Published:Updated:

`தப்லீக் மாநாடு நடத்த வெளிநாட்டு நிதி வந்ததா?’- மவுலானா சாத் மீது பாய்ந்த அமலாக்கத்துறை வழக்கு

மவுலானா சாத்
மவுலானா சாத்

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் மீது டெல்லி போலீஸார் ஏற்கெனவே கொலை வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த மாநாடு நடத்த வெளிநாட்டிலிருந்து நிதி வந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் மீது டெல்லி போலீஸார் ஏற்கெனவே கொலை வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மவுலானா சாத் மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலையில் ஈடுபட்ட பிரிவின்கீழ் (ஐ.பி.சி 304) வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை மவுலானா சாத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு
தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலுக்கு வந்தன. இந்தியாவிலும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. டெல்லியில் மார்ச் மாதம் ஆரம்பத்திலே மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மால்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் விதமாக அவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது.

இந்த நிலையில்தான் டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாஅத்தில் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மதக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சுமார் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 முதல் 250 வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

தப்லிக் ஜமாத் மாநாடு இப்போது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற டெல்லி மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மாநில அரசுகளோ அந்த மாநாட்டில் பங்கேற்ற நபர்களைக் கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேரில் 1,100 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் பங்கேற்ற 1,900 பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு