Published:Updated:

`மேலப்பாளையத்தில் 16 பேருக்கு கொரோனா' - `காணவில்லை' விமர்சனத்தால் கொதிக்கும் டி.பி.எம்.மைதீன்கான்

கொரோனா
கொரோனா

டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், 16 பேர் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

நெல்லையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்தார். அவரது அறிவிப்பு நெல்லை மாநகர மக்களை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

`நெல்லையில் 22 பேருக்குக் கொரோனா!’ - மூடப்பட்ட மேலப்பாளையம் சாலைகள்

நெல்லையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 16 பேர் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மேலும் மூவர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள். அதனால் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

``போர்முனையில் இருந்தாலும்..!" -கொரோனா பணி; தமிழக அரசு டாக்டர்களின் 4 கோரிக்கைகள்

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான டி.பி.எம்.மைதீன்கான், தற்போது மேலப்பாளையத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்று சமூக வலைதளத்தில் கண்டனம் எழுந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்று பரவும் செய்தியால் தி.மு.க-வினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.

டி.பி.எம்.மைதீன்கானுக்கு எதிரான போஸ்ட்
டி.பி.எம்.மைதீன்கானுக்கு எதிரான போஸ்ட்

இது குறித்து பேசிய தி.மு.க-வினர், ``தொகுதி மக்களிடம் நெருக்கமாக இருக்கும் மைதீன்கான், கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வருவதற்கு முன்பாகவே மேலப்பாளையம் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். இப்போது ரூ.41 லட்சம் அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார். அவர் மீது உள்நோக்கத்துடன் சிலர் அவதூறு பரப்புகிறார்கள்” என்கிறார்கள்.

இது குறித்து டி.பி.எம்.மைதீன்கானிடம் கேட்டதற்கு, ``டெங்கு பாதிப்பு இருந்தபோது என் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்தேன். தொடந்து மேற்கொண்ட முயற்சியால் இந்தப் பகுதியில் டெங்கு பாதிப்பு வெகுவாகக் குறைந்தது.

அரசு மருத்துவமனைக்கு நிதி உதவி
அரசு மருத்துவமனைக்கு நிதி உதவி

இப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதி உதவி அளித்திருக்கிறேன். மக்களுக்கு முகக் கவசம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும், இந்தத் தொற்று பிறருக்குப் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளேன். 

அனைத்திலும் அரசியல் செய்பவர்களுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தால் என் பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடும் என்பதால் அதைக் கண்டுகொள்வதில்லை” என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு