Published:Updated:

`ஆர்ப்பாட்டத்துக்காக மாணவர்கள் கடத்தல்?' - நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகியைச் சுற்றும் சர்ச்சை

மாணவர்கள் கிடைத்ததும் கட்டி அணைத்து கதறி அழும் தாய்
மாணவர்கள் கிடைத்ததும் கட்டி அணைத்து கதறி அழும் தாய்

`ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதற்காக மாணவர்களை அழைத்துச் செல்கிறேன்'.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழக்குடியில், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகள் அருகருகே உள்ளன. இன்று காலை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவ மாணவிகளைச் சிலர், ஒரு காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பெற்றோருக்குத் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் விவரத்தைக் கூறினர். இதையடுத்து, அனைத்து வகுப்புகளிலும் வருகைப் பதிவேடு சரிபார்க்கப்பட்டது. அதில், தொடக்கப்பள்ளியில் 5 மாணவர்களையும் உயர்நிலைப் பள்ளியில் 2 மாணவர்களையும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், கொடிகட்டிய காரில் மாணவர்களைக் கடத்திச்சென்றதாக தகவல் வெளியானது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியை அழைத்துவந்த போலீஸ் வாகனம் முற்றுகை
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை அழைத்துவந்த போலீஸ் வாகனம் முற்றுகை

உடனே, தாழக்குடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சிலர் போன் செய்து பேசினர். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தோவாளை ஒன்றிய நிர்வாகி ராகுல் என்பவருக்கு போன் செய்து பேசியுள்ளனர். அப்போது அவர், ``ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அதற்காக மாணவர்களை அழைத்துச்செல்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ஆரல்வாய்மொழி போலீஸார் நாகர்கோவில் ஹைவே பேட்ரல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஹைவே பேட்ரல் போலீஸார், ராகுலின் காரை நிறுத்தி, அதில் இருந்த மாணவர்களை மீட்டு, போலீஸ் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வந்ததும் குழந்தைகளைக் கட்டியணைத்து பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராகுலை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது பள்ளி முன்பு திரண்டிருந்த பெற்றோர், `குழந்தைகளைக் கடத்திச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என போலீஸ் வாகனத்தை வெளியே விடாமல் பள்ளி கேட்டை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாணவன் கிடைத்ததும் கட்டி அணைத்து கதறி அழும் தாய்
மாணவன் கிடைத்ததும் கட்டி அணைத்து கதறி அழும் தாய்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராகுலிடம் பேசினோம், ``ஆர்ப்பாட்டத்துக்காக மாணவர்களை அழைத்துச்சென்றதை அப்பகுதியினர் பார்த்தனர். என்னை அங்குள்ள எல்லோருக்கும் தெரியும். நான் அழைத்துச்சென்றேன் எனத் தெரியவந்தால் பெற்றோர் அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால், சிலர் வேண்டுமென்றே திரித்துக் கூறியதால் ஏற்பட்ட பிரச்னை இது" என்றார். தாழக்குடி பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த பிரச்னை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு