Published:Updated:

`அது என் நோக்கமல்ல!'- ராஜீவ் நினைவிட டிக்டாக் விவகாரத்தில் மன்னிப்புக் கேட்ட `நாம் தமிழர்’ நிர்வாகி

நாம் தமிழர் நிர்வாகி துரைமுருகன்
நாம் தமிழர் நிர்வாகி துரைமுருகன்

ராஜீவ் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி நிர்வாகி அவதூறாக டிக்டாக் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் நினைவிடம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. அவரது மரணம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் காட்டம் அடைந்தனர்.  

ராஜீவ் நினைவிடத்தில் டிக்டாக்
ராஜீவ் நினைவிடத்தில் டிக்டாக்

அந்தப் பரபரப்பு மறையும் முன்பாக, அக்கட்சியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகியான துரைமுருகன் என்பவர் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டிருந்தார். டிக்டாக் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவில் பேசிய அவர் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் முன்பாக நின்றுகொண்டு, `நாங்கள்தான் ராஜீவைக் கொன்றோம்’ என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான துரைமுருகனின் பேச்சு காங்கிரஸ் கட்சியினரைக் கொந்தளிப்படையச் செய்தது. இது தொடர்பாக நெல்லை மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

நெல்லையில் புகார் அளித்த காங்கிரஸ் நிர்வாகிகள்
நெல்லையில் புகார் அளித்த காங்கிரஸ் நிர்வாகிகள்

ராஜீவ் காந்தியை அவமரியாதை செய்த துரைமுருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அடுத்தடுத்து காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீவிரம் காட்டினார்கள்.

இந்தச் சூழலில், டிக்டாக் மூலம் ராஜீவ் காந்தியை அவமரியாதையாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி துரைமுருகன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து டிக்டாக் பதிவை வெளியிட்டார். அதில், ``நான் ஸ்ரீபெரும்புதூர் போயிருந்தபோது ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் ஒரு டிக்டாக் வீடியோ பண்ணியிருந்தேன்.

நான் பதிவிட்ட டிக்டாக் தவறு என உணர்ந்ததால் அதைப் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே அழித்துவிட்டேன்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி

அந்த வீடியோ பதிவிட்டு சரியாக ஒரு மணி நேரத்தில் அது தவறு, அதைப் பண்ணக் கூடாதுன்னு டெலிட் பண்ணிட்டேன். ஆனால், அதற்கு முன்னாடி அதை நிறைய பேர் டவுன்லோட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிருக்காங்க.

அதைப் பார்த்துவிட்டு ராஜீவ் காந்தியை நேசிக்கிறவங்க என்னை அழைச்சு, `நீங்களே இப்படிப் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலை’னு சொன்னாங்க. உண்மையிலேயே ராஜீவ் காந்தி அவர்களையோ, அவர்களுடைய நினைவிடத்தையோ கொச்சைப்படுத்துவதோ அசிங்கப்படுத்துவதோ என்னுடைய நோக்கம் கிடையாது.

மன்னிப்புக் கேட்ட துரைமுருகன்
மன்னிப்புக் கேட்ட துரைமுருகன்

நான் தனிப்பட்ட முறையில் ஒரு விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டேன். அதனால்தான் உடனே டெலிட் செய்துவிட்டேன். அந்த வீடியோவால் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலோ காயப்பட்டிருந்தாலோ நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிப் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன், ``நாங்கள் மிகவும் மதிக்கும் தலைவரான ராஜீவ் காந்தியை இது போன்று அவதூறாக நாம் தமிழர் கட்சியினர் பேசுவது இது முதல் முறை கிடையாது. நாங்கள் எதிர்த்தால் பயந்து பின்வாங்குவதையும் இல்லாவிட்டால் வாய்க்கு வந்ததைப் பேசுவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  

நெல்லை மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன்
நெல்லை மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன்

காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் பின்வாங்கும் கோழைத்தனம் மிகுந்த நாம் தமிழர் கட்சியினர் இனியாவது நாவடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நாட்டுக்குத் தியாகம் செய்த தலைவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு நூறு முறை யோசிக்க வேண்டும். அதை அக்கட்சித் தலைவர் தன்னுடைய தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு