Published:Updated:

நாகை: `3 குடும்பத்தாருக்கு முடி வெட்டக் கூடாது!' - அதிர்ச்சி கொடுத்த கிராமப் பஞ்சாயத்து

பாதிக்கப்பட்ட குடும்பம்
பாதிக்கப்பட்ட குடும்பம்

பொன்னம்பலவாணன் மீது கோபத்தில் இருந்த சண்முகம் தன் மனைவியின் அதிகாரப் பலத்தை பயன்படுத்தி கடந்த 9-ம் தேதி ஊர் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

நாகை அருகே கோயிலை நிர்வகிப்பது யார் என்ற பிரச்னையில் மூன்று குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதுடன், அக்குடும்பத்தினருக்கு முடிவெட்டக் கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கப்பள்ளி
தொடக்கப்பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தேத்தாகுடி வடக்கு தம்பி கவுண்டர்காடு மற்றும் தேத்தாகுடி தெற்கு ஆகிய பகுதிகளின் இரண்டு கிராம மக்கள் வழிபடும் அசகண்ட வீரன் கோயில் அதே பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலை கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலவாணன் என்பவர் நிர்வாகம் செய்து வந்துள்ளார். இதில், தேத்தாகுடி தெற்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும், கோயிலை நிர்வாகம் செய்து வந்த பொன்னம்பலவாணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சண்முகத்தின் மனைவி வனஜா தேத்தாகுடி தெற்கு கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பொன்னம்பலவாணன் மீது கோபத்தில் இருந்த சண்முகம் தன் மனைவியின் அதிகாரப் பலத்தை பயன்படுத்தி கடந்த 9-ம் தேதி ஊர் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது வீரன் கோயில் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கவே, அதற்கு பொன்னம்பலவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராமமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம நிர்வாகிகள் மேற்கண்ட மூன்று குடும்பத்தினரையும் ஊர்க் கட்டுப்பாடு போட்டு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஊர்க்கட்டுப்பாடு; ஒதுக்கப்பட்ட குடும்பம்! -தாயின் சடலத்தை வீட்டின் அருகில் புதைத்த மகன்

இவர்களோடு யாரும் கொடுக்கல் வாங்கலோ, உறவு வைத்து கொள்வதோ, பேசுவதோ கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் சொல்கின்றனர். மேலும், அதே பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியை நடத்திவரும் தலைமை ஆசிரியரான ராமமூர்த்தியின் பள்ளியில் யாரும் படிக்க குழந்தைகளை அனுப்பக் கூடாது என்றும், மளிகைக்கடை நடத்தி வரும் ராஜேந்திரனின் கடையில் யாரும் எந்தவிதமான பொருள்களும் வாங்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், இவர்கள் மூவரின் வீட்டிற்கும் வழக்கமாக முடிதிருத்த வருபவரையும் மிரட்டி போகக்கூடாது என்று கூறியுள்ளதாக முடி திருத்துபவரே கூறியுள்ளார.

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்

இதுபற்றி வேதாரண்யம் டி.எஸ்.பி சபியுல்லாவிடம் பேசினோம். "இது பங்காளிகளுக்குள் உள்ள தகராறு. ஊர் தள்ளி வைத்தல் போன்ற பிரச்னை அல்ல. கோயில் நிர்வாகப் பிரச்னைதான். இதனை வருவாய்த்துறையினர்தான் கையாள வேண்டும். இருதரப்பையும் அழைத்து அமைதிக் கூட்டம் நடத்தி, வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் சுமூக தீர்வு காணப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு