Published:Updated:

`800 திரைப்படத்திலிருந்து விலகிவிடுங்கள்’ முரளிதரன்... `நன்றி வணக்கம்’ விஜய் சேதுபதி!

முரளிதரன் ( விஜய் சேதுபதி )

விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில், வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

`800 திரைப்படத்திலிருந்து விலகிவிடுங்கள்’ முரளிதரன்... `நன்றி வணக்கம்’ விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில், வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Published:Updated:
முரளிதரன் ( விஜய் சேதுபதி )

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், `சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்’ என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் இவர். இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு `800' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாகவைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

800 திரைப்படம்
800 திரைப்படம்

கடந்த ஆண்டே இது தொடர்பான தகவல்கள் வெளியானபோதும், அதிகாரபூர்வமாக படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாக, சர்ச்சை வெடித்தது. `ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்றுகுவித்த நாடான இலங்கையின் தேசியக்கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்துகொண்டு நடிக்கலாம்?' என்று கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர். தமிழ்த் திரைப்படதுறையைச் சேர்ந்த பலரும் விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையே தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் விஜய் சேதுபதி ஆலோசனை கேட்டிருப்பதாகவும், ஒரிரு நாள்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், இலங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது குறித்துப் பேசியிருக்கிறார். `800’ திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ``800 திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன். 800 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும். திரைப்படத்துக்கு எதிராகப் பேசுவோருக்கெல்லாம் அந்தத் திரைப்படமே பதில் சொல்லும்.

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

எல்லா விஷயங்களிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம் நல்ல கதை, அதில் நடிப்பதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை” என்று கூறியதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அது விஜய் சேதுபதி அளித்த பேட்டி இல்லை என்ற தகவலும் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் முத்தையா முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார், அதில், ``எனது சுயசரிதை படமான `800’ திரைப்படத்தைச் சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே, என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில், வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்,

விஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன்
விஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன்

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்வடைவதில்லை. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வென்று, இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இந்தத் திரைப்படம் எதிர்காலத் தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஓர் உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணயே என் சுயசரிதையைத் திரைப்படமாக சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து, இந்தப் படைப்பை அவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனத் தயாரிப்பு நிறுவனத்தினர் என்னிடம் உறுதியளித்திருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தகைய சூழலில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கும், விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முத்தையா முரளிதரனின் இந்த ட்வீட்-க்கு பதிலளித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ``நன்றி.. வணக்கம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism