Published:Updated:

பண மோசடி வழக்கு: முன்ஜாமீன் மனு வாபஸ்! -முன்னாள் அமைச்சர், தன் கணவருடன் தலைமறைவு

`முன்ஜாமீன் கிடைத்துவிடும், அதன் பிறகு வெளியில் வரலாம்’ என்று நினைத்த சரோஜாவுக்கு, ஜாமீன் கிடைக்காமல் வாய்தா மேல் வாய்தாவாகக் கொடுக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைக் கோரலாம் என்று தாக்கல் செய்த மனுவை வாபஸ் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

வேலை வாங்கித் தருவதாக கூறி 15 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மூன்றாவது முறையாக விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை சரோஜாவின் வழக்கறிஞர் வாபஸ் வாங்கியிருக்கிறார்.

நாமக்கல் நீதிமன்றம்
நாமக்கல் நீதிமன்றம்
பண மோசடி வழக்கு: ஒத்திவைக்கப்பட்ட ஜாமீன் மனு விசாரணை! - முன்னாள் அமைச்சர் தலைமறைவு?!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவுக்கு எதிராக அவரின் உறவினரான குணசீலன் என்பவர், ராசிபுரம் காவல் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட், 28-ம் தேதி புகார் தெரிவித்திருந்தார்.

சத்துணவு அமைப்பில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 15 நபர்களிடம் ரூ.76,50,000 வசூலித்துத் தரச்சொல்லி பெற்றுக்கொண்டதோடு, அவர்களுக்கு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் சரோஜா ஏமாற்றிவிட்டதாகப் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குணசீலனின் புகார் அடிப்படையில், சரோஜா மீது 406, 420, 506/1 ஆகிய மூன்று பிவுகளின் கீழ், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் கடந்த 29-ம் தேதி தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், கடந்த 1-ம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது, விசாரணையைக் கடந்த 10-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 10 -ம் தேதி முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சரோஜா
சரோஜா

அப்போது அந்த மனு மீதான விசாரணையை 15-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இந்த நிலையில், சரோஜாவின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவரின் வழக்கறிஞர் அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் சரோஜாவும், அவரின் கணவரும் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. `எப்படியும் தங்களுக்கு முன்ஜாமீன் கிடைத்துவிடும், அதன்பிறகு வெளியில் வரலாம்’ என்று நினைத்த சரோஜாவுக்கு, ஜாமீன் கிடைக்காமல் வாய்தா மேல் வாய்தாவாகக் கொடுப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைக் கோரலாம் என்று நாமக்கல் மாவட்டத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். சரோஜாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருக்க, குணசீலன் தரப்பில் ஆட்சேபனை மனு கொடுத்ததுதான் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, குணசீலனிடம் பேசினோம்.

"போலீஸ் விசாரணைக்கு அழைத்தும் ஒரு முறைகூட அவர் ஆஜராகவில்லை. கணவரோடு சேர்ந்து செல்போன்களை ஆஃப் செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கிறார். ஆனால், கோர்ட் மூலம் ஜாமீன் வாங்க முயற்சி பண்ணினாங்க. ஆனா, நாங்க பிரைவேட்டா இந்த வழக்கில் ஆட்சேபனை மனு போட்டதால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனால், அந்த மனுவை இன்று வாபஸ் வாங்கிட்டாங்க. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சரோஜா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்படலாம்னு சொல்றாங்க. ஆனால், அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவிட மாட்டேன்" என்றார்.

குணசீலன்
குணசீலன்

இது குறித்து, சரோஜா, அவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்த நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அம்பிகாவதியிடம் பேசினோம். ``அவங்க மேல வழக்கு பதிவு செய்ததிலிருந்து அவங்க தலைமறைவாக இருக்காங்க. அவரை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் கொடுக்க நேராக அவரின் வீட்டுக்குப் போனோம். ஆனால், வீட்டில் யாரும் இல்லை. பூட்டியிருந்தது. அவர்கள் இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆஃபிலேயே இருக்கின்றன. முன்னாள் அமைச்சரையும், அவரின் கணவரையும் தீவிரமாகத் தேடிவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு