அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

நித்திய ‘தாண்டவம்’ - போலீஸ் கையில் லேப்டாப்... சிக்கப்போகும் வி.ஐ.பி-கள்!

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
நித்யானந்தா

லியானா

சர்ச்சை நாயகன் நித்யானந்தாவை குஜராத் காவல்துறையினர் வலைவீசி தேடிவரும் நிலையில், வீடியோ வழியாக சத்சங்கில் பேசி தன் பராக்கிரமங்களைப் பறைச்சாற்றிக்கொண்டிருக்கிறார் நித்தி. இன்னொரு பக்கம், நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட நித்தியின் லேப்டாப்பில் இருக்கும் புகைப்படங்கள் குறித்த தகவல்களால், அந்த மாநில வி.ஐ.பி-கள் பீதியில் இருக்கின்றனர்.

1,200 இடங்களில் சொத்து!

நாளொரு சேதியும் பொழுதொரு பீதியுமாக நித்தி பற்றி தகவல்கள் பரவும் நிலையில், கார்த்திகை தீபம் அன்று வீடியோவில் தோன்றினார் நித்யானந்தா. ‘‘இந்து சனாதன தர்மங்களை மீட்டெடுக்கவே கைலாசா அமைக்கப்படுகிறது. நான் இதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்; பல இன்னல்களையும் அனுபவித்துள்ளேன். இறைவன் அருளால் எனக்குத் தேவையான பொருளைச் சேர்த்துவிட்டேன். எனக்கு இப்போது இந்தியாவில் மட்டும் 1,200 இடங்களில் சொத்துகள் உள்ளன. ஆனால், அவற்றின் விவரத்தை இப்போது சொல்ல மாட்டேன்’’ என்று பேசியிருக்கிறார்.

``உண்மையில் நித்திக்கு இவ்வளவு சொத்துகள் இருக்கின்றனவா?’’ என்று அவருடைய முன்னாள் தனிச்செயலாளர் ஜனார்த்தன சர்மாவிடம் கேட்டால், ‘‘எனக்குத் தெரிந்து அவருக்கு 400-க்கும் அதிகமான இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவரின் தொழிலே அடுத்தவர் பணத்தைப் பறிப்பதும், சொத்துகளை அபகரிப்பதும்தான். ஆனால், 1,200 இடங்களில் சொத்துகள் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.

மா பக்தி பிரியானந்தா!
மா பக்தி பிரியானந்தா!

‘‘நித்யானந்தாவுக்கு, இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் நன்கொடையாக பல கோடி ரூபாயை வாரிக் கொடுத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய தொழிலதிபர் ஒருவரிடம், ஆலயம் எழுப்புவதற்கு நித்தி நிதி கேட்க, அவர் 15 லட்சம் அமெரிக்க டாலரை அனுப்பினார். ஆண்டுகள் பல கழிந்தும் எந்த ஆலயத்தையும் நித்யானந்தா எழுப்பவில்லை. உடனே பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார் அந்தத் தொழிலதிபர். தராமல் நித்தி இழுத்தடிக்க, அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெரிய சர்ச்சை கிளம்பும் எனத் தெரிந்ததும் பணத்தை ‘செட்டில்’ செய்திருக்கிறார் நித்தி.

இதேபோல் வெளிநாட்டுவாழ் இந்தியரான மனோஜ் திவாரி என்கிற ஆடிட்டரிடமும் கோயில் கட்டுவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் வாங்கியுள்ளார். கோயில் கட்டவில்லை எனத் தெரிந்து ஆடிட்டர் பணத்தைக் கேட்டதற்கு, ‘நான் எங்கே உங்களிடம் பணம் வாங்கினேன்? நித்யானந்தா பெயரில் உள்ள டிரஸ்ட்தான் வாங்கியிருக்கிறது. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என்று நழுவியுள்ளார். ஆடிட்டரும் வழக்கு ஆயுதத்தை கையில் எடுத்ததால் பணம் திரும்பக் கிடைத்தது.

ஹைதராபாத்தில் ராஜராஜேஸ்வரி ஆலயத்தை நித்தி கட்டியுள்ளார். அதற்காக பெரும்தொகை கொடுத்த தொழிலதிபர் குடும்பத்தையே, அந்தக் கோயிலுக்கு வரக் கூடாது என மிரட்டியதோடு, ‘கோயில் எனக்கு மட்டுமே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடியுள்ளார்’’ என்று நித்தியின் லீலைகளை அறிந்தவர்கள் கதை கதையாக விவரிக்கின்றனர்.

குஜராத்தில் சிக்கிய பெண் தொழிலதிபர்!

குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கலோரெக்ஸ் நிறுவனத்தின் அதிபர், மஞ்சுளா பூஜா ஷெராப். இவர் பெங்களூரில் உள்ள தோழி வீட்டுக்கு 2017-ம் ஆண்டு வந்திருந்தபோது, அந்தத் தோழி இவரை பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பத்து நாள் பயிற்சி முகாமில் மஞ்சுளா பங்கெடுத்துள்ளார். அதன் பிறகு நித்தியின் வாக்குதான் தனக்கு உயிர்மூச்சு என மதிமயங்கியுள்ளார்.

ரஞ்சிதா
ரஞ்சிதா

பெரும்செல்வமும் செல்வாக்கும் படைத்த மஞ்சுளா விடம், குஜராத் மாநிலத்தில் தனக்கு ஓர் ஆசிரமம் வேண்டும் என்று நித்யானந்தா தூண்டில் போட, ‘பரமசிவனே கேட்கும்போது மறுக்க மாட்டேன்’ என்று தான் நடத்திவந்த பப்ளிக் ஸ்கூல் கட்டடத்துடன் அந்த இடத்தை நித்தியின் ஆசிரமத்துக்குத் தாரைவார்த்துள்ளார். அப்படி உருவான நித்தி ஆசிரமத்தை, குஜராத் அரசு சில நாள்களுக்கு முன்பு மூடிவிட்டது. பிடதியிலிருந்து நித்தி வெளியேறிய பிறகு இங்கு சில நாள்கள் தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள் குஜராத் போலீஸார்.

மாடல் மா பக்தி பிரியானந்தா!

நித்யானந்தாவின் ஆஸ்தான பெண் சீடர்களில் முக்கியமானவர், மா பக்தி பிரியானந்தா. மாடலிங் துறையிலிருந்து சந்நியாசியாக மாறியவர். பெண் சந்நியாசியாக இவர் இருந்தாலும், அதிலும் மாடலிங்கைப் புகுத்தி நித்தியின் பல்வேறு லீலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார். யோகா ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என ‘பவர்ஃபுல்’ பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளார் நித்யானந்தா என்கிறார்கள். ‘‘நித்யானந்தா ஆசிரமத்துக்கு வரும் வி.ஐ.பி-கள், அங்கு சொல்லித்தரும் பயிற்சிகளை சில நாள்களில் கற்றுக்கொள்வார்கள். அவர்களிடம் நித்யானந்தா, ‘தொடர்ந்து இந்தப் பயிற்சியை உங்கள் வீட்டுக்கே வந்து நமது சந்நியாசிகள் சொல்லித் தருவார்கள்’ என்று நயமாகப் பேசுவார். வி.ஐ.பி-கள் வீட்டுக்கு மாடலிங் அழகியான பக்தி பிரியானந்தாவோடு மேலும் சில பெண் சீடர்களையும் அனுப்பி, யோகக் கலையைக் கற்றுத்தரச் சொல்வார். அப்படி கற்றும்தரும்போது தங்கள் வலையில் விழும் நபர்களைவைத்து, பல கோடி ரூபாய் மடத்துக்கு நன்கொடையாகப் பெற்று வந்துவிடுவார்கள்’’ என்கிறார்கள் ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள்.

லேப்டாப்பில் படங்கள்... படபடப்பில் வி.ஐ.பி-கள்!

குஜராத் மாநிலத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கடந்த மாதம் குஜராத் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது குழந்தை களை அனுமதியின்றி ஆசிரமத்தில் வைத்திருந்ததாக ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகிய இருவரை கைதுசெய்தது குஜராத் காவல்துறை. அத்துடன் அந்த ஆசிரமத்திலிருந்து லேப்டாப், டேப், செல்போன் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர் குஜராத் காவல்துறையினர். அந்த லேப்டாப்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளனவாம். குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற பல தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் பெண் சீடர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன.

நித்யானந்தா
நித்யானந்தா

இந்தத் தொழிலதிபர்களுக்கும் நித்யானந்தாவின் சீடர்களுக்கும் எந்த மாதிரியான தொடர்பு இருந்தது, யார் மூலம் இவர்கள் அறிமுகமானார்கள் போன்ற விவரங்களை குஜராத் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதை அடிப்படையாகவைத்தே அந்த இரண்டு பெண் ஆசிரம நிர்வாகிகளுக்கும் காவலை நீட்டித்தது குஜராத் நீதிமன்றம். ஏற்கெனவே பக்தி பிரியானந்தா தலைமையில் பெண் சிஷ்யைகளை வைத்து பல தொழிலதிபர்களை வழிக்குக் கொண்டுவந்தவர் நித்யானந்தா. இதனால், லேப்டாப்பில் யார் யாருடைய படங்கள் இருக்கின்றன என்ற அச்சம் பலருக்கும் எழுந்துள்ளது. ``கைது நடவடிக்கை நடந்த அன்றிரவே இந்த ஆதாரங்களை அழிப்பதற்காக குஜராத் காவல்துறையிடம் பெரும்தொகைக்கு பேரம் நடந்திருக்கிறது’’ என்கிறார்கள் நித்திக்கு எதிராக இப்போது பொங்கிவருபவர்கள்.

ஆண்களையும் விட்டுவைக்காத நித்தி!

நித்தி இரு பாலினச் சேர்க்கையாளர் என்ற குற்றச்சாட்டும் கிளம்பி புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகுமார் என்கிற இளைஞர், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஆன்மிக வகுப்பில் சேரச் சென்றுள்ளார். பல ஆண்டுகள் துறவு நிலையில் இருந்து இப்போது வெளியுலகுக்கு வந்துள்ளார்.

அவர் இப்போது, ‘‘என்னைப் போன்ற பல ஆண் சீடர்களையும் அவர் உறவுக்கு அழைப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘சிவனும் நானே, சக்தியும் நானே’ என்பதுதான். ‘நான் சக்தியாக மாறி உன்னுடன் கலக்கப்போகிறேன்’ என்று வார்த்தை ஜாலத்தால், பல ஆண் சீடர்களையும் தன் வலையில் வீழ்த்தியுள்ளார். அவர் எனக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன’’ என்று அதிரவைக்கிறார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், நித்யானந்தாவின் வெளிநாட்டு ஆண் சிஷ்யர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ‘தர்ம யோதா’ என்ற பெயரில் நித்யானந்தாவுக்கு எதிராக பல ஆதாரங்களை வெளியிட்டுவருகிறார்.

ராஜமாதா ரஞ்சிதா!

நித்தியின் ஆஸ்தான பெண் சீடரான நடிகை ரஞ்சிதாவை `ராஜமாதா’ என்றே அனைவரும் அழைத்துள் ளனர். பிடதியைவிட்டு நித்தி சென்ற பிறகு, பிடதி ஆசிரமம் ரஞ்சிதா கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருந்துள்ளது. ``ஆசிரமத்தில் பதுக்கியிருந்த பணம், நகை போன்றவை ரஞ்சிதாவின் உத்தரவுப்படியே வெளியே கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ரஞ்சிதாவின் கண் அசைவு இல்லாமல் எந்தக் காரியமும் ஆசிரமத்தில் நடக்காது’’ என்கிறார் தஞ்சாவூர் விஜயகுமார்.

எங்கே நித்தி?

ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இல்லை என்று சொன்ன பிறகு, அவரைத் தேடும் படலம் வேகமெடுத்து ள்ளது. ஜனார்த்தன சர்மா தொடர்ந்த வழக்கு, டிசம்பர் 10-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘20-ம் தேதிக்குள் இரண்டு பெண்களையும் ஆஜர்படுத்த வேண்டும். நித்யானந்தாவிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், இந்தியாவைவிட்டு அவர் எப்படி வெளியே சென்றார் என்ற விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கடுமை காட்டியிருக்கிறார்.

போலீஸார் தரப்பில், ‘‘கரீபியன் கடலில் உள்ள ஒரு தீவில்தான் நித்யானந்தா இருக்கிறார். அவரது இணையத்தைவைத்து தேடுதல் வேட்டையை நடத்திவருகிறோம்’’ என்று மட்டும் சொல்லியிருக்கின்றனர்.

நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நித்யானந்தா தரப்பு கருத்தறிய அவரின் webmaster@nithyananda.org இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியிருக்கிறோம். வழக்கம்போல் பதில் இல்லை. அவர் பதில் தரும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

தலைக்கு மேலே தொங்குகிறது கத்தி... என்ன செய்யப்போகிறார் நித்தி?

அட்டை மற்றும் படங்கள்: www.nithyananda.org