Published:Updated:

நெல்லையில் என்.ஐ.ஏ `திடீர்' சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

நெல்லை மாவட்டத்தில் இரு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய தேசியப் புலனாய்வு அமைப்பினர் சிம் கார்டுகள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அந்த நபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

NIA
NIA

ஐ.எஸ்.ஐ.எஸ், சிமி, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தொடர்புடன் ’அன்சாருல்லா’ என்ற அமைப்பு சர்வதேச அளவில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு ஐக்கிய அரபு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பில் தொடர்பு கொண்டிருந்ததாக இந்தியர்கள் உள்ளிட்ட 14 பேர் துபாயில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் மூன்று பேரிடம் காவல்துறை விசாரணை!

அவர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது டெல்லி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் மேலும் பலருக்குத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் கைதான ஒருவர் அளித்த தகவலின் பேரில் தென்காசியைச் சேர்ந்த கோழிக்கடை உரிமையாளரான அகமது சாலிஹ் என்பவர் கைது செய்யப்பட்டார். அத்துடன், தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவர் கைதானார். அவரது வீட்டில் ஜூலை மாதம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

NIA raid
NIA raid

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த திவான் முஜிபூர் என்பவரது வீட்டில் ஆறு பேர் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், அதிகாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் புளியங்குடியில் உள்ள அவரது உறவினர் வீட்டிலும் சோதனை நடந்தது.

திவான் முஜிபூர் 15 வருடங்கள் துபாயில் பணியாற்றி விட்டுக் கடந்த ஓராண்டாக புளியங்குடியில் பெயின்ட் கடையில் பணியாற்றி வருகிறார். அவர் துபாயில் பணியாற்றியபோது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததற்கான விவரங்கள் அங்கு கைதானவர்கள் அளித்த தகவல்கள் மூலம் தெரியவந்ததால் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

திவான் முஜிபூர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்திருப்பது தெரிகிறது.
தேசியப் புலனாய்வு முகமை

வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த திவான் முஜிபூர் வீட்டிலிருந்து மூன்று ஸ்மார்ட் போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு மற்றும் அவருக்குத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததற்கான ஏராளமான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு இருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். திவான் முஜிபூரை கொச்சிக்கு அழைத்துச் சென்றுள்ள அதிகாரிகள் அங்கு வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.