Published:Updated:

``திமுக மாவட்டச் செயலாளர்போல் செயல்படுகிறார் கரூர் எஸ்.பி!" - குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

`இந்த மாவட்ட எஸ்.பி., தி.மு.க மாவட்டச் செயலாளர்போலச் செயல்பட்டு, அ.தி.மு.க-வினரை அடித்ததோடு, எங்கள் மீது பொய் கேஸ் போடத் துடிக்கிறார். அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், அ.தி.மு.க-வினர் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகு, இரவு விடுவிக்கும்வரையில், காவல்துறையினருக்கும், அ.தி.மு.கவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு, கூச்சல் என்று ஏரியாவே அல்லோலகல்லோலப்பட்டது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
`எந்த டெண்டரும் நடக்காது!' அதிமுக கவுன்சிலர்களை திமுக மிரட்டுவதாக மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவராக அ.தி.மு.க சார்பில் தேர்வு செய்யப்பட்ட தானேஷ் என்கிற முத்துக்குமார், கடந்த சட்டன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டதால், தனது 8-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுடன், கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 8-வது வார்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை, கடந்த அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க வேட்பாளரைவிட, தி.மு.க வேட்பாளர் கண்ணையன் 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில், சுமார் 18,762 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

தள்ளுமுள்ளு
தள்ளுமுள்ளு

இதைத் தொடர்ந்து, நேற்று (22-ம் தேதி) மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல், மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் எட்டு அ.தி.மு.க உறுப்பினர்களும், நான்குல் தி.மு.க உறுப்பினர்களும் உள்ளனர். கூட்டம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களில்ல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது எனச் சொல்லி தேர்தல் அதிகாரி வாகனத்தில் வெளியேற முற்பட்டார். அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள், தேர்தல் அதிகாரியும், மாவட்ட திட்ட இயக்குநருமான மந்திராசலம் வாகனத்தை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'தேர்தலைத் தள்ளிவைக்க என்ன காரணம்?' என்று கேட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடனும், அ.தி.மு.க நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அங்கு நின்றிருந்த அ.தி.மு.க-வினர், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரைக் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கைதுசெய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போலீஸார் அவர்களைக் கைதுசெய்ய முற்பட்டபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்தனர். இந்தத் தகவல் அறிந்து, அந்தப் பகுதியில் கூடிய அ.தி.மு.க-வினர், முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைதுசெய்தவர்களை வேனில் அழைத்துக்கொண்டு போய், வெள்ளியணை பைபாஸில் உள்ள மண்டபத்துக்கு வெளியே அமரவைத்தனர்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

``மினிட் புக்குல கையெழுத்து வாங்கிட்டாங்க. நாமினேஷன் படிவம் பூர்த்திசெய்யச் சொல்லி, அதை வாங்கிகிட்டாங்க. ஆனால், அதை வாங்குனதுக்குப் பிறகு, திட்ட இயக்குநர், 'தேர்தல் ரத்து செய்யப்படுகிறது'னு சொல்லிட்டு, வெளியில் வந்து காரில் ஏறிப் புறப்பட்டார். நாங்க அவர்கிட்ட, 'ஏன் தேர்தலை நிறுத்துனீங்க?'னு கேட்டதுக்கு, அவர் பதில் சொல்லவே இல்லை. கார் கண்ணாடியை இறக்கவே இல்லை. ஆனால் தி.மு.க-காரங்க, 'எங்க வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவோம்'னு ஓப்பனா சொன்னாங்க. இப்படி நடக்கும் என்று முதல்நாளே, தேர்தல் நடத்தும் அலுவலரான திட்ட இயக்குநரிடம், புகார் மனு கொடுத்தோம். ஆனால், திட்ட இயக்குநர் பதில் சொல்லவே இல்லை. எங்க உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட மினிட் புக்கையாவது எடுத்துக் கொடுங்க'னு கேட்டோம். அதுக்கு, 'முடியாது'னு சொல்லிட்டார். ஆனா, அதுக்குப் பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்து, காட்டுமிராண்டித்தனமாக அ.தி.மு.க வழக்கறிஞர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களை அடித்து, வேனில் ஏற்றிக் கொண்டு வந்தாங்க. மதியம்போல கைது பண்ணி அழைத்து வந்து, மண்டபத்தில் உட்காரவெக்காம மண்டபத்துக்கு வெளியே, வெறும் மண் தரையில் உட்காரவெச்சாங்க. இரவு வரைக்கும் அப்படியே அமரவெச்சாங்க. ஆனா, திட்ட இயக்குநரோட வாகனத்தைச் சேதப்படுத்தியதாகச் சொல்லி, எங்கமீது பி.பி.டி ஆக்ட் போடப்போறதா சொல்றாங்க. ஆனால், என்ன ஆக்ட் என்று மேலிடத்திலிருந்து தகவல் வரணும். ஏன்னா, நடப்பது தி.மு.க ஆட்சியல்லவா... ரொம்ப நேர்மையான ஆட்சி.

தள்ளுமுள்ளு
தள்ளுமுள்ளு

போலீஸ் அதிகாரியே, 'மேலிடத்திலிருந்து தகவல் வரணும்'னு வெளிப்படையா சொல்றார். தகவல் வந்ததுக்குப் பிறகு, எங்க மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளுறதா சொல்றாங்க. நீங்களே திட்ட இயக்குநரோட வாகனத்தைப் பாருங்க. ஏதாச்சும் சேதாரம் ஆகியிருக்கா? முழு வீடியோ ஆதாரம் வைத்திருக்கிறோம். மினிட் புத்தகத்துல கையெழுத்து மட்டும் வாங்கிக்கிட்டு, தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றதா தி.மு.க தலைமை அறிவிக்கச் சொல்லியிருக்கு. அதனால்தான், திட்ட இயக்குநரே வெளியே போயிருக்கிறார். ஆனால், அவர் வாகனத்தை நாங்க நிறுத்தினதுக்குப் பிறகு, இந்த மாவட்ட எஸ்.பி., தி.மு.க மாவட்டச் செயலாளர்போலச் செயல்பட்டு, அ.தி.மு.க-வினரை அடித்ததோடு, எங்கமீது பொய் கேஸ் போடத் துடிக்கிறார். அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. நான்கு உறுப்பினர்களை மட்டும்வெச்சுக்கிட்டு, தி.மு.க-வினர் தேர்தலில் வெற்றிபெறுவோம்னு சொல்றாங்க. ஒரு தி.மு.க-காரர், 'இன்னைக்கு தேர்தல் நடந்து, நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னா, நான் ஒரு காதை அறுத்துக்குறேன்'னு வெளிப்படையா சொல்றார். அப்படின்னா, திட்டமிட்டு, பிளான் பண்ணி இதை தி.மு.க பண்ணுது. அதனால், நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். அதன் மூலம், எங்களுக்கான நீதியைப் பெறுவோம். ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு