Published:Updated:

`சூரியன் உதிப்பதை 40 நிமிடம் நிறுத்தினாரா நித்தியானந்தா?' - அடுத்த சர்ச்சையில் பிடதி ஆசிரமம்!

ந.பொன்குமரகுருபரன்

'தான் தியானம் முடிக்கும் வரை சூரியன் உதிக்கக் கூடாது' என உத்தரவிட்டதாக சாமியார் நித்தியானந்தா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

சர்ச்சையும் நித்தியானந்தாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஆகிவிட்டன. நித்தியானந்தா தியான பீடத்தின் நிறுவனரான இவர், நடிகை ரஞ்சிதாவுடன் இணக்கமாக இருந்தது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சட்டபூர்வமாக, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என நித்தியானந்தா அப்பிரச்னையை சமாளித்தார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இதைத் தொடர்ந்து, மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டன. இறுதியில், அவரை வாரிசு பொறுப்பில் இருந்து நீக்குவதாக தற்போதைய மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.

நித்தியானந்தா எது சொன்னாலும் அது வைரலாகி விமர்சனத்தை ஏற்படுத்திவிடுகிறது. தன் உருவத்தையே சிலையாக வடிவமைத்து, பக்தர்களை வணங்கச்செய்வதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ளும் நிலையில், பெங்களூரு அருகே பிடதியில் உள்ள தன் ஆசிரமத்தில் பக்தர்களோடு தினமும் உரையாடுவதை நித்தியானந்தா வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று, வைரலாகி இணையத்தைக் கலக்கிவருகிறது. அதில், “சூரிய உதயத்துடன்தான் நமது நாள் தொடங்குகிறது. இன்று எத்தனை பேர் கூர்ந்து கவனித்தீர்கள் எனத் தெரியவில்லை.. சூரியன், இன்று மிகத் தாமதமாகவே உதித்தது. இன்று காலை நான் தியானத்தை முடிக்க சிறிது காலதாமதம் ஆகிவிட்டது.

நித்தியானந்தா சிலை
நித்தியானந்தா சிலை

நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்கக் கூடாது என கட்டளையிட்டேன். அதன்படி இன்று சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாகவே உதித்தது. இன்று, பிடதியில் சூரியன் உதிக்கும் நேரத்தை நீங்கள் கூகுளில் தேடிப் பாருங்கள். அதில் குறிப்பிட்ட நேரத்தைவிட 40 நிமிடங்கள் தாமதமாகத்தான் சூரியன் உதித்திருக்கும். இதற்கு நான் உத்தரவிட்டதுதான் காரணம்” என்று பேசியுள்ளார். நித்தியானந்தா கூறியதைக் கேட்டதும் புல்லரித்துப்போன பக்தர்களும் பக்தைகளும் கைதட்டி ஆரவாரமிடுவதும் வீடியோவில் உள்ளது. நித்தியானந்தாவின் பேச்சை சூரியனே கேட்கும் நிலையில், கர்நாடகா, தமிழ்நாடு போலீஸார் கேட்காமல்போவதுதான் பரிதாபம்.