடர்ந்து அவர் மீது பூ வீசினர்.
இதனால், கமல் சென்றவுடன் விமான நிலையம் முழுவதும் குப்பையானது. மேலும், கமலை வரவேற்பதற்காகக் கொண்டு வந்த பதாகைகளையும், அப்படியே விமான நிலையத்தில் குப்பையோடு குப்பையாக போட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் விட்டு சென்ற குப்பைகளை விமான நிலைய ஊழியர்கள், `இது எல்லாம் பழக்கப்பட்டதுதான் சார்’ என்று சொல்லி உடனே சுத்தம் செய்தனர்.

பொதுவாக, திராவிடக் கட்சி மற்றும் தேசிய கட்சி தலைவர்கள் வரும்போது, விமானநிலையத்தில் இதுபோலதான் நடக்கும். ஆனால், செல்லும் இடமெல்லாம், தங்களை மாற்றுசக்தி என்று கூறிகொள்ளும் மக்கள் நீதி மய்யத்தினரும் அதை பின்தொடர்வது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.