Published:Updated:

`கைலாசம் அமைத்துக் கொடுத்ததே மதுரை மீனாட்சிதான்!' - நித்யானந்தாவின் அடுத்த அதிரடி

நித்யானந்தா
நித்யானந்தா

திருவண்ணாமலையில் உள்ள ஒரு மலையில் இரும்புக் கொட்டகைதான் எனது முதல் இருப்பிடம். ஒன்றரை ரூபாய் பணம் கொடுத்தால் ஹீலிங் செய்ய சைக்கிளில் அமர்ந்து செல்வேன்.

``என்னைத் தொந்தரவு செய்யாமல் விட்டிருந்தால் திருவண்ணாமலையில் ஒரு சாதாரண சாமியாராக மட்டுமே இருந்திருப்பேன். என்னைத் துரத்தி துரத்தி என்னை இவ்வளவு பெரிய ஆளாக மாற்றிவிட்டீர்கள்” என்கிறார் சாமியார் நித்யானந்தா.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

கரீபியன் கடலில் தனியாக ஒரு தீவை வாங்கி அதை இந்துக்களின் நாடாக அறிவிக்க இருக்கிறார் நித்யானந்தா. இந்தத் தகவல் இந்திய ஊடகங்களுக்குத் தெரிந்து பெரும் விவாதங்களே ஒருபுறம் நடந்துவருகிறது. மற்றொருபுறம் நித்யானந்தாவிடம் ஐக்கியமாகியுள்ள எனது இரண்டு மகள்களை மீட்டுத் தாருங்கள் என்று நீதிமன்றத்திலும் அரசாங்கத்திடமும் மன்றாடிவருகிறார் நித்யானந்தாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஜனார்த்தன சர்மா.

நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டிருந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்த நித்யானந்தாவின் ஆசிரமம் மற்றும் பள்ளிக்குப் பூட்டு போட்டுவிட்டது அந்த மாநில அரசு. அதேபோல் நித்யானந்தாவின் தலைமைப் பீடமாகக் கருதப்படும் கர்நாடகாவிலுள்ள பிடதி ஆசிரமத்தில் ஏற்கெனவே காவல்துறையினர் சோதனை நடத்திச் சென்றிருக்கும் நிலையில் விரைவில் பிடதி ஆசிரமத்தை முடக்கும் முடிவை அரசு கையில் எடுக்க உள்ளதாகக் கர்நாடக மாநிலத்திலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

`நீங்கள் சொல்லித்தான் என்கவுன்டர் நடந்ததே தெரியும்!'-போலீஸ் நடவடிக்கையால் கலங்கும் நால்வர் குடும்பம்

ஆனால், இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம்போல தன் பக்தர்களுக்கு சமூக வலைதளங்களின் வழியாக சத்சங் உரையை நிகழ்த்திவருகிறார் நித்யானந்தா. ஆன்மிக உரையின் இடையே தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் பதில் அளித்துவருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோவில் உரையாற்றும்போது, ``நான் ஒரு புறம்போக்கு, ஒரு பரதேசி, என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். இந்நிலையில் டிசம்பர் 5-ம் தேதி அன்று மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா. நித்யானந்தாவின் வளர்ச்சி பற்றி பலரும் பல்வேறுவிதமான கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

அதற்கு அவரது தரப்பின் பதிலை அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். ``நான் 20 வயதிலே தீட்சிதையைப் பெற்று ஆன்மிகப் பணிக்கு வந்துவிட்டேன். திருவண்ணாமலையில் உள்ள ஒரு மலையில் இரும்புக் கொட்டகைதான் எனது முதல் இருப்பிடம். ஒன்றரை ரூபாய் பணம் கொடுத்தால் ஹீலிங் செய்ய சைக்கிளில் அமர்ந்து செல்வேன். திருவண்ணாமலையில் நான் ஹீலிங் செய்ததை அறிந்து பெங்களுருக்கு ஒரு தம்பதி என்னை அழைத்துச் சென்று ஹீலிங் சிகிச்சை செய்யச் சொன்னார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த ஊதியம் 101 ரூபாய். அதுவே எனக்கு போதும் என்கிற நிலைதான் இருந்தது.

வீடியோவில் பேசும் நித்யானந்தா
வீடியோவில் பேசும் நித்யானந்தா

குழந்தை இல்லாத தம்பி ஒன்று என்னிடம் ஆசி பெற்றனர். அவர்கள் கொண்டுவந்த அன்னாசிப்பழத்தை நான் ஆசீர்வதித்துக் கொடுத்தேன். அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. உடனே ஜூனியர் விகடன் என்னை விமர்சித்துக் கட்டுரை எழுதியது. இது நடந்த ஆண்டு 2003. அது முதல் என்னைத் தொடர்ச்சியாக ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

என்னை அண்ணாமலை ஆலயத்துக்குள்ளே விட மறுத்தார்கள். நான் மதுரை மீனாட்சியிடம் ``மீனாட்சி... மீனாட்சி என்றேன்” அம்மா உடனே, ''என்னாச்சு... என்னாச்சு தம்பி'' என்று கேட்டாங்க. கோயிலுக்குள்ள விடமாட்டேங்கிறாங்கன்னு சொன்னேன். அதுகென்ன கோயில்கட்டித் தர்றேன்னு சொன்னாங்க. அதே மாதிரி ஆதீனத்துக்குள் விட மறுத்தாங்க.

நான் மீனாட்சியிடம் முறையிட்டேன். உடனே உனக்கு ஆதீனம் கட்டித் தர்றேன்னு சொன்னாங்க. என்னுடை பாஸ்போர்ட்டை முடக்கியது அரசு. நீதிமன்றம் உத்தரவிட்டும் எனது பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துத் தர மறுத்துவிட்டார்கள். நான் மீண்டும் மதுரை மீனாட்சியிடம் முறையிட்டேன்.

“பாஸ்போர்ட்டைத் தரமாட்டேங்கிறாங்க என்றேன். ``அதுக்கென்ன விடுடா தம்பி, பார்த்துக்கலாம்னு சொன்னாள். அவ்வளவுதான் கைலாசம் அமைந்துவிட்டது. இதற்கு நான் என்ன சொல்வது?” என்று சொல்லி சிரிக்கிறார். அதாவது, தனி கைலாஷ நாடே மதுரை மீனாட்சி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் என்று அந்த வீடியோவில் பரபரப்பாகப் பேசியிருக்கிறார்.

நித்யானந்தா
நித்யானந்தா

என்னை திருவண்ணாமலையிலோ, மதுரையிலோ இருக்கவிட்டிருந்தால் இந்த நிலைக்கு நான் வந்திருக்க முடியுமா? என்னை நீங்கள் அடிக்க அடிக்க நான் வளர்ந்துகொண்டே செல்கிறேன்" என்று அரசுக்கே சவால்விடும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார். நித்யானந்தாவின் வீடியோக்கள் இப்போது சமூக வளைதளங்களில் வைரலாகிவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு