Published:Updated:

ஊட்டி: ஆபாச சைகை காண்பித்த அ.தி.மு.க பிரமுகரின் மகன்! - மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அ.தி.மு.க பிரமுகர்  ‌கோபால கிருஷ்ணன் மகன்
அ.தி.மு.க பிரமுகர் ‌கோபால கிருஷ்ணன் மகன்

ஊட்டியில் பணியில் இருந்த காவலர்களிடம், ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் ஒருவர் ஆபாச சைகை காண்பித்த சம்பவம் காவலர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி ஏ.டி.சி பகுதியில் காவல்துறையினர் நேற்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். முகக்கவசம், சீட் பெல்ட் போன்றவற்றின் அவசியம் குறித்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்திவந்திருக்கின்றனர்.

வாகன சோதனை
வாகன சோதனை

அப்போது அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்ட, ஒற்றை இலக்க எண்ணைக்கொண்ட கார் ஒன்று எட்டின்ஸ் சாலையிலிருந்து வந்திருக்கிறது. காரை இயக்கிய இளைஞரும், அருகில் அமர்ந்திருந்த மற்றொரு நபரும் முகக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் இருந்திருக்கிறார்கள். மேலும், சர்க்கிளில் ராங்க் ரூட்டில் செல்லவும் முயன்றிருக்கிறார்கள்.

எனவே, காவல்துறையினர் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர். வாகனத்தை நிறுத்தாமல் சென்ற‌ அந்த இளைஞர், காவல்துறையினரைப் பார்த்து தனது கை விரலை உயர்த்தி ஆபாச சைகையைக் காண்பித்திருக்கிறார். பணியில் இருந்த சக காவல்துறையினர் தங்களது மொபைல்போனில் அதை வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க பிரமுகர்  ‌கோபால கிருஷ்ணன் கார்
அ.தி.மு.க பிரமுகர் ‌கோபால கிருஷ்ணன் கார்

அந்த வீடியோ காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக வாகனத்தை நிறுத்திய காவலர், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரில் வந்தது ஊட்டி நகராட்சியின்‌ முன்னாள் துணைத் தலைவரும், ஊட்டியில் உணவகம் நடத்திவரும் அ.தி.மு.க பிரமுகர் ‌கோபால கிருஷ்ணனின் மகன் என்பது தெரியவந்திருக்கிறது.

அ.தி.மு.க பிரமுகர்  ‌கோபால கிருஷ்ணன் மகன்
அ.தி.மு.க பிரமுகர் ‌கோபால கிருஷ்ணன் மகன்

இது குறித்து நம்மிடம் பேசிய காவலர் ஒருவர்,``நேத்து ஒரு‌ 12 மணி இருக்கும். அந்த வண்டி வந்துச்சு. உள்ளூர் வண்டிதான் சார். எங்களுக்கும் நல்லாத் தெரியும். நாங்களும்‌ எதுவும் தப்பா சொல்லை. ரோடு ரூல்ஸ மீறாம லெஃப்ட்ல டர்ன் பண்ணச் சொன்னோம். அதுக்கு கோபால கிருஷ்ணன் மகன் எங்களைப் பார்த்து ஆபாசமா கையைக் காமிச்சிட்டுப் போறாரு. நல்ல வேளையா வீடியோ எடுத்தோம்" என்றார்.

நீலகிரி: சுற்றுலாத் தலங்கள் எதுவும் திறக்கப்படாது... இ-பாஸ் கட்டாயம்! - ஆட்சியர் அதிரடி

ஊட்டி நகராட்சியின்‌ முன்னாள் துணைத் தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ``நான் அந்த சமயத்துல கார்ல இல்லை. இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. பையனோட ஃபிரெண்ட்ஸ் திருப்பூர்லருந்து வந்திருக்காங்க. அவங்களை வெல்கம் பண்ணக் கையைக்‌ காமிச்சிருக்காப்ள. என்னோட நேமை டேமேஜ் பணறதுக்கு போலீஸ் பேரைச் சொல்லி யாரே மிஸ்யூஸ் பண்ணிட்டாங்க" என முடித்துக்கொண்டார்.

அ.தி.மு.க பிரமுகர்  ‌கோபால கிருஷ்ணன் கார்
அ.தி.மு.க பிரமுகர் ‌கோபால கிருஷ்ணன் கார்

இது குறித்து நீலகிரி மாவட்ட எஸ்.பி சசிமோகன் கூறுகையில், ``ஊட்டியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த காவலர்களிடம் காரில் வந்த நபர் ஒருவர் ஆபாச சைகை காண்பித்திருப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.

இந்நிலையில் அந்த இளைஞர் ஸ்ருஜித் கிருஷ்ணாமீது ஊட்டி பி.1 காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு